மீண்டும் வெத்தல போட்ட ஷோக்குல… அமர்க்களமாக தயாராகும் அமரன் பார்ட் 2

வெத்தல போட்ட ஷோக்குல
டக்குன்னு குத்துனேன் மூக்குல
வந்தது பாரு ரத்தம்
இந்த ஆம்பள மனசு சுத்தம்…..
என்றொரு பாடலை இப்போதும் எப்.எம்களில் கேட்க நேர்பவர்கள் ‘அமரன்’ காலத்துக்கு ஆளே பார்சல் ஆகலாம்! அந்த பாடலின் ட்யூனும், வரிகளும், அதை பாடிய நடிகர் கார்த்திக்கின் வழ வழா தமிழும் இன்னும் பல காலத்திற்கு தாங்கும்! அமரன் படத்தில்தான் அந்த பாடல் இடம் பெற்றது. இதுதான் சீசன் 2 காலமாச்சே? அமரன் படத்தையும் பார்ட்2 வாக என்று எடுக்க வந்திருக்கிறார் கே.ராஜேஷ்வர். அமரன் படத்தின் இயக்குனர். தயாரிப்பாளர். எல்லாவற்றையும் தாண்டி கார்த்திக்கின் நெடுநாளைய நண்பர்.

அமரன் 2 படத்தையும் கே.ராஜேஷ்வரே தயாரிக்கிறார். ஒருகாலத்தில் திரையுலகத்தில் ஓஹோவென்று இருந்த கார்த்திக், இந்த கால சிம்புவாக இருந்தார். ஷுட்டிங்குக்கு நாள் கணக்கில் மட்டம் போடுவது அவரது பாலிஸி. அப்படி வந்தாலும் அரை நாள் தாமதத்தோடுதான் வண்டி பிளாட்பார்முக்குள் என்ட்ரியாகும். இப்படியெல்லாம் படுத்தி எடுத்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டமும், அவர் படங்கள் அடைந்த வெற்றியும் வரலாற்று சிறப்பு மிக்கது.

காலம் எல்லாரையும் பக்குவப்படுத்துவதை போல கார்த்திக்கையும் பக்குவப்படுத்திவிட்டதை அவரது சிற்றுரையே சொல்லியது. பேச்சில் அவ்வளவு நிதானம். பக்குவம். ‘கார்த்திக் பஞ்சுவாலிடின்னு ஒண்ணு இருக்கு. இந்த படத்தை பொறுத்தவரை அந்த பஞ்ச்சுவாலிடி எப்படியிருக்கும்?’ என்றொரு கேள்வி. ‘சில நேரங்களில் வாட்ச் ஓடுவதில்லை. அந்த வாட்சை நான் கழட்டி எறிஞ்சுட்டேன். இப்போ வேற வாட்ச் கட்டியிருக்கேன்’ என்றார் கார்த்திக் வெகு சாதுர்யமாக.

அனேகன் படத்தில் வில்லனாக நடித்து ரீ என்ட்ரியாகிவிட்ட கார்த்திக், அவரது மகன் கவுதம் கார்த்திக்கைவிட பிஸியான நடிகர் ஆகிவிடுவார் போலிருக்கிறது. ஏனென்றால், இப்போதும் கூட அவரது தோற்றம் அப்படியே இருப்பதுதான் காரணம். அதிருக்கட்டும்… அமரன் படத்தில் பாடிய அதே கார்த்திக், அமரன் 2 விலும் பாடவிருக்கிறாராம்.

படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பல்வேறு வெளிநாடுகளில் நடைபெறவிருக்கிறது.

Read previous post:
சண்டி வீரன் பாலா சாரே வியந்த கதை! அதர்வா யெஸ் சொன்னதன் பின்னணி

தமிழ்சினிமாவே மதுரையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தபோது, ‘கொஞ்சம் இந்த பக்கம் திரும்புங்கப்பா’ என்று தஞ்சை பக்கம் திசை நோக்க வைத்தவர் சற்குணம். மண் மணம் சார்ந்த கதைகளை...

Close