சென்னை வந்த அஞ்சலி ஊரிலில்லாத மு.களஞ்சியம் பிரச்சனை முடியுமா? தொடருமா?
கடந்த ஆறேழு மாசமாக காணாமல் போயிருந்த அஞ்சலியிடம் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களாவது இருக்கும் என்று தேடி தேடி அந்த முயற்சியில் தோற்றுப் போனார்கள் அங்கிருந்த அத்தனை பேரும்! கன்னம், காது, இன்னபிற அழகுகள் எல்லாமே குன்றாமல் குறையாமல் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருந்ததுதான் ஆச்சர்யம். இன்று சென்னையில் நடைபெற்ற புதிய படத்தின் துவக்க விழாவில் வெகு உற்சாகமாகவே கலந்து கொண்டார் அஞ்சலி.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான எல் எம் எம் நிறுவனம் தயாரிக்கிறது என்பதால் பெருமளவு சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்று நேற்றிலிருந்தே கூறப்பட்டு வந்தது. இந்நிறுவனத்தின் பில்லர்களில் ஒருவரான முரளிதரன், தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தவர். அதுமட்டுமல்ல, ஆளுங்கட்சியின் அனுதாபி என்றும் கூறப்படுகிறது. இதற்கப்புறமும் அஞ்சலியின் ஸ்கின் மீது, எவருக்காவது கை வைக்க துணிச்சல் வருமா? என்றெல்லாம் படக்குழுவினர் பேசிக் கொண்டிருந்ததை இன்று நிரூபணம் ஆக்கியிருந்தார்கள்.
அப்படியென்றால் அஞ்சலி பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதா? அதெப்படி வரும்? அஞ்சலி விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வரும் மு.களஞ்சியம், இன்று சென்னையில் இல்லை. அவரது தாயார் காலமாகிவிட்ட சோகத்திலிருக்கிறார் அவர். அன்பு தாயாரின் ஈம சடங்குகளை நிறைவேற்ற அவர் சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில்தான் அஞ்சலியின் சென்னை விசிட். இருந்தாலும், படப்பிடிப்பு முழுக்க சென்னையிலேயேதான் நடைபெற இருக்கிறதாம். ஒருவேளை மு.களஞ்சியம் தனது இன்றிமையாத கடமையை முடித்துவிட்டு திரும்பும் நேரத்தில், அஞ்சலி சென்னையிலிருந்தால், லேசான பரபரப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கில்லை என்கிறது அதிகாரபூர்வமற்ற சில தகவல்கள்.