ஆம்பள விமர்சனம்
‘புகை வந்தா போதும். எரியுற நெருப்புல எதை போட்டா என்ன?’ என்கிற முடிவோடு எடுத்திருக்கிறார்கள். சாம்பிராணி வாசனையும் அடிக்கிறது, சமையல் பொடி வாசனையும் அடிக்கிறது. மொத்தத்தில் ஆம்பள? சிரிப்பும் தாங்கல. கடுப்பும் தாங்கல. அக்சூ….ச்!
பொதுக்கூட்டத்துக்கு ஆள் சப்ளை செய்யும் தொழில் விஷாலுக்கு. தானுண்டு தன் கூட்டம் உண்டு என்றிருக்கும் அவருக்கு ஹன்சிகாவை பார்த்ததும் வாயோரத்தில் எச்! அவரை கவிழ்க்க ட்ரை பண்ணி எப்படியோ அதில் வெற்றியும் பெறுகிறார். அந்த நேரம் பார்த்து வைபவ், ஆன்ட்ரியா கூட்டணியில் ஒரு நாடகம் அரங்கேற ஸ்மால் பிரிவு இருவருக்கும். அந்த கவலையில் லேசாக சரக்கடித்துவிட்டு வீட்டுக்கு வரும் விஷாலிடம், ‘உங்கப்பன் இன்னொருத்தியோட ஓடுன பிறகு உன்னை எப்படி வளர்த்தேன் தெரியுமா? எல்லாம் இதுக்காகதானா?’ என்று பெற்ற தாய் புலம்ப, உயிரோடு இருக்கும் அப்பாவை தேடி கிளம்புகிறார் விஷால். போன இடத்தில் அப்பாவையும், அப்பாவை விரட்டிய அத்தைகளையும் சந்திக்க, அங்கே ஒரு வில்லன்.
எலக்ஷன். போட்டி. ஊர் தகராறு. அத்தை மகளுடன் லவ். மனம் மாறும் அத்தைகள் என்று சுற்றி சுற்றி வந்து விஷால் தன் சொந்த மூக்கை தொடுகிற போது படம் முடிஞ்சிங்!
வந்தமா, ரசிச்சமா, சிரிச்சமா, போனமான்னு இருக்கணும். இல்லேன்னா? என்று சுந்தர்சி எச்சரிக்காத குறைதான். பின் எதற்காக கறவைக்கு ஒரு பசு. கத்தறதுக்கு ஒரு பசு. லுக்குக்கு ஒரு பசு. கிக்குக்கு ஒரு பசுன்னு படம் முழுக்க ஆன்ட்டிகளும் அல்டாப்புகளுமாக திரியணும்?
பாண்டியநாடு, பூஜை என்று நேர்க்கோட்டில் போய் கொண்டிருந்த விஷால், மசாலா அரைச்சு வெகு நாளாச்சு என்று நினைத்திருப்பார் போலும். அதற்கு சுந்தர்சியும் பொறுத்தமான தேர்வுதான். என் கடன் கிச்சுகிச்சு மூட்டுவதே என்கிற மாதிரியே முழு படத்தையும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். படத்தின் ஹீரோ விஷாலாக இருந்தாலும், சந்தானத்தின் தெம்புதான் படத்தையே தாங்கி நிறுத்துகிறது. ஒரு கம்பீரமான இன்ஸ்பெக்டராக என்ட்ரி கொடுத்து, அடுக்கடுக்காக டி-பிரமோஷன் ஆகி, கடைசியில் டிஸ்மிஸ் ஆகிற வரைக்கும் சந்தானம் வயிறு குலுங்க வைக்கிறார். அதற்காக ஆன்ட்டி கிரணை ஃபிகர் என நினைத்து சந்தானம் வழிகிற காட்சியெல்லாம் காமெடி உலகத்தின் கிர(ண்)கணம்!
விஷால் தன் கதையை விவரிக்க விவரிக்க அதனுள் வரும் சிறுசிறு ஆக்ஷன்தான் தன் வாழ்க்கைக்கே வேட்டு வைத்தது என்பதை சந்தானம் அடுக்கடுக்காக நினைத்துப் பார்க்கிறாரே… அந்த வரிசை கிரம அடுக்கலுக்காக அப்ளாஸ் தரலாம் சுந்தர்சிக்கு. எடிட்டர் ஸ்ரீகாந்த் என்.பி. க்கு இந்த இடத்தில் ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்.
ம்ம்ம்ம்…விஷால் எப்படி? ஆடுகிறார். பாடுகிறார். அதிர அதிர அடிக்கிறார். சமயங்களில் அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் வசனங்கள் நடிகர் சங்க பிரச்சனையை சினிமாவுக்குள் கொண்டு வருகிறாரோ என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறது. எனக்குன்னு ஒரு வரலட்சுமியோ, தனலட்சுமியோ எங்காவது பொறந்திருப்பா என்று அவர் பேசுகிறபோது புரிந்து கொண்டு கலகலப்பாகிறார்கள் ரசிகர்கள். சந்தானத்திடம், லவ் பண்ணுறது எவ்வளவு கஷ்டம் என்று விஷால் சொல்லி முடிக்கும் போது தியேட்டரில் தானாக கிளம்புகிறது கைதட்டல். இருந்தாலும் ஆகஷ்ன் காட்சிகளில் பறக்கும் ஜீப்பில் அவர் முன்பக்கம் உட்கார்ந்து வருவதெல்லாம் ‘முடியல சாமீய்…’ இன்னும் வரும் இதுபோன்ற காட்சிகள் குறிவைத்திருப்பது தமிழ்நாட்டையா? தெலுங்கு தேசத்தையா? என்கிற குழப்பமே வந்துவிடுகிறது.
மைதா மாவில் மாலை வெயிலை குழைத்து செய்தது போல இருக்கிறார் ஹன்சிகா. அனுபவிங்க ராசாக்களே… என்று அள்ளி அள்ளி தருகிறார் கவர்ச்சியை. அதில் துளி பருக்கை கூட சிந்தக்கூடாது. அப்படியே ரசிகர்களுக்கு தந்துடணும் என்கிற மெனக்கெடல் தெரிகிறது கோமிராமேன் கோபி அமர்நாத்தின் வித்தையில். ஒரே ஜீப்பில் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், ஹன்சிகா, விஷால், வைபவ், சதீஷ்… ஜீப் ஓட ஓட வழியெங்கும் பள்ளம். புரிஞ்சிக்கோங்க ரசிகர்களே. அதுக்கு மேல சொல்ல முடியாது. படத்தில் மேலும் இரண்டு பிட்டுகள் நடமாடுகின்றன. பேர் என்னவோ?
ஜமீன் வாரிசாக இருந்தாலும், விதவிதமாக ஏமாற்றி விசேஷமாக கவர்கிறார் இளைய திலகம் பிரபு.
படத்தில் ஒரு எலக்ஷன் வருகிறது. அது போதாதா? குஷ்பு திமுக விலிருந்து விலகி விட்டார் என்கிற மிதப்பில் திமுக வை லேசாக சீண்டிப் பார்க்கிறார்கள். ஒரு காட்சியில் குஷ்பு வந்து நாலு ஸ்டெப் போட்டுவிட்டு போகிறார். ச்சும்மா சொல்லக்கூடாது. பழைய வளையலுக்கு இன்னும் பளபளப்பு குறையல.
இசை ஹிப் ஹாப் தமிழன். ‘பழகி பார்க்கலாம்’ உள்ளிட்ட சில பாடல்கள் அழகு. சில பாடல்களில் இரைச்சலை தவிர வேறொன்றுமில்லை. ஒருவேளை இதுதான் இப்போதைய டிரண்டுன்னு சொல்வாங்களோ என்னவோ? அந்த ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’ ரீமிக்ஸ் பட்டைய கிளப்புகிறது. படம் முடியும்போது திரையிட்டாலும், கலையாமல் நின்று கவனிக்கிறது ரசிகர் கூட்டம்.
பேருதான் ஆம்பள. படம் முழுக்க? ம்… அவங்களேதான்! அனுபவிங்க ராசா அனுபவிங்க!!!!!!!
-ஆர்.எஸ்.அந்தணன்