மலேசிய ஹீரோவுக்கு அடி… சூர்யா செய்தது சரியா?

இந்த வாரம் ‘அஞ்சான்’ ரிலீஸ். அங்கிங்கெணாதபடி எங்கெங்கும் அஞ்சானாகவே இருப்பதால், அதே நாளில் திரைக்கு வரவிருந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கும் ‘சினேகாவின் காதலர்கள்’ படத்திற்கும் தியேட்டர் நெருக்கடி. வலிமையான ஹீரோக்கள் நடிக்கிற படங்கள் வரும்போது அவரவர்க்கு ஏற்படும் இயல்பான இடைஞ்சல்தான் இவையெல்லாம். ‘அஞ்சானுக்கு டிக்கெட் கிடைக்காம வழிஞ்சு வர்ற கூட்டம் வந்தாலே போதும்’ என்று கூறிவிட்டார் பார்த்திபன். சினேகா ஆரம்பத்திலிருந்தே கான்ஃபிடன்ட். இன்னும் சொல்லப் போனால், ‘அஞ்சான் வரட்டும். நாங்களும் வர்றோம். அவங்க கைதட்டல் அவங்களுக்கு. எங்க கைத்தட்டல் எங்களுக்கு’ என்று முன்னமே கூறிவிட்டார் அப்படத்தின் டைரக்டர் முத்துராமலிங்கன்.

இப்படி உள்ளூரில் உடுக்கையடி கொடுத்துவிட்டு மலேசியாவிலும் மட்டையடி கொடுத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. அங்கென்ன பிரச்சனை? கடந்த வாரம் திரைக்கு வந்திருக்கிறது மலேசியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘மைந்தன்’ என்ற திரைப்படம். குமரேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் புன்னகைப்பூ கீதா, ஷைலா நாயர், ராப் இசை பாடகர் சீஜே, ரேபிட் மேக், டிஎச்ஆர் உதயா, புகழ்பெற்ற பாடகர் டார்க்கி, கலைமாமணி கேஸ் மணியம், கலைமாமணி ஏகவல்லி, பொன் கோகிலம், திலா லக்‌ஷ்மண், விக்கி நடராஜா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி முதல் நான்கு நாள் வசூலே ஐந்து லட்சம் வெள்ளி என்கிறது மலேசிய ரிப்போர்ட் ஒன்று. இதுவரை வெளியான எந்த தமிழ் படத்திற்கும் இந்தளவுக்கு கலெக்ஷனும் கைதட்டல்களும் வந்ததில்லையாம். சரி, தியேட்டரை அதிகப்படுத்தலாம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருந்தால், ‘மிஸ்டர் சூர்யா வர்றாரு. கொஞ்சம் படத்தை தியேட்டர்லேர்ந்து கௌப்புறீங்களா?’ என்கிறார்களாம் மலேசியா திரையரங்குகளில். வேறொன்றுமில்லை, அங்கும் ஏராளமான திரையரங்குகளில் ‘அஞ்சான்’ திரையிடப்படவிருக்கிறது.

உள்ளூரோ வெளியூரோ… ‘யானை வாக்கிங் வரும்போது எறும்புக்கென்ன ஜாக்கிங் வேண்டி கிடக்கு?’ என்கிற தியேட்டர்காரர்களின் மனநிலையை திகிலோடுதான் கவனிக்கிறது தமிழ்நாடும் மலேசியாவும்!

Read previous post:
மீண்டும் வந்த ஓ போடு ராணி

ராமராஜன் ஜோடியாக வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமானவர் ராணி. அதற்க்கு பிறகு குத்துப்பட்டு, கிளாமர்பாட்டு, வில்லி வேஷம் என்று எல்லா மொழிகளிலும் சேர்த்து 400 படங்களுக்கு மேல் நடித்து...

Close