எல்லாம் எனக்கு ரஜினி சார் கொடுத்ததுதான்- கிருமி தயாரிப்பாளர் ஜெயராமன்
JPR பிலிம்ஸ் கோவை வழங்கும் ‘கிருமி’ படம் இம்மாதம் வருகிற 24-ஆம் தேதி வருகிறது.
இப்படத்தில் ‘மதயானைக்கூட்டம்’ படத்தில் நாயகனாக நடித்த கதிர் கதாநாயகனாக நடித்துள்ளார். ரேஸ்மி மேனன்தான் நாயகி. சார்லி, வனிதா, தென்னவன், யோகி பாபு, டேவிட் சாலமன், தீனா, ‘நான்மகான் அல்ல’ மகேந்திரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் பி.சி.ஸ்ரீராமின் மாணவர். கே இசை அமைத்திருக்கிறார்.
அனுசரண் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் திரைப்படம் சார்ந்த படிப்பை முடித்ததுடன் பல குறும்படங்கள் ,மியூசிக் வீடியோக்கள் இயக்கியுள்ளார்.
‘கிருமி’ படம் பற்றி இயக்குநர் கூறும் போது “இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் உருவாகியுள்ள படம். நல்ல வேலைக்காகக் காத்திருக்கும்.கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு திறமைசாலி இளைஞனுக்கு நடக்கும் சில சம்பவங்கள். அவன் கடந்து போகும் சில அத்தியாயங்கள்தான் கதை. நாயகியும் நடுத்தர வர்க்கம்தான். அவள் வேலைக்குப் போகிறாள்.
‘கிருமி’ என்று நான் சொல்வது இன்று சமுதாயத்தில் இந்த அமைப்பில் பரவி இருக்கும் ஒரு பிரச்சினையைத்தான்.அது என்னவென்று படம் பார்த்தால் புரியும்”என்கிற அனுசரண், “சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தத்துக்கு நெருக்கமான விதத்தில் படம் உருவாகி இருக்கிறது. நமக்கு நடப்பதைப் போல எல்லாரையும் உணர வைக்கும் கதையாக இது இருக்கும். தொழில்நுட்பரீதியிலும் நேர்த்தியான படமாக இருக்கும்”என்றும் கூறுகிறார் .
படத்தில் 5 பாடல்கள். இதுவரை 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
தன் நண்பர்கள் கே. ஜெயராமன், எல்.பிருத்திவிராஜ், எஸ். ராஜேந்திரன் ஆகியோரை இணைத்துக் கொண்டு தயாரித்திருக்கிறார் ‘ரஜினி’ ஜெயராமன்.
தயாரிப்பாளரான அனுபவம் பற்றி ‘ரஜினி’ ஜெயராமன் கூறும் போது. “இது எங்கள் முதல் முயற்சி. கதை பிடித்திருந்தது. இந்தக் காலத்துக்கும் ஏற்றமாதிரி இருந்தது. படம் தயாரிப்பது பற்றி ரஜினி சாரிடம் கூறினேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் இல்லாமல் எனக்கு எதுவும் இல்லை. இந்தப் பெயர், முகவரி அவர் கொடுத்ததுதான். நல்லா பண்ணு இந்தக்காலத்துக்கு ஏற்றமாதிரி படம் இருக்கட்டும் செலவு செய்வதில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறி. வாழ்த்தினார். ” என்றவர் இன்னொன்றையும் கூறினார்.
“நான் அவருடன் 24 ஆண்டுகள் கூடவே இருந்திருக்கிறேன். அது மறக்க முடியாத காலங்கள். அவர் சிங்கப்பூரிலிருந்து உடல் நிலைசரியாகி வந்த போது இடையில் எனக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததைக் கேள்விப்பட்டு அங்கிருந்து வந்ததும் முதலில் கூப்பிட்டது என்னைத்தான். அவர் வந்தவுடன் என்னைக் கூப்பிட்டதும் எனக்கும் அழுகை வந்து விட்டது. எதுவும் பேசத் தோன்ற வில்லை. என்னைப் பார்த்ததும் அவரும் கண் கலங்கி விட்டார்.அவர் ஆசியும் அன்பும் எனக்கு என்றும் உண்டு.” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
‘கிருமி’ வரும் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தலைவரின் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.