அமரகாவியம்- விமர்சனம்

கட்டி அணைப்பதாக நினைத்துக் கொண்டு எலும்பை நொறுக்கி விடுகிற அறியாமை காதலுக்கு மட்டும்தான் உண்டு. அப்படியொரு காதலில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு காதல் ஜோடியை பற்றிய கதைதான் ‘அமரகாவியம்’.

‘பூமரத்துக்கு கீழே, புழுக்கத்துக்கு ஏது வேல?’ என்பது மாதிரிதான் பியூர் காதல் படங்களும்! அந்த அழகான ஜோடி, எப்படியாவது சேர்ந்து விடக் கூடாதா என்கிற ஏக்கத்தை வரவழைக்கிறது கதை நடக்கும் களமும், கேரக்டர்களை சுமந்திருக்கும் முகமும்! மயங்க வைக்கும் இசை, பனி பொழியும் ஊட்டி, இன்னும் கொஞ்சம் நேரம் அவள் முகத்தை காட்ட மாட்டார்களா என்று ஏங்க வைக்கும் மியா ஜார்ஜின் அழகு…. இப்படி எல்லாமும் சேர்ந்து அமரகாவியத்தை இன்னும் இன்னும் மலர வைக்கிறது. காதலுக்கு மட்டும்தான் அவரவர் ஊருக்கேற்ற ஆயுதங்களை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இது ஊட்டியல்லவா? கோபத்திலும் மிதவாதிகளாகவே இருக்கிறார்கள் பெற்றோர். ஆனால் கத்தியை யாருமே எதிர்பார்க்காத ஒருவரே எடுக்கிறார் என்பதுதான் ஆகப்பெரிய ஷாக்!

முற்றும் துறந்த முனிவனையே வெட்டி இழுக்கிற கண்கள் மியா ஜார்ஜுக்கு. உடன் படிக்கும் மாணவனுக்கு அவள் மீது லவ் வராதா? ‘அவ என்னைதான்டா பார்க்குறா… எனக்கு அவளை நேருக்கு நேர் பார்த்து லவ்வை சொல்றது அச்சமா இருக்கு. எனக்கு பதிலா, நான் லவ் பண்ணுறதா அவகிட்ட சொல்லிடுறீயா?’ நண்பனுக்காக மியா ஜார்ஜிடம் பேசப்போகிறார் ஹீரோ சத்யா. ‘எனக்கு உன்னைதான் பிடிச்சுருக்கு’ என்று இந்த லவ் ஸ்டோரியில் ஒரு திருப்பத்தை கொண்டு வருகிறாள் அவள். அதே நண்பனிடம் இப்படியொரு திருப்பம் நேர்ந்ததை சொல்லிவிட்டு காதலிக்க தொடங்குகிறான் சத்யா. அதற்கப்புறம் அந்த காதலில் வருகிற இடைஞ்சல்களும், இணைந்தார்களா என்ற கேள்வி ஓட்டமும்தான் படம்.

நயன்தாராக்களையும், அனுஷ்காக்களையும், சமந்தாக்களையும் கண்டு பித்துப்பிடித்தலையும் தமிழன், கட்டாயம் இணைத்துக்கொள்ள வேண்டிய லிஸ்ட்டில் இருக்கிறார் இந்த மியா ஜார்ஜ். அந்த கண்களுக்கும் உதட்டுக்கும் குளோஸ் அப் வைக்கும் போதெல்லாம் கேமிராவே பூ பூத்திருக்கும்! நடிப்பு? ஒரு புனே இன்ஸ்ட்டியூட்டே இருக்கிறது அந்த அழகான முகத்தில். மெல்ல சத்யாவின் அருகில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு, ‘ஐ லவ் யூ சொல்லேன்’ என்று கேட்கும் போதும், வீட்டுக்கு கம்பைன் ஸ்டடிக்காக வரும் சத்யாவை பொசுக்கென முத்தம் கொடுத்துவிட்டு விலகி அமர்வதுமாக…. பில்லி சூனிய பூமியான கேரளாவிலிருந்து வந்திருக்கும் அந்த ‘மந்திர’ பொக்கேவே இவர்தான் ..!

ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு குரல். நடிப்பு. கம்பீரம் எல்லாமே அண்ணனை போல! புத்தி முழுக்க காதல் மட்டுமே நிரம்பியிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவர் சைக்கோ லெவலுக்கு போவது பயங்கரம். காதலியை தேடி அலைகிற எவன் முகத்திலும் தேங்கியிருக்கிற ஏக்கத்தையும் பரபரப்பையும் அவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார் சத்யா. போட்டி வீட்டிலும் தொடரக்கூடும் ஆர்யா!

இந்த கதையில் வரும் எல்லா கேரக்டர்களுமே மிக பொருத்தமாக இருக்கிறார்கள். அதுவும் சத்யாவின் செகன்ட் அப்பா(?) மாற்றான் தந்தை மனப்பான்மை இல்லாமல் இவரை காப்பாற்ற அலைகிற அலைச்சல், கிரேட்! தனக்கு கிடைக்காத காதலி நண்பனுக்கும் கிடைக்கக் கூடாது என்று கேம் ஆடுகிற அந்த நண்பனிடத்திலும் பொருத்தமான நடிப்பு. எருக்கஞ்சேரி சந்துக்குள்ள ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி வச்ச மாதிரி… இந்த படத்தில் நடிக்க எதற்கு தம்பி ராமய்யா? நல்ல நடிகரை வேஸ்ட் பண்ணிய பாவம் துரத்தட்டும் ஜீவா சங்கரை.

ஊட்டியின் பாப்புலேஷன் ஒரேயடியாக குறைந்துவிட்டதை போன்றதொரு உணர்வை ஏற்படுத்துகிறது ஆள் நடமாட்டமில்லாத பல அவுட்டோர் காட்சிகள். தவிர்த்திருக்கலாமோ? வேகமெடுக்க வேண்டிய நேரங்களில் கூட, சற்றே மந்தமாக நகர்கிறது திரைக்கதை.

ஒளிப்பதிவும் ஜீவா ஷங்கர் என்பதால், ஒவ்வொரு காட்சியையும் இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் அனுபவித்து ஷுட் பண்ணியிருக்கிறார். எல்லா காட்சிகளுமே கண்ணில் ஒற்றிக் கொள்கிற அளவுக்கு நேர்த்தி. பாலுமகேந்திராவுக்கு பிறகு ஊட்டியை அழகாக காட்டிய பெருமை ஜீவா சங்கருக்கு கிடைக்கும்.

இசை ஜிப்ரான். மெலடிகளின் வரிசையில் இன்னும் பல வருடங்களுக்கு முணுமுணுக்கப்படுகிற ட்யூன்கள் ஒவ்வொன்றும். படத்தில் ஆங்காங்கே வந்து போகும் ராஜாவின் பாடல்கள், பின்னணியில் மெல்லிசாக ஒலித்தாலும், அதுவே படத்தை இன்னும் குளிர வைக்கிறது.

ஊட்டியையே ஃபிரிட்ஜுக்குள் வைத்தாலும், அந்த அழகான காதலை மட்டும் நெருப்புக்குள் வைத்த இயக்குனரை மன்னிக்கவே முடியாது. அந்த வகையில் இது மனசுக்குள் ‘அமரா’காவியம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய்யின் ‘கத்தி ’க்கு ஆதரவாக சவுந்தர்யா ரஜினியின் முதல் கையெழுத்து!

நல்ல நேரத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டிருக்கிறது ‘கத்தி’யின் போக்கு. விட்டேனா பார்... என்று மொத்த அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அருவாளை தீட்டிக் கொண்டிருப்பது யாவரும்...

Close