இசையமைப்பாளர் ஆகிறார் ஆன்ட்ரியா?
கம்ப்யூட்டர் மியூசிக் வந்த பின்பு கர்நாடகமாவது? சங்கீதமாவது? தற்போதைய சூழ்நிலையில் ஆளாளுக்கு கீபோர்டை அமுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலரது இசை தேன். சிலரது இசை தேள் கொடுக்கை விடவும் பயங்கரமான விஷம். இப்படியெல்லாம் இவர்கள் ரசிக மஹா ஜனங்களை படுத்தி எடுக்க பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முதல் காரணம் சம்பளம். பாடல்கள் சுமாராக ஹிட்டாகிவிட்டாலே, சம்பளத்தை கோடிக்கு கொண்டு போய்விடுகிறார்கள் இந்த இசை விற்பன்னர்கள். (இசை விற்பனையாளர்கள்?)
வச்சா குடுமி… சிரைச்சா மொட்டை என்றொரு பழமொழி உண்டு தமிழில். ‘என் படத்திற்கு இசையமைத்தால் எ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்கணும். இல்லேன்னா நானே…’ என்று முடிவெடுத்த டைரக்டர் எஸ்.ஜே. சூர்யா ‘என்னத்தை போட்டு வச்சுருக்கார்’ என்பதை அறிய இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். படத்திற்கே ‘இசை’ என்று பெயர் வைக்கிற அளவுக்கு தன் மியூசிக் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் அவர். தனுஷின் அப்பா கஸ்துரிராஜாவே கூட ஒரு மியூசிக் டைரக்டர்தான் என்பது அச்சத்தை வரவழைக்கும் இன்னொரு நியூஸ்.
இந்த இசையுலகத்திற்கு வந்த இக்கட்டான நேரத்தில்தான் பொன்னான இன்னொரு செய்தியும் வந்து சேர்ந்திருக்கிறது. அது? விரைவில் நடிகை ஆன்ட்ரியா ஒரு படத்திற்கு இசையமைக்கப் போகிறாராம். கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றவர் அவர் என்கிறார்கள். அது மட்டுமல்ல, பியானோவில் மாஸ்டராம். குரல் வளமும் நன்றாகவே இருக்கிறது. இவ்வளவு இருந்தால் போதாதா? அவரை இசையமைப்பாளர் ஆக்குவதற்கு கோடம்பாக்கத்தின் முன்னணி முகங்கள் முண்டா தட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.
அவர்களில் முதல் பெருமையை தட்டிக் கொண்டு செல்லவிருப்பவர் கவுதம் மேனன் என்கிறது கோடம்பாக்கத்தின் சந்து பொந்து தகவல்கள். பந்து பொறுக்குன மாதிரியும் ஆச்சு. பயிற்சி எடுத்த மாதிரியும் ஆச்சு! நடத்துங்க…