ஐந்து இடங்களில் வேலைகள் பரபர… பொங்கலுக்கு தயாராகும் அனேகன்!
பள்ளம் எப்போ விழும்? பாய்ஞ்சு எப்படி நிரப்பலாம்? என்றே காத்திருப்பார்கள் போலிருக்கிறது. பொங்கலுக்கு ஐ வருவது கஷ்டம்தான் என்கிற தகவல் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இதையடுத்து ஐ படத்திற்காக போடப்பட்ட தியேட்டர்களை மடக்கி தங்கள் திரைப்படங்களை அங்கு வெளியிட்டுவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள். இதில் அனேகன் முதலிடத்தில் இருக்கிறது. எப்படி?
ஐ படத்தின் சிட்டி வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதே அனேகன் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம்தான். மற்றவர்களை விட ஐ படத்திலிருக்கும் இடியாப்ப சிக்கலை நன்கு அறிந்தவர்களும் இவர்கள்தான். அதனால் உடனடியாக ஒரு முடிவை எடுத்தார்களாம். ஏற்கனவே யாராவது ஜகா வாங்கினால் அனேகனை நுழைத்துவிடலாம் என்ற திட்டத்தில் படத்தின் பின் சேர்ப்பு பணிகளை முடுக்கி விட்டிருந்தார்கள். இன்று மாலையிலிருந்து அதில் இன்னும் வேகம் கூட்டியிருக்கிறார்கள்.
இன்று மாலைக்கு பிறகு ஐந்து இடங்களில் அனேகன் படத்தின் வேலைகள் பரபரவென நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஏழு நாட்கள் இருக்கு. அதற்குள் பெரிய அதிசயத்தையே நிகழ்த்தாலும். ஓடுங்க. வேலையை மளமளன்னு முடிங்க என்று தனது உதவியாளர்களை விரட்டிக் கொண்டிருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.
சரி… வேறு என்னென்ன படங்கள் பொங்கலுக்கு வரக்கூடும்?
விஷாலின் ஆம்பளை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படம்தான். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் டார்லிங். அதற்கப்புறம் சித்தார்த்தின் எனக்குள் ஒருவன். இப்போது அனேகன். என்னை அறிந்தால், ஐ இரண்டும் பொங்கலுக்கு இல்லையென்றால் போட்டி மிதமாதான் இருக்கும் போல!