‘தண்ணி’யிலேயே கிடந்த கயல் ஆனந்தி?
மைனா… கும்கி… அப்புறம்…? இதுதான் பெரிய ரிஸ்க்! ஊர் உலகத்தின் எதிர்பார்ப்பெல்லாம் ‘கயல்’ படத்தின் மீதே இருக்கும். எல்லாவற்றையும் புரிந்து வைத்திருக்கும் பிரபுசாலமன் அதற்கேற்ற மாதிரி பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இந்த படத்தை இயக்கியிருக்கிறாராம். ஊரே வெயிட்டிங்… அதைவிட படு படு பதைப்புடன் கயல் ஆனந்தியும் வெயிட்டிங்! இந்த படம் வெளிவருவதற்குள்ளாகவே வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படமும் களவாணி சற்குணம் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்சினிமாவில் பென்ஷன் வாங்குகிற வயசு வரைக்கும் நடித்துக் கொண்டிருந்தாலும், மருந்துக்கு கூட தமிழ் கற்றுக் கொள்ளாத பிறமொழி ஹீரோயின்கள் இன்னும் இருக்கிற நாட்டில், படம் துவங்கி முதல் ஷெட்யூல் வரைக்கும்தான் ‘ஐயோ தமிளா…’ என்று அலறினார் ஆனந்தி. அதற்கப்புறம் செகன்ட் ஷெட்யூலுக்கு புலவர் தருமி ரேஞ்சுக்கு பின்னி எடுத்துவிட்டாராம். எல்லாம் பிரபுசாலமன் புண்ணியம். ‘பொண்ணே… இந்த படத்துக்கு நீதான் டப்பிங் பேசணும். அதனால் ஷுட்டிங் ஸ்பாட்ல நாங்க யாரும் உங்கிட்ட தமிழை தவிர வேறு லாங்குவேஜ் பேச மாட்டோம். நீயும் பேசக் கூடாது’ என்று கூறிவிட்டாராம். வேறு வழி? தமிழ் வெந்துருச்சி… அப்புறமா வந்துருச்சு!
இந்த படத்தில் லைட் மேனிலிருந்து டைரக்டர் வரைக்கும் எல்லாரும் ஊறுகாயாய் ஊறி உப்புமாவாக காய்ந்து போனது தனிக்கதை. ஆனால் கயல் ஆனந்தி காயவில்லை. நனைந்திருக்கிறார். அதுவும் தினந்தோறும் ஆறு மணி நேரம். ‘படத்தில் ஒரு சுனாமி சீன் வருது. அதுக்காக பெரிய வாட்டர் டேங்க் கட்டி அதுக்குள்ள என்னை இறக்கிவிட்டுட்டாங்க. தினமும் ஆறு மணி நேரம் தண்ணியிலேயே மிதந்தேன். ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். எல்லா கஷ்டமும் பலனா மாறி வந்து என்னை குளிப்பாட்டப் போவுது. நம்பிக்கையோடு கண்ணடிக்கிறார் கயல்.
அந்த அழகுல எத்தனை புயல் கரையோரத்திலேயே கன்வின்ஸ் ஆகி வலுவிழக்கப் போவுதோ?