அஜீத் விஜய் மாதிரிதான் அதர்வாவும்! ஏ.ஆர்.முருகதாஸ் சர்டிபிகேட்!
‘ஈட்டி’ படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வாவின் ஏரியா பிசியோ பிசி. தினத்தந்தி குருவியாரிடம் கன்னியாக்குமரியிலிருக்கும் கடைசி தமிழன் கூட “அதர்வா நடிக்கிற படம் அடுத்ததா எப்பங்க வருது?” என்றெல்லாம் கடுதாசி எழுதி கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை. “என்னோட அடுத்தப்படம் கணிதன்” என்று அதர்வாவும் போகிற இடத்திலெல்லாம் பெருமையோடு சொல்லிக் கொள்கிற மாதிரியான படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது அது.
பிரபல ட்ரம்ஸ் மேதை சிவமணி இசையமைக்க, ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் டி.என்.சந்தோஷ் இயக்கியிருக்கிறார். அதர்வாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்திருக்கிறார். தன் உதவியாளர்களுக்கெல்லாம் சமயம் பார்த்து பட வாய்ப்புகள் வாங்கிக் கொடுக்கிற விஷயத்தில், முருகதாஸ் ஒரு முருகக்கடவுளேதான்! துப்பாக்கி சமயத்திலேயே தாணுவிடம் இந்த சந்தோஷ் பற்றி எடுத்துக் கூறி கணிதன் படத்தை பெற்றுக் கொடுத்தவரும் அவரே.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை வெளியிட, ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் தன் சிஷ்யனை வாழ்த்தி முருகதாஸ் பேசுகையில்,
“நான் இயக்கிய துப்பாக்கி படத்தை எஸ்.தாணு தயாரித்தார். அந்த படம் வெளியானபோது நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. அதன்பிறகு கத்தி படத்தை இயக்கினேன். ஒரு கத்தியைத்தான் எடுத்தேன். ஆனால் அந்த படத்துக்கு எதிராக நூறு கத்திகள் வந்தன. சென்னையில் அந்த படத்தை திரையிட்ட ஒரு தியேட்டரில் குண்டு வெடித்தது. இதனால் கத்தி படம் வருமா? வராதா? என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது தாணு சார்தான் உதவினார். தற்போது என்னிடம் பணியாற்றிய சந்தோஷை கணிதன் படம் மூலம் டைரக்டராக்கி இருக்கிறார். துப்பாக்கி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய எல்லோரும் டைரக்டர்கள் ஆகிவிட்டனர்.
அதர்வா புதுமுக டைரக்டர்கள் படங்களில் நடிக்கிறார். கதாநாயகர்கள் சிக்ஸ்பேக் உடற்கட்டில் வருவது, காலை 9 மணிக்கே படப்பிடிப்புக்கு வருவதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. நல்ல கதைகளை கண்டு பிடித்து நடிக்க வேண்டும். அதுதான் பெரிய விஷயம். அதர்வா சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். எனக்கு தெரிந்த வரை விஜய், அஜித் இருவரும்தான் அதிகமான புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்துள்ளனர். ஹீரோக்கள் அனைவருமே நிறைய புது இயக்குனர்களை அறிமுகப்படுத்த வேண்டும். அதுதான் என் வேண்டுகோள்” என்றார்.
(ஆனால் முருகதாஸ் மட்டும் பெரிய ஹீரோக்களை வச்சுதான் படம் எடுப்பார். புதியவர்களை அறிமுகப்படுத்த மாட்டார். என்னண்ணே லாஜிக் இது?)