வெற்றியோ, தோல்வியோ அது வடிவேலுக்காச்சு…! திக்கும் தெனாலி கோஷ்டி
இன்று தமிழகத்தில் சுமார் 350 தியேட்டர்களில் ரிலீசாகிவிட்டது தெனாலிராமன். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் வடிவேலுவின் படம் இது. இந்த ஒரு காரணத்திற்காக ஓப்பனிங் தாறுமாறாக இருக்கும். படத்தின் செட்டுக்கு ஏகப்பட்ட செலவு செய்திருக்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனம், விளம்பர விஷயங்களில் பட்ஜெட் பார்த்து பார்த்து செலவு செய்கிறார்களாம். இவர்கள் விளம்பரத்தை இழுத்து இழுத்து பிடிப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. படம் அப்படியிருக்கிறதாம்…
தெனாலிராமன் வெற்றி பெற்றாலும் சரி, படுதோல்வி அடைந்தாலும் சரி, அல்லது லேசான சிராய்ப்போடு தப்பித்தாலும் சரி. எல்லாம் அவர் செயல் என்று வடிவேலு பக்கமாக கை நீட்டுகிறார்கள் படத்தில் வேலை பார்த்த டெக்னீஷியன்கள். ஏனென்றால் படத்தின் இயக்குனராக யுவராஜ் என்ற இளைஞர் பணியாற்றினாலும், படத்தை டைரக்ட் செய்தவர் வடிவேலுதானாம். உடன் நடிக்கும் நட்சத்திரங்கள் எப்படி நடிக்க வேண்டும் என்பது முதற்கொண்டு டயலாக் வரைக்கும் எல்லாமே வடிவேலு சொல்லிக் கொடுத்ததுதானாம். டயலாக்கையும் கூட இவரே சொல்ல சொல்லதான் யுவராஜ் எழுதினாராம்.
இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை கூட வடிவேலுவேதான் இயக்கினார். பெயருக்கு இயக்குனர் என்ற பெயர் போட்டுக் கொண்டார் தம்பி ராமய்யா. அந்த படத்தின் கதி என்னவானது என்பதை தம்பி சொல்வதை விட, தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் கேட்டால், ஒரு தண்ணீர் லாரியை நிரப்புகிற அளவுக்கு கதை சொல்வார்.
முந்தைய விழுப்புண்கள் இப்படி முதுகெல்லாம் நிறைந்திருக்க மீண்டும் இயக்குனராகியிருக்கும் வடிவேலுவின் இந்தப்படம் சொல்லப் போகும் சேதி என்ன? இன்னும் ஒரு மணி நேரத்தில் தெரிந்துவிடப் போகிறது!