அஜீத் விஜய் இணையும் படம்…. சாத்தியம் இருக்கிறதா? ஒரு வியாபார அலசல்!
எந்த புண்ணியவானின் வேலையோ, கடந்த சில நாட்களாகவே அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்றொரு செய்தி இணைய உலகத்தின் கழுத்தை இறுக்கி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அண்டங்காக்காவுக்கு தங்க மூக்குன்னு சொன்னால் கூட, ‘இருக்கும்… இருக்கும்…’ என்று ரசிக்கிற மனநிலை வந்துவிட்டது மக்களுக்கு. அது போல் இந்த செய்தியையும் கதகதப்பாக ரசித்து, பரபரப்பாக பற்ற வைத்துக் கொண்டிருக்கிறது அதே மக்கள் மனசு.
இந்த படத்திற்கு வெங்கட் பிரபு கதை எழுதுவதாகவும், ஆனால் அதை அவர் இயக்காமல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாகவும் மேலும் மேலும் திரைக்கதையில் ஏழு வர்ண கலர் அடித்துக் கொண்டிருக்கும் இவர்களால் என்ன நடந்துவிடப் போகிறது? இதற்கு அஜீத்தும் விஜய்யும் சம்மதித்தால் கூட தயாரிப்பாளர் வேண்டுமே? அப்படி தயாரிப்பாளர் வந்து பணத்தை கோடி கோடியாக கொட்டினாலும், போட்ட பணத்தை எடுக்கிற வாய்ப்பு இல்லையென்றால் எதற்கு கொட்டுவானேன் என்கிற எண்ணம் அந்த தயாரிப்பாளருக்கு வருமா? வராதா? இப்படியெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் நம்மை மிரட்டியடிக்க, இதெல்லாம் சாத்தியம்தானா என்கிற கேள்வியோடு கோடம்பாக்கத்தின் ஜாம்பவான்கள் சிலரை தொடர்பு கொண்டோம்.
முதலில் பட்ஜெட்டிலிருந்தே ஆரம்பித்தார்கள் அவர்கள். இன்றைய தேதிக்கு அஜீத் இருபத்தைந்து கோடியும், விஜய் அதில் ஒன்றோ ரெண்டோ குறைத்தும் வாங்குகிறார்கள். ஆளுக்கு இருபத்தைந்து என்றே வைத்துக் கொள்வோம். அதுவே ஐம்பது கோடி. அதற்கப்புறம் இவர்கள் இருவருக்கும் இரண்டு ஜோடிகள் வேண்டும். நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா என்று யாரிடம் போனாலும் அது ஒரு சில கோடிகளில் முடியும். அதற்கப்புறம் படத்தில் இடம் பெறும் காமெடியன், சப்போர்ட்டிங் கேரக்டர் என்று அது ஒரு ஐந்து கோடி. ஒளிப்பதிவாளருக்கு இரண்டு கோடி, இசையமைப்பாளருக்கு இரண்டரை கோடி என்று பார்த்தால் இந்த சம்பளமே அறுபது கோடிக்கும் மேலாகிவிடும்.
முருகதாசுக்கு டைரக்ஷன் செய்வதற்கான சம்பளம் பத்து கோடி, (மற்ற படங்களுக்கு அவ்வளவுதான் வாங்குகிறார் அவர்) கதை எழுதிய வெங்கட் பிரபுவுக்கு ஐந்து கோடி என்றால் அதையும் சேர்த்து எழுபத்தைந்து.
அறுபது நாட்கள் படப்பிடிப்பு என்றால் கூட, அந்த செலவிலேயே ஆறு கோடி சுளையாக போய்விடும். போஸ்ட் புரடக்ஷன், விளம்பர செலவு என்று கணக்கில் எடுத்தால் அதையும் சேர்த்து படம் தியேட்டருக்கு வருவதற்கே 100 கோடிக்கும் மேலாகிவிடும்.
தமிழ்நாடு, மற்றும் ஓவர்சீஸ் தவிர வேறு மொழி மார்க்கெட் இருவருக்குமே இல்லை. இந்த நிலையில் அஜீத் படம் தனியாக அறுபது கோடி வியாபாரம் ஆகும். விஜய் படம் தனியாக அறுபது கோடி வியாபாரம் ஆகும். இருவரையும் சேர்த்தால் அந்த கூட்டலில் இன்னும் பத்து கோடி அதிகரிக்குமே தவிர கூடுவதற்கு சாத்தியமில்லை. அப்படி ஒருவேளை இந்த படம் 150 கோடிக்கு வியாபாரம் ஆனால் கூட, இங்கிருக்கும் தியேட்டர்கள், மற்றும் இதர கலெக்ஷன்களை சேர்த்தால் இந்த 150 ஐ மீட்டெடுக்க வழியே இல்லை.
பணம் வராவிட்டாலும் பரவாயில்லை. பெருமைக்கு பட்டு வேட்டி கட்டுவோம் என்று யாராவது தயாரிப்பாளர் கிளம்பி வந்தால் இந்த படம் உருவாகலாம். அதற்கு பணம் படைத்தவர்களின் தாராள மனசு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் படம் திரைக்கு வருகிற நாளில் இரு பெரும் ஹீரோக்களின் ரசிகர்கள் அமைதியாக படம் பார்த்துவிட்டு கலைவது. அதற்கெல்லாம் சாத்தியமேயில்லை என்பதைதான் கடந்த கால நக்கல்களும் நையாண்டிகளும் காட்டி வருகின்றன.
எனவே இந்த படத்தின் முயற்சிக்கு ஆரம்பத்திலேயே ஒரு 144 விழுந்தால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.