அப்புறம் பார்க்கலாம் அனிருத் கதவடைப்பு!
நாபிக் கமலத்திலிருந்து ‘நைய்யோ புய்யோ’ என்று கத்தி கதறுவதுதான் பாட்டு என்றாகிவிட்ட பிறகு, யாரு வாசிச்சா என்ன? பேமஸ்சா இருந்தா போதும். அதை வச்சு ஆடியோ கம்பெனியில் அக்ரிமென்ட் போட்டா போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டது சினிமாவுலகம். அதிலும் அனிருத் மார்க்கெட் அவ்ளோ பெரிய உசரத்திலிருக்கிறது. அவரே கிடைத்தால் வானளாவிய சவுகர்யம் என்று நினைக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இத்தனைக்கும் நானும் ரவுடிதான் படத்தில் வந்த மாதிரி அற்புதமான மெலடிகளையும் அவரால் உருவாக்க முடியும். என்ன காரணத்தினாலோ கூச்சலையும் எரிச்சலையும் ஏற்படுத்தி வருகிறார் அனிருத்.
விரைவில் வெளிவர இருக்கும் ‘ரெமோ’ படத்தின் டைட்டில் சாங், பயங்ங்….ங்கரம்! கிராமபோன் தட்டில் சுத்தியல் விழுந்த மாதிரி ஒரே குய்யோ முய்யோ. (அதுதான் யூத்துங்க ட்ரெண்டு என்று இன்னொரு பக்கம் கட்சி சேர்ந்து நிற்கிறது அனிருத்தின் உயிர் பொருள் ஆவி உள்ளடக்கிய ரசிகர் கூட்டம். அது வேற…)
இந்த நிலையில்தான் அவர் புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறாராம். யார் வந்து கேட்டாலும் தான் கேட்கிற தொகையை கொடுக்கத் தகுதியுள்ள ஆட்களுக்கு இசையமைத்து வந்த அனிருத், இனிமேல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களோடு நிறுத்திக் கொள்ளப் போகிறாராம். வசவசன்னு படம் பண்ணினால், முழுசாக அதில் கவனம் செலுத்த முடிவதில்லை என்பதுதான் அனிருத் சொல்ல வரும் காரணம்.
அனிருத் இல்லேன்னா ஹிப் ஹாப் தமிழன். அவரும் இல்லேன்னா வேற யாரோ ஒரு டிப் டாப் தமிழன். உருட்டறதுன்னு முடிவெடுத்த பிறகு, அதை யாரு உருட்டுனா என்ன?