ஏடுகொண்டலவாடா… ஆமென்! ஆன்மீகத்தை நாடும் அஜீத் விஜய்!
அஜீத் இன்று திருப்பதிக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்திருக்கிறார். தன் படங்கள் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் அஜீத் திருப்பதிக்கும் விஜய் வேளாங்கண்ணிக்கும் சென்று வழிபடுவது வழக்கம்.
முன்பெல்லாம் விஜய் வேளாங்கண்ணிக்கு சென்று முழங்காலிலேயே சில மீட்டர்கள் தூரம் நடந்து செல்கிற வழக்கத்தை வைத்திருந்தார். அதற்கப்புறம் அவரால் நிம்மதியாக பிரார்த்தனை கூட செய்ய விடாமல் ரசிகர்கள் திரண்டு அன்பு செலுத்துவது வாடிக்கையாகிவிட, தன் வேளாங்கண்ணி பயணத்தை வேறு மாதிரி வடிவமைத்துக் கொண்டார் அவர்.
நள்ளிரவில் யாரும் எதிர்பாரா விதத்தில் கோவிலுக்குள் நுழைந்து பிரார்த்தனை செய்வதை இப்போதும் வழக்கமாக வைத்திருக்கிறார். ஒவ்வொரு பட ரிலீசின் போதும் இந்த வழக்கத்தை அவர் விடுவதேயில்லை. கோவிலின் கதவுகள் அவருக்காக திறந்தேயிருக்கிற நேரத்தில் காரை பிரதான வாசலருகே கொண்டு சென்று அப்படியே தாண்டி குதித்து உள்ளே சென்றுவிடும் அவர், ரசிகர்கள் அடையாளம் கண்டு ஆரவாரம் செய்வதற்குள் வெளியேறிவிடுவாராம். பெரும்பாலும் ஊர் அடங்குகிற நேரத்தில்தான் இந்த தரிசனத்தை மேற்கொள்ள முடிகிறது அவரால்.
அஜீத்தின் கடவுள் பக்தி இன்னும் ஒரு படி மேல். எப்படியென்றால், அவர் ஒரு காலத்தில் பொருளாதார சிரமத்தில் இருந்தாரல்லவா? அப்போது கூட கடன் வாங்கி திருப்பதி உண்டியலில் காணிக்கையை நிறைவேற்றிவிடுவாராம். அவரும் தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத ஆரம்ப நாட்களில் சென்னையிலிருந்து நடந்தே திருப்பதிக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்திருக்கிறார்.
தனது படங்களின் தொடர் வெற்றிக்காக திருப்பதி செல்லும் அஜீத், கடந்த முறை அதே திருப்பதியில் மொட்டை அடித்துக்கொண்டார் என்பதையும் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.
இவர்கள் இருவருக்குமே இறைவன் புறத்திலிருந்து இன்பம் மட்டுமே ஆறாக சுரக்கட்டும்… ஆமென்!