அனிருத் குஷிக்கு அணை போட்ட படம்! அப்செட்டில் குட்டி ரஹ்மான்?
அடுத்த கட்டத்திற்கு போய்விட்டார் அனிருத். அவரது சம்பளம் ஒரு கோடி என்றும் இல்லையில்ல ரெண்டு கோடி என்றும் கோடம்பாக்கம் தாறுமாறாக கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு பொருத்தமாக ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் என்று அனிருத்தை நோக்கி அவசர கதியில் பெரிய பெரிய இயக்குனர்களே ஓடுவார்கள் போல தெரிகிறது. ‘பாத்திரத்தை உருட்டுற மாதிரி என்னய்யா இசை இது?’ என்று மெலடி விரும்பிகள் மனம் கசங்கினாலும், யூத்துகள் மத்தியில் அனிருத்துதான் இப்போதைக்கு இசை ராசா!
இந்த நேரத்தில் அந்த பொல்லாத ஸ்பீட் பிரேக்கர். உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜை கை கழுவி விட்டுவிட்டு அனிருத் பக்கம் வந்த படம் இதயம் முரளி. என்றென்றும் புன்னகை பட இயக்குனர் அகமது இயக்கவிருப்பதாக சொல்லப்பட்ட இந்த படம், துவக்க நிலையிலேயே வாடி வதங்கி விட்டதாம். ஒரு வெற்றிப்பட இயக்குனர். ரசிகர்கள் மத்தியில் நம்ம வீட்டு புள்ள என்று பேசப்பட்ட உதயநிதி ஸ்டாலின், இவர்களுடன் அனிருத் என்று காம்பினேஷன் பலமே கன்னாபின்னாவென்று இருக்கிறது. பணத்திற்கும் பஞ்சமில்லாத கம்பெனி உதயநிதியின் ரெட் ஜயன்ட் மூவிஸ். அப்படியிருக்க, இதயம் முரளி ஏன் நிறுத்தப்பட்டது?
இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சா, அனிருத்தின் நெஞ்சுவலிக்கு நாங்க ஒரு மருந்து தந்திருக்க மாட்டோமா என்கிறார்கள் இங்கே. இந்த படம் நின்று போனால் அவருக்கு ஏன் நெஞ்சு படபடக்கணும்? வேறொன்றுமில்லை, ஹாரிஸ் ஜெயராஜிடமிருந்து பிய்த்துக் கொண்டு வந்த கூட்டணியல்லவா? அதனால் உருகி உருகி மியூசிக் போட்டாராம். ராப் பகல் பாராமல் மெட்டு போட்டாராம். எல்லாம் கடல்ல கொட்டுன உப்பா போச்சே என்பதுதான் அவரது வருத்தம்.