காஷ்மீரின் துயர் துடைக்க ஆன்ட்ரியா பாட்டு
காஷ்மீரில் கடந்த மாதம் கொட்டித் தீர்த்த பெருமழை ஒட்டுமொத்த ஆப்பிள் தேசத்தையே நிலைகுலையச் செய்துவிட்டது. பேரிடரின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள காஷ்மீரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ஈமா என்று அழைக்கப்படும் ஈவன்ட் அன்ட் என்டர்டெயின்மென்ட் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்.
“நாங்கள் இருக்கிறோம், காஷ்மீரின் நம்பிக்கைக்கு…” என்ற புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது ஈமா. இத்திட்டம் குறித்தும், இதன் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான சித்தார்த் கனேரிவாலா. நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகையும், பாடகியுமான ஆன்ட்ரியா. வெள்ளத்தால் உருக்குலைந்து கிடக்கும் காஷ்மீரை இயல்பு நிலைக்கு கொண்டு வர ஒட்டுமொத்த தேசமும் நிதியுதவி அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இத்திட்டத்தின் ஒருபகுதியாக, வரும் 18-ந் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீ முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கில் வண்ணமிகு கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம், நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியா, லட்சுமி ராய், பாடகி சக்திஸ்ரீ கோபாலன், பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், ஹரிச்சரண், ரஞ்சித், ராகுல் நம்பியார், திருச்சூர் சகோதரர்கள் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். ஆடல், பாடல் என களைகட்ட உள்ள அந்த நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதியானது, காஷ்மீரின் துயர் துடைப்பு பணிக்கு வழங்கப்படும்.
சென்னையில் மட்டுமல்லாது, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் இதுபோன்ற நிதிதிரட்டும் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது ஈமா.
காஷ்மீரின் துயர் துடைப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள தொண்டு நிறுவனங்களுக்கோ, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பேரிடர் மீட்பு நிவாரண அமைப்புகளுக்கோ தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்க வேண்டும் என ஈமா நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.