எல்லா ஹீரோக்களும் ரஜினியை பின்பற்றணும்! பிரபல விநியோகஸ்தர் புலம்பல்!
‘அட்சதை ஒரு கையில்… அருவா இன்னொரு கையில்’ என்று அந்நியன் விக்ரம் போல உலவும் அநேகம் பேரால், ஒவ்வொரு சினிமா ரிலீசும் ஒரு நரபலி சாமியாரின் ரத்த வெறிக்கு சிக்கிய உயிருள்ள ஜீவன் போலவே துடிக்கிறது. இதில் டாப் ஹீரோ, சுமார் டாப் ஹீரோ, சும்மாச்சும் ஹீரோ என்று எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிலைமைக்கு யார் காரணம்? படம் எடுப்பவரா, படத்தில் நடிப்பவரா, அல்லது படத்தை வெளியிடுகிற குழுவா? இந்த கேள்வியை ஆபரேஷன் பண்ணினால், எலும்பும் துண்டுமாக என்னென்னவோ கிடைக்கும். சரி.. அதை விடுங்கள். இந்த நேரத்தில் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியன் ஒரு படுபயங்கரமான யோசனையை இன்டஸ்ட்ரிக்கு வழங்கியிருக்கிறார்.
இதெல்லாம் நடக்குமா? அல்லது நடக்கதான் விடுவார்களா என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் கேட்க சுகமாகதான் இருக்கிறது.
அவர் சொன்னது அப்படியே இங்கே-
இன்றைக்கு சினிமா அதலபாதளத்தை நோக்கி செல்வதற்கு ஹீரோக்களின் சம்பளமும் பெரிய காரணமாக இருக்கிறது. முப்பது கோடி… நாற்பது கோடி… என்று படம் வெளியாவதற்கு முன்பே வாங்கிடுறாங்க. இதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்களும் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்தான். முன்பெல்லாம் ரஜினி சார் என்ன செய்வார் தெரியுமா? அவருடைய சம்பளத்திற்கு பதிலாக என்எஸ்சி ஏரியாவை வாங்கிக் கொள்வார். அதில் ஐந்து கோடி வசூலானாலும் சரி. ஐம்பது கோடி வசூலானாலும் சரி. அதுதான் அவருடைய சம்பளம். படமும் ஓடணும். நாமளும் பிழைக்கணும் என்கிற அக்கறை இந்த காலத்தில் எந்த ஹீரோவுக்கும் இல்லை. இது வருந்தத்தக்கது. உடனே மாற்றப் பட வேண்டியது. இதுதான் திருப்பூராரின் வேண்டுகோள். விண்ணப்பம். கெஞ்சல். அதட்டல். இத்யாதி இத்யாதி…
யாருக்காவது கேட்ருக்கும்னு நினைக்கிறீங்க?