முதல்பட தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ… எவருக்கும் கல்யாண அழைப்பில்லை! அமலாபால் அதிரடி!
முதலில் அமலாபால்-விஜய் இளம் தம்பதிகளுக்கு நமது நியூதமிழ்சினிமா.காம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அப்படியே புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே… தங்கச்சி கண்ணே… ஸ்டைலில் ஒரு அட்வைஸ். நடந்து வந்த பாதையை, ஏறி வந்த ஏணியை இதுபோன்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் நினைத்து பார்க்க வேண்டுமே தங்கச்சி என்பதுதான் அது.
தமிழ்சினிமாவில் ‘நன்றி’ என்ற தலைப்பில் படம் வந்திருக்கிறது. ‘நன்றி மீண்டும் வருக…’ என்று கூட தலைப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் ‘நன்றியே உன் விலை என்ன’ என்று யாருமே தலைப்பு வைக்கவில்லை. ஒருவேளை இந்த தலைப்பை அமலாபால் ரிஜிஸ்தர் செய்து வைத்திருக்கிறாரோ என்னவோ?
தமிழில் அமலாபால் அறிமுகமான படம் ‘வீரசேகரன்’. இதில் அவருக்கு ஜோடியாக பிரபல ஆர்ட் டைரக்டர் வீரசமர் நடித்திருந்தார். படத்தை துவார் சந்திரசேகர் என்கிற சிங்கப்பூர் தமிழர் தயாரித்திருந்தார். தற்போதும் ஒரு சில படங்களை தயாரித்து வரும் முக்கியமான தயாரிப்பாளர் இவர். இவரெல்லாம் மனசு வைக்கவில்லை என்றால், இன்று அமலாபாலுக்கு ‘மைனா’ படமும் இல்லை. ஊரே ஒண்ணு கூடி புரணி பாடிய ‘சிந்து சமவெளி’ படமும் இல்லை. அப்படத்தின் பிரபலம் காரணமாக வந்த ‘தெய்வ திருமகள்’ படமும் இல்லை.
அப்படியிருந்தும் தனது ஆரம்பகால இயக்குனர்களுக்கோ, தயாரிப்பாளர்களுக்கோ, ஹீரோக்களுக்கோ அமலாபால் திருமண அழைப்பிதழே கொடுக்கவில்லையென குறைபட்டுக் கொள்கிறது கோடம்பாக்கத்தின் சந்து பொந்து சலம்பல் கழகம்!
அழைப்பிதழ் வைக்கப்படாத மேற்படி பிரபலங்கள் சிலரை போனில் தொடர்பு கொண்டு ‘என்ன சார், உங்களுக்கு இன்விடேஷன் வரலையாமே?’ என்றால், ‘அது பற்றி நாங்களே கவலப்படல… உங்களுக்கு ஏன் சார்?’ என்கிறார்கள் கோரஸாக. அதே போனில் அதற்கப்புறம் கேட்ட தேம்பல் சப்தம் ‘கிராஸ் டாக்’ ஆக இருக்குமோ?