அமீரை அலற விட்ட ட்விட்!
கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பு. தெறி படம் தொடர்பாக டைரக்டர் அமீர் வெளியிட்டதாக சொல்லப்படும் ஒரு ட்விட்டர் கருத்துதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம். தெறி படத்தின் மதுரை ஏரியாவை வாங்கியிருக்கிறார் அமீர். கலெக்ஷன் ரெண்டாவது நாளே ட்ராப் ஆகிருச்சு. ஐம்பது சதவீதம் லாஸ் ஆகும் என்று அவர் அதில் குறிப்பிட்டதாக குமுறிக் கொண்டிருந்தார்கள் விஜய் ரசிகர்கள்.
இத்தனைக்கும் விஜய்க்கு ஒரு கதை சொல்ல முயன்று வருகிறார் அமீர். அவர் எப்படி இப்படியொரு ட்விட் போட்டிருப்பார் என்று கோடம்பாக்கத்தில் சலசலப்புகள் எழ, சற்று ஆவேசத்தோடு இதை அணுக ஆரம்பித்தார் தயாரிப்பாளர் தாணு. அதற்கப்புறம்தான் விழித்துக் கொண்டார் டைரக்டர் அமீர். கடந்த மூன்று நாட்களாக தன் பெயரில் ஒரு சங்கு ஓவென்ற இரைச்சலுடன் உலா வருவதை அப்போதுதான் அறிந்த மாதிரி (?) ஒரு மறுப்புக்கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பது இதுதான்-
“திரு.விஜய்யின் வளர்ச்சி பிடிக்காத சிலருடைய செயல்களால் தெறி படம் வெளிவருவதில் இருந்த சிக்கல்களையும், வெளியான நாள் முதல் வந்துகொண்டிருக்கக்கூடிய தவறான தகவல்களையும் நான் அறிவேன். அதே நேரத்தில் தெறி படத்திற்கான விநியோகம் குறித்து என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் ஒரு செய்தி பதிவிட்டிருப்பதாக இன்று காலை அறிந்தேன். எனக்கென்று அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கமோ அல்லது ட்விட்டர் பக்கமோ நான் வைத்துக்கொள்ளவில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பெயரில் உள்ள முகநூல் பக்கமோ, ட்விட்டர் பக்கமோ என்னுடையது இல்லை. யாரோ சில தவறான எண்ணம் கொண்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
நமது ஆலோசனை ஒன்றே ஒன்றுதான். இது போலி அக்கவுன்ட் என்று அறிவித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் யார் அந்த நாதாறி என்பதையும் போலீஸ் உதவியுடன் கண்டுபிடித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்! இல்லையென்றால்… நீங்கள் போலி என்று சொன்னாலும் அதை உலகம் நம்பாது.