ரஜினி, கமல், அஜீத், விஜய் ஓட்டு! தனுஷுக்குதான் கொடுப்பினை இல்லை!
“தமிழ்நாட்டை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று ஒரு காலத்தில் முழக்கமிட்ட ரஜினியும், “இந்த நாட்லேயே இருக்க புடிக்கல” என்று வருத்தப்பட்ட கமலும், முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டுவிட்டார்கள். “வந்து தொலையலேன்னா வறுத்தே கருக வச்சுருவானுங்க” என்று நினைத்தார் போலும். எனக்கு ஷுட்டிங் இருக்கு என்று கூறிவந்த கமல், எப்படியோ அடித்து பிடித்துக் கொண்டு வந்து ஓட்டு போட்டுவிட்டார். இந்த தேர்தலில் எந்த மாதிரியானவர்கள் ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறீங்க என்ற கேள்விக்கு, நாம நினைக்கறதெல்லாமா நடக்குது என்றார் கமல். (சரியான பதில்)
நடிகர் சங்க தேர்தலுக்கு ஓட்டு போடாவிட்டாலும், இந்த தேர்தலுக்கு பொறுப்பாக வந்துவிட்டார் அஜீத். கூடவே அவரது அம்மாவும் மனைவி ஷாலினியும். மைக்கை மூக்குக்கு நேரே நீட்டிய செய்தியாளர்களுக்கு ஒரு செய்தியையும் சொல்லவில்லை அஜீத். மெல்லிய புன்னகையோடு இடத்தை காலி பண்ணினார். விஜய்யும் அப்படியே. எலக்ஷன் பற்றி கவிதை எழுதி கடந்த சில தினங்களாக பீதி கிளப்பி வந்த பார்த்திபன், கூலிங் கிளாஸ் பளபளக்க வந்து வாக்களித்துவிட்டு போனார். நோட்டாவுக்கு ஓட்டுப் போடுங்க என்பது இவரது அட்வைஸ்.
இது ஒருபுறமிருக்க, “அடிக்கடி வீடு மாறி மாறி குடியிருக்க நேர்ந்ததால் என் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் வாக்குரிமை இல்லை. இந்த தேர்தலில் அவங்க ரெண்டு பேரும் ஓட்டுப்போட நீங்கதான் அனுமதிக்கணும்” என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கே கடிதம் எழுதி விட்டார் மிசஸ் ரஜினிகாந்த். ஆனால் ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை. இந்த நிமிஷம் வரைக்கும் அவர்கள் வாக்கு சாவடிக்கு வந்து சேரவில்லை.
தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு முக்கியம் என்று டி.வி. வானொலி, நாளிதழ்கள் என்று கூவி கூவி அட்வைஸ் பண்ணிக் கொண்டிருந்த சூர்யா, தேர்தல் நாளன்று சென்னையிலேயே இல்லை. வெளிநாட்டில் இருப்பதால் என்னால் வர முடியவில்லை. தயவு செய்து பொறுத்தருளவும் என்று கடிதமே அனுப்பிவிட்டார்.
விஷால், சிவகார்த்திகேயன், லாரன்ஸ், ஜீவா, மீனா, என்று ஆங்காங்கே நட்சத்திரங்கள் மின்னி மின்னி போயின. யார் யார் எந்தெந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பது ரகசியமாக இருந்தாலும், தத்தமது அதார் உதார்களை காட்டாமல் அமைதியாக வந்து போனதே பெரிய விஷயம்தான்.
கபாலி படம் மாபெரும் வெற்றி அடைய போகிறது. அதை நீ பார்க்கத் தான் போகிறாய்
வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி .