என்னை பார்த்தா அப்படியாயிருக்கு? தனுஷிடம் எகிறிய அமலாபால்!
அதென்னவோ தெரியவில்லை… ஹீரோயின்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டால், கட்டாய ரிட்டையர்மென்ட் கொடுத்துவிடும் சினிமாவுலகம். தப்பிப்பிழைக்கும் சிலருக்கு அக்கா, அண்ணி கேரக்டர்களை கொடுத்து நிரப்பிவிடுவார்கள். அந்த லொட்டு லொஸ்கு பார்முலாவையெல்லாம் லெப்ட் ரைட்டு வாங்கிய ஒரே நடிகை நம்ம அமலாபாலாகதான் இருக்கும். இப்பவும் மலையாளத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாகவும், கன்னடத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.
இந்த நேரத்தில்தான் தனுஷிடமிருந்து போன். “எங்க வுன்டர்பார் நிறுவனத்திலிருந்து ஒரு படம் தயாரிக்கிறோம். நீங்கதான் ஹீரோயின். ஆனால் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கணும்” என்றதும் சற்றே ஷாக் ஆகியிருக்கிறார் அமலாபால். அதற்கப்புறம் மனதை தேற்றிக் கொண்டு “எத்தனை வயசு பாப்பாவுக்கு அம்மா?” என்று கேட்க, அங்குதான் தலைசுற்றியதாம் அவருக்கு. “பத்து வயசு பெண்ணுக்கு அம்மாவாக” என்று தனுஷ் கூற, “என்னை பார்த்தா உங்களுக்கு அப்படியாயிருக்கு?” என்று கேட்டாராம் அமலா. அதற்கப்புறம் இந்த படம் எந்த படத்தின் ரீமேக் என்பதையும், இது என்ன மாதிரியான கதை என்பதையும் தனுஷ் கூற கூற, பனிக்கட்டியாக உருகிவிட்டார் அமலாபால். (இந்தியில் இப்படத்தை அஸ்வினி திவாரி இயக்கியிருக்கிறார். தமிழிலும் அவரையே இயக்க வைத்திருக்கிறார் தனுஷ்)
காக்கா முட்டை, விசாரணை மாதிரியான விருதுகளுக்கு தகுதியான படமாக எடுத்துத்தள்ளும் தனுஷ், இந்த படத்தையும் அந்த லிஸ்ட்டில்தான் வைத்திருக்கிறார். இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அம்மா கணக்கு ட்ரெய்லர் திரையிடப்பட்டது. சும்மா சொல்லக்கூடாது. தனுஷுக்கும் பெருமை… படத்தில் நடித்த அமலாவுக்கும் பெருமைதான். பெண் கல்வியை வலியுறுத்தும் கேரக்டரில் அசரடிக்கிறார் அமலாபால். ஒரு முக்கியமான விஷயம். படத்தில் இவருக்கு வேலைக்காரி வேஷம்.
“எங்க வீட்டுக்கு வேலை செய்ய வர்றவங்களை நான் கிளீனா வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் அவங்க வீட்டுக்கு அவங்க குடும்பத்தோட பழகுனேன். இந்த படத்தில் நடிக்க எனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருந்திச்சு. அப்புறம் என் அம்மாவிடம், இது பற்றி நிறைய பேசி ஹோம் வொர்க் பண்ணினேன்” என்று அள்ளி வீசிக்கொண்டே போனார் அமலாபால்.
சரி… படத்தில் அம்மாவா நடிச்சாச்சு, நிஜத்தில் எப்போ? என்ற கேள்விக்கு வெட்கத்தால் முகம் சிவந்த அமலாபால், இந்த கேள்வியை விட்டா உங்களுக்கு வேற கேள்வியா தெரியாதா என்று எஸ்கேப் ஆனார். விடுங்க… டைரக்டர் விஜய்யிடம் கேட்டுக்கலாம்!