ஆடே ஆடே சவுக்கியமா? அப்புறம் வெட்டுவேன், பொறுத்துக்கணும்?
வைகாசி பொறந்தாச்சு படத்தில் பிரசாந்த்தை அறிமுகப்படுத்தியவர்தான் இயக்குனர் ராதாபாரதி. அதற்கப்புறம் கிழக்கே வரும் பாட்டு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துவிட்டு அப்படியே காலாற வேறு வேற லாங்குவேஜ் படங்களை இயக்க போய்விட்டார். கன்னடம், போஜ்பூரி, தெலுங்கு என்று சுற்றித்திரிந்தவர் மீண்டும் ரிட்டர்ன். ‘முன்னெல்லாம் படம் எடுக்கறது கஷ்டம். ரிலீஸ் பண்ணுறது ஈஸி. இப்போ படம் எடுக்கறது ஈஸி. ரிலீஸ் பண்றது கஷ்டம்!’ என்று கூறுகிறார். அப்படின்னா ட்ரென்ட்ல இருக்காருன்னுதானே அர்த்தம்? புதுமுகம் செங்குட்டுவனையும் புதுமுகம் அக்ஷயாவையும் ஜோடியாக நடிக்க வைத்து நண்பர்கள் நற்பணி மன்றம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
எங்கோ வெளியூரில் ஒரு ஓட்டலில் ரூம் போட்டு தங்கி சீன் எழுதிக் கொண்டிருந்தாராம். ஜன்னலுக்கு வெளியே அரட்டை அடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் கூட்டத்தில் தென்பட்டவர்தான் இந்த செங்குட்டுவன், தம்பி ஸ்பார்க்கா இருக்கானே… யாருப்பா நீ என்று விசாரிக்க, நான்தான் இந்த ஓட்டலோட ஓனர் மகன் என்றாராம் அவர். அப்புறமென்ன? இலையோடு கொழுக்கட்டை! பேசி கரைத்து படம் எடுக்க கிளம்பிவிட்டார்கள் எல்லாரும்.
பிரசாந்தையும் இப்படிதான் ரோட்ல விளையாடிட்டு இருக்கும் போது பார்த்தேன். யாருய்யா பையன்? நல்லாயிருக்காரேன்னு விசாரிச்சா, நம்ம தியாகராஜனோட பையன்னு சொன்னாங்க. அப்புறம் அவர்ட்ட பேசினேன். பையன் படிக்கணுமேன்னாரு. கதையை கேளுங்க. அப்புறம் முடிவெடுங்கன்னு கதையை சொன்னேன். படிப்ப அப்புறம் பார்த்துக்கலாம்னு நடிக்க வச்சாரு. நம்ம செங்குட்டுவன் தம்பியும் அப்படிதான் வந்திருக்கு என்றார்.
படத்தில் நான் கடவுள் ராஜேந்திரனுக்கும் ஒரு வெயிட்டான காமெடி ரோல். இப்போது இவர்தானே டெரர் காமெடியன்? ஆடுகளை வெட்டி அதன் இறைச்சியை வியாபாரம் செய்யும் அவர், அந்த ஆட்டின் மீதே எவ்வளவு பரிவோடும் பாசத்தோடு இருக்கிறார் என்பதை வயிறு குலுங்க எடுத்திருக்கிறாராம் ராதாபாரதி.
முத்தம் கொடுத்த ஆட்டையே ரத்தம் பார்க்குறது காமெடியா? சொல்லுங்க ராசு சொல்லுங்க…!