மனுஷ்யபுத்திரன் கலந்து கொண்ட சினிமா நிகழ்ச்சி ‘அம்மாவை ’ தாக்கி பேசியதால் ஒரே குய்யோ முய்யோ…

சினிமாவுக்குள் அரசியல் புகுந்தால் சின்னா பின்னம்தான்! இதை தமிழ்சினிமாவில் பலர் உணர்ந்து உலர்ந்து காய்ந்து கருவாடாகிப் போயிருக்கிறார்கள். அண்மை கால உதாரணம் வடிவேலுவும் விஜய்யும்! ‘அம்மா வெற்றிக்கு அணில் மாதிரி உதவினேன் ’ என்று விஜய் சொல்லப் போக, பக்கோடா பாக்கெட்டுக்குள் பாக்கு விழுந்த மாதிரி ஒரே கடா முடாவாகிவிட்டது அவரது நிலைமை. இன்று வரை அதிலிருந்து அவரால் விடுபடவே முடியவில்லை. வடிவேலு பற்றி அதிகம் விவரிக்க தேவையில்லை. தவளை தன் வாயாலேயே கெட்ட மாதிரிதான் அவரும். ஊர் ஊராக போய் உளறி கெட்டார்.

இப்போதும் அது தொடர்கிறது. முன்னால் சென்ற ஏர் கலப்பைகள் சேற்றில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுகிறதே, அதை பார்த்தாவது அடக்கி வாசிப்போம் என்கிற உணர்வே இல்லாமல் அவரவர் லெவலுக்கு அரசியலில் புரள ஆரம்பித்துவிடுகிறார்கள். கில்டு என்ற அமைப்பு தமிழ்சினிமாவில் இயங்கி வருகிறது. சின்னப்பட தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு அது. இங்குதான் பொறுப்பில் இருக்கும் ஒருவர் முதல்வரை விமர்சிக்க, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஃபைட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் ‘எங்கம்மாவையா தரக்குறைவா பேசுறே?’ என்று சம்பந்தப்பட்டவரின் கன்னத்தில் ஓங்கி பளார் விட்டுவிட்டார். அதற்கப்புறம் போலீஸ் வந்து, அடிவாங்கியவர் ‘அம்மாவை தப்பா பேசிட்டேன். தப்பா எடுத்துக்க வேண்டாம்’ என்று மன்னிப்பு கேட்டதால் அவரை கைது செய்யாமல் கிளம்பியது. அத்துடன் பிரச்சனை ஓவர்.

சில தினங்களுக்கு முன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தின் சக்சஸ் மீட்! எள்ளு முட்டாய் செய்யுற இடத்துல புல்லுக்கட்டுக்கு என்ன வேலை? எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனை அழைத்து வந்துவிட்டார் பார்த்திபன். மனுஷ்யபுத்திரன் திமுக ஆதரவாளர் என்றொரு பரவலான கருத்து நிலவி வருகிறது. அவரும் அதை நிரூபிப்பதை போல, போன ஆட்சியில திருட்டு விசிடி அதிகம் இல்ல. இந்த ஆட்சியிலதான்… என்று வாயை விட, பொல பொலவென பிடித்துக் கொண்டார்கள் அதிமுக ஆதரவு பத்திரிகை நிருபர்கள். ‘எப்படி நீ எங்க அம்மா ஆட்சியை குற்றம் சொல்லலாம். போன ஆட்சியில திருட்டு விசிடி இல்லேன்னு நிரூபிக்க முடியுமா உன்னால்?’ என்று சாமியாட ஆரம்பித்துவிட்டார்கள்.

சாமி கும்புட வரச்சொன்னா… இப்படி எல்லாரும் சேர்ந்து கலசத்தை நசுக்குறாங்களே என்று கவலை கொண்ட பார்த்திபன் அவசரம் அவசரமாக அந்த சக்சஸ் சந்திப்பையே நிர்கதியாக முடித்துவிட்டு கிளம்பினார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
படுத்த படுக்கையில் முன்னாள் காட்ஃபாதர்! அஞ்சலி என்ன செய்யப் போறீங்க?

காற்று அஞ்சலி பக்கம் அடிக்கும் நேரம் போலிருக்கிறது. சித்தியால் விரட்டப்பட்ட அஞ்சலி, டைரக்டர் மு.களஞ்சியத்தால் மிரட்டப்பட்டதையும் நாடறியும். எப்படியோ தப்பித்து ஆந்திராவில் தஞ்சமடைந்து, அவ்வப்போது யாருக்கும் தெரியாமல்...

Close