மறுபடியும் காதல் ட்ரென்டுக்கு நகருமா தமிழ்சினிமா? அமரகாவியம் தரும் ஆறுதல்!
‘வீட்ல பாட்டு வுழுது… சும்மாயில்லாம இவன் செஞ்ச வேலை’ என்று ‘அமரகாவியம்’ படத்தின் டைரக்டரான ஜீவா சங்கரை நோக்கி ஆர்யா கைநீட்ட, பக்கத்திலிருந்த ஆர்யாவின் தம்பி சத்யா படு பவ்யமாக ரியாக்ஷன் காட்டினார். என்னவாம்? சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன் ஆர்யாவை சந்திக்க போன ஜீவா சங்கர், வீட்டில் சத்யாவை பார்த்திருக்கிறார். ‘ஏம்ப்பா… நீயும் உங்க அண்ணன் மாதிரி ஹீரோவாகலாமே?’ என்று புகையை போட்டுவிட்டு போக, அதற்கப்புறம் சினிமா ஆசை பற்றிக் கொண்டு திரிந்திருக்கிறார் சத்யா. ‘நல்லா படிக்கிற பையனை இப்படி ரெண்டு பேரும் சேர்ந்து கெடுத்துப்புட்டீங்களே…’ என்கிறார்களாம் வீட்டில்!
ஆர்யாவும் ஜீவா சங்கரும் வாடா போடா ஃபிரண்ட்ஸ். ஆர்யாவின் முதல் படமான ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவாவின் உதவியாளர்தான் இந்த சங்கர். இந்த பையனை நடிக்க வைக்கலாமா வேணாமா என்கிற முக்கியமான டிஸ்கஷனின் போது, ‘….லாம்’ என்று பச்சை கொடி காட்டியவர்தான் இந்த ஜீவா சங்கர். அன்றிலிருந்து தொடர்கிறதாம் இந்த நட்பு. இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனியை ஹீரோவாக வைத்து ‘நாம்’ படத்தை இயக்கிவிட்டு அடுத்த படத்திற்காக காத்திருந்த சங்கர், ஒரு நாள் விளையாட்டாக இந்த ‘அமரகாவியம்’ கதையை ஆர்யாவிடம் சொல்லப் போக, ‘நானே இந்த படத்தை தயாரிக்கிறேன். என் தம்பிதான் ஹீரோ’ என்று இறங்கியிருக்கிறார் ஆர்யா.
இதுதான் அமரகாவியம் உருவான கதை. படம் எப்படி? அதுதான் நான்கைந்து நாட்களாக ஒரு பில்டப் ஓடிக் கொண்டிருக்கிறதே எல்லா இடத்திலும். படத்தை நயன்தாரா பார்த்தாகவும், ஒரு சில காட்சிகளில் கண்ணீர் விட்டு அழுததாகவும்…! அது நிஜம்தானா என்று ஜீவா சங்கரிடம் கேட்டால், ‘உண்மைதாங்க’ என்றார். இவர் இரண்டாம் வகுப்பு படிக்கும் அவரது சொந்த மாவட்டமான தஞ்சாவூரில் நடந்த நிஜமான சம்பவம்தானாம் இந்த ‘அமரகாவியம்’. ‘முதலில் இந்த படத்தைதான் எடுக்கணும்னு நினைச்சேன். 2006 களில் எல்லா படங்களுமே காதல் படங்களாக வந்து கொண்டு இருந்ததால், ஒரு சேஞ்சுக்கு வேற கதையை எடுக்க நினைத்தேன். அதுதான் ‘நாம்’. அப்போ பண்ண முடியாத அந்த அற்புதமான காதல் கதையைதான் இப்போ சினிமாவா எடுத்திருக்கேன்’ என்றார்.
ஐயா… சாமீ. வாங்க! இந்த பேய் பிசாசு ஆவி சீசன்லேர்ந்து தமிழ் சினிமாவை காதல் சீசனுக்கு நகர்த்துங்க. கோடி புண்ணியமாப் போவும்!