அம்மா கணக்கு – விமர்சனம்

ஆத்மாவுக்குள் குழந்தைகளை சுமக்கும் அம்மாக்களின் கனவு ஒரு வேலைக்காரிக்கும் இருக்குமல்லவா? மகளுக்கும் அம்மாவுக்குமான இந்தக் கணக்கு முதலில் பிணக்காகி, பின்பு என்னவாகிறது என்பதுதான் அம்மா கணக்கு! வயலின் நரம்பு அறுந்து தொங்குகிற அளவுக்கு வாசிச்சே தீருவேன் என்று அடம் பிடிக்காமல், கதைக்கு தேவையான நேரத்தோடு படத்தை முடித்த விதத்தில், பாஸ் மார்க் வாங்குகிறார் டைரக்டர் அஸ்வின் திவாரி. ‘நில்பட்டே சன்னாட்டா’ என்ற இந்திப்படத்தின் தமிழ் வடிவம்தான் இந்த அம்மா கணக்கு. நின்று சல்யூட் அடிக்க வைக்கிறதா?

அமலாபால்தான் அந்த அம்மா. இளம் விதவை. பத்தாம் வகுப்பு படிக்கும் தன் மகளை எப்படியாவது மேல் படிப்பு படிக்க வைத்து டாக்டராகவோ, கலெக்டராகவோ ஆக்க வேண்டும் என்கிற ஆசையுடன் ராப்பகலாக உழைக்க, குழந்தை பருவத்திற்கேயுரிய குதூகலத்துடன் இருக்கிறாள் மகள். ஒருகட்டத்தில் அவளுடைய பரம எதிரிகள் ஆகிறார்கள் கணக்கும், அம்மாவும்! புரிந்து கொள்ளவே முடியாத இரண்டாலும் சிரமப்படும் மகளை, மேலும் சிரமத்திற்குள்ளாக்குகிறாள் அம்மா. எப்படி?

மகள் படிக்கும் அதே கிளாசில் தானும் ஒரு மாணவியாக சேர்கிறாள். “கவலைப்படாதே… நான் உன் அம்மான்னு யார்ட்டயும் சொல்ல மாட்டேன். நீ நல்லா படிச்சு என்னைவிட அதிக மார்க் வாங்கிட்டா நான் ஸ்கூலுக்கு வருவதை நிறுத்திக்கிறேன்”. அம்மாவின் இந்த சவாலை ஏற்றுக் கொள்ளும் மகள் விழுந்து விழுந்து படிக்க ஆரம்பிக்க, சொன்னதை செய்தார்களா அம்மாவும் மகளும்?

ஏழையாய் பிறந்தவர்களுக்கு படிப்புதான் ஒரே சொத்து என்பதை காட்டுகிற மாதிரியான ஒரு காட்சியும் படத்தில் இல்லாதது குறைதான். அதே நேரத்தில், ஒரு தாய்க்கும் மகளுக்குமான சண்டை சச்சரவுகளை மிக லாவகமாக சொல்ல முயன்றிருக்கிறார் அஸ்வினி திவாரி. அம்மா மீதிருக்கும் மனம் கொள்ளாத வெறுப்பை தன் கோபக் கண்களால் மிக அசால்ட்டாக கடத்துகிறாள் குழந்தை யுவா. எந்நேரமும் படி… படி… என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் அம்மாக்களை குழந்தைகள் எத்தகைய மன நிலையோடு அணுகுவார்கள் என்பதை மிக துல்லியமாக வெளிப்படுத்துகிறது அவளது நடிப்பு. ஆனால் முகத்தில் வழியும் அந்த பணக்காரக் ‘களை’, குடிசை இருட்டையும் தாண்டி பட்டொளி வீசுதேம்மா…?

இப்படியான ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்கிற அமலாபாலின் ஆசைக்கே தனியாக ஒரு அவார்டு தரலாம். அவரும் முடிந்தவரை முயற்சி செய்திருக்கிறார். மகள் படிக்கும் அதே வகுப்பறைக்கு பொருந்தாத யூனிபார்முடன் செல்கிற அந்த காட்சியில், அவர் காட்டும் அந்த தயக்கமும் வெட்கமும் ஒரு தேர்ந்த நடிகைக்கேயுரிய வித்தை! மேக்கப்பே இல்லாமல் தவிர்த்திருந்தால் இன்னும் பொருந்தியிருப்பாரோ என்னவோ? தான் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் மகள் காலி பண்ணிவிட்டாள் என்பதை அறிந்தபின், அப்படியே இடிந்து உட்கார்ந்து விடும் காட்சியிலும் அமலாபாலின் திரைநாள் அனுபவம் கை கொடுக்கிறது.

வேலைக்காரியை வேலைக்காரியாக பார்க்காமல் ஒரு மகள் போலவே அரவணைத்துக் கொள்ளும் டாக்டர்கள் அபூர்வம்தான். என்றாலும், ரேவதி மாதிரி ஊருக்கு ஒருவர் இருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தை வரவழைக்கிறது அந்த கேரக்டர். அதே நேரத்தில் இதில் ரேவதிக்கு பதிலாக வேறொருவர் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றாமலில்லை.

யுவாவின் வகுப்புத் தோழனாக வரும் அந்த கண்ணாடிப்பையன் மிக பொருத்தமான தேர்வு. ஒவ்வொரு கிளாசிலும் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களின் லுக், கிட்டதட்ட அப்படிதான் இருக்கும்.

ஸ்கூல் ஹெட் மாஸ்டராக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, தன் பாடி லாங்குவேஜை எப்படியோ ட்ரை பண்ணியிருக்கிறார். மாணவி யுவாவின் ஆரம்ப கால மார்க் போலவே அடம் பிடிக்கிறது அந்த ஸ்டைல்!

படத்திற்கு பின்னணி இசை இளையராஜா. பாடல்களுக்கான இசையும் அவரேதான்! ‘இளையராஜா கொன்னுட்டாரு. நாங்கள்லாம் செத்துட்டோம்’ என்று பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டிருந்தார். மிக நேரடியான விமர்சனம்தான் அது (?!)

காக்கா முட்டை மாதிரியான ஒரு படத்திற்கு ஆசைப்பட்டிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்! அந்த ஆசைக்கு ஒரு வணக்கம். ஆனால் இந்த முட்டை ஓடெல்லாம் உடைந்தே பிறந்திருக்கிறதே… என்ன செய்ய?

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Suman says

    மதுரை மதி தியேட்டர்ல பாதி பேர் இடைவேளை பின் கிளம்பியாச்சு, எப்படி தான் இந்த படத்தை புகழ்ந்து எழுதிறீங்கே தெரியல

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
செயின் பறிப்பு படத்தால் பெயின் ஃபுல்லான விநியோகஸ்தர்!

வயித்து வலி உனக்கு, வாந்தி பேதி எனக்கா? என பெரும் எரிச்சலில் இருக்கிறார் அந்த விநியோகஸ்தர். பிறகென்னப்பா? ஒரு ஓப்பனிங்கும் இல்லாத ‘மெட்ரோ’ படத்தை திடீரென ரேட்...

Close