அங்குசம் / விமர்சனம்
ஆறாயிரம் கிலோ யானையை கூட அரையடி அளவுள்ள அங்குசம், பெண்டு நிமித்துகிற பேராற்றலை சினிமாவாக காட்டினாலென்ன என்று நினைத்திருக்கிறார் மனு கண்ணன். பெயரிலேயே ‘மனு’ இருப்பதால், மக்கள் சார்பாக மனு போடுகிற கதையை யோசித்திருக்கிறார் போலும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பலா பலன்கள் பற்றிதான் சொல்கிறது இந்த படம். இப்படியொரு கதையை யோசித்ததற்காகவே தெருமுனை கூட்டம் போட்டு திணற திணற பாராட்டு விழா நடத்தலாம் ம.கவுக்கு.
வாத்தியார் மகனான ஸ்கந்தா பக்கத்து ஊரிலிருக்கும் ஜெய்தி குகா மீது காதல் கொள்கிறார். முற்பாதி வரைக்கும் இவர்களின் இளமை விளையாட்டு நம்மை சில இடங்களில் ரசிக்கவும் சில இடங்களில் நெளியவும் வைக்கிறது. ‘கதையில திருப்பமேயில்லையேப்பா. இடைவேளையோட எஸ்கேப் ஆகிடலாமா ’ என்று யோசிக்கும் போதுதான், ஃபுல் சரக்கும் போதை தெளியா புன்னகையுடனும் ஒரு விஷயத்தை ஓப்பன் பண்ணுகிறார் சார்லி. அந்த ஊர்லயே தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிந்தவர் அவர்தான். ‘எம்.எல்.ஏ ஸ்கூல் கட்டுனதுல உள்ள முறைகேட்டை தெரிஞ்சுக்கணும்னா இந்த சட்டத்தின் படி தெரிஞ்சுக்கலாம்’ என்று ஹீரோவை உசுப்பிவிடுகிறார். அதற்கப்புறம் கதை சூடு பிடித்துக் கொள்ள, அப்பாடா… தப்பித்தோம்!
பின்பாதி முழுக்க, ஒரு கவர்மென்ட் ஆபிஸ் எப்படியெல்லாம் அப்பாவி பிரஜையை அல்லாட விடுகிறது என்பதும், அது சொல்லும் இழுவை பதில்களுக்கெல்லாம் ஹீரோ எப்படி ரீயாக்ட் பண்ணுகிறார் என்பதும்தான். ஒரு பெரிய ஹீரோ, மக்களால் நன்கு அறியப்பட்ட ஹீரோ செய்ய வேண்டிய கேரக்டரை புதுமுகம் ஸ்கந்தா செய்திருக்கிறார். அது உறுத்தவேயில்லை என்பதுதான் அந்த கேரக்டருக்குரிய ஸ்டிராங் பாயின்ட். அதற்காக சிரிக்க வேண்டிய காட்சிகளில் கூட ஸ்கந்தா உஷ்ணகந்தாவாக இருப்பதுதான் உறுத்தல். பாடல் காட்சிகளில் இவரது துறுதுறுப்புக்கு எக்ஸ்ட்ரா மார்க் கொடுக்கலாம்.
ஓவியாவுக்கு ஓவர் மேக்கப் போட்டதை போலிருக்கிறார் ஜெய்தி குகானி. காதல் காட்சிகளில் முடிந்தவரை இளமை காட்டுகிறார். தமிழ்சினிமாவில் நெடுங்காலத்திற்கு முன் வந்திருந்தால், மார்க்கெட்டில் நெடுங்காலம் தள்ளியிருக்கலாம். இப்போது?
நடுவிலேயே பொசுக்கென செத்துப் போனாலும் சார்லியின் கேரக்டரில் நிறைய உயிரோட்டம் இருக்கிறது. உள்ளுக்குள் ‘நீரோட்டமும்’ இருக்கிறது. லஞ்சத்திற்கு எதிரான ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுக்கும் சார்லிக்கு ஹீரோவே அவ்வப்போது ‘சரக்கை’ லஞ்சமாக கொடுப்பதுதான் ‘உறங்கிட்டீங்களா டைரக்டரே…’ டைப்.
எம்.எல்.ஏ வாக வரும் தண்டபாணியும், அரசு அதிகாரியாக வரும் பாலாசிங்கும், ஸ்கந்தாவை சமாளிக்க முடியாமல் திணறுவதை அவரவர் அனுபவத்தோடு முடிச்சு போட்டு ரசிக்க முடிகிறது.
இப்படியொரு சட்ட நுணுக்க பிரச்சனையை படமாக்கும் போது ஏற்படும் அபாயம் எதையும் இதில் நமது தலையில் ஏற்றவில்லை டைரக்டர் மனு கண்ணன். ஒரு வழக்கமான மசாலா படத்திற்குரிய அத்தனை விஷயங்களுக்கும் நடுவில்தான் இந்த த.அ.சட்டம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் கோனார் தமிழ் உரைக்கு நடுவில் ஆனந்த விகடன் பக்கங்களை சேர்த்த விறுவிறுப்பு வந்துவிடுகிறது அங்குசத்தில்.
முக்கியமான நடிகர்களின் நடிப்பை அளவோடு ஃபில்டர் செய்த மனுக்கண்ணன், பக்கத்து ஊர் வில்லன் என்றொருவரை காட்டியிருக்கிறார். மனுஷன் சும்மா நில்லுன்னா கூட நிற்காமல் நடிக்க ஆரம்பித்துவிடுகிறார். ஹீரோவை வெட்டியே தீருவது என்று நரம்பெல்லாம் துடிக்க முழங்கும் அவர், அதே ஹீரோ தன் வீட்டு வாசலில் வந்து கத்தி அடங்கிய பின், அவன் கட்சியில் சேர்ந்து கொள்வதெல்லாம் கெக்கேபிக்கே சமாச்சாரம். ‘நடிக்காம இருக்கணும்னா எக்ஸ்ட்ரா சம்பளம் தர்றேன்’ என்று அவரிடம் பேசி இழுத்து வந்திருக்கலாம்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்களில் பெரிய விசேஷமில்லை. ஆனால் அந்த ‘நுற்றாண்டின் துவக்கம்’ பாடல் மட்டும் விசேஷம்.
மக்களுக்கு தேவையான படம். ‘தேவையா எனக்கு?’ என்று தயாரிப்பாளரை யோசிக்க வைக்காமலிருப்பது அதே மக்களின் விருப்பத்தில் தானிருக்கிறது.
-ஆர்.எஸ்.அந்தணன்