குத்துசண்டை இல்ல. கேரம் போர்டு இல்ல. காதல் இல்ல! ஆனால் இது ஒரு சென்னை படம்!
மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் கதை! ஒரு காலத்தில் தமிழ்சினிமா கோவையில் மையம் கொண்டிருந்தது. நாட்டாமை, சின்ன கவுண்டர் மாதிரியான வெற்றிகளை கண்ட கொங்கு கதைகள் சுந்தர்சி படம் வரைக்கும் தொடர்ந்து அப்படியே நீர்த்துப்போனது. அதற்கப்புறம் மதுரை. சந்து பொந்தெல்லாம் மதுரை வாசத்துடன் வந்த படங்களில் லேட்டஸ்ட்டாக வந்து கலெக்ஷன் பார்த்த படம் ஜிகிர்தண்டா. இருந்தாலும் மதுரை படங்களில் மறக்க முடியாதவை சுப்ரமணியபுரம், காதல் உள்ளிட்டவை.
என்னுயிர் தோழன் படத்திற்கு பிறகு சென்னை பாஷையில் கலக்கிய படங்கள் ஒன்றுமே இல்லை. வெகு நீண்ட இடைவெளிக்கு பிறகு அட்டக்கத்தி, அதற்கப்புறம் அதே ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ். விரைவில் திரைக்கு வரவிருக்கும் பூலோகம் படமும் சென்னை கதைதான். சென்னை பாஷை அதோடு சரி என்று நினைத்தால், நாங்களும் இருக்கோம்ல? என்று வந்திருக்கிறார்கள் ஆக்கம் குழுவினர். ஒருவனை உருவாக்கறதுதான் ஆக்கம். எங்க கதை நார்த் மெட்ராஸ்லேயே இன்னும் டீப்பான வியாசர்பாடி கதை என்கிறார் இப்படத்தின் இயக்குனர் வேலுதாஸ் ஞானசம்பந்தம். இவர் மு.களஞ்சியத்திடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
நார்த் மெட்ராஸ்னா குத்து சண்டை இருக்கும். கேரம் போர்டு இருக்கும். ஆனால் எங்க படத்தின் மையக்கரு அது இல்ல. வேற என்றார். அப்படின்னா காதலா என்றால், ‘படத்தில் காதல் இருக்கு. ஆனால் அதுதான் கதையில்ல. ஹீரோயின் வைதேகி, ஹீரோ சதிஸ்ராவனை ஒன் சைடா லவ் பண்ணுவா. ஆனால் அவன் எல்லா பெண்களையும் பார்க்கிற பார்வையே வேற. அவன் அவளை காதலோட பார்க்கவே மாட்டான். எங்க படம் காதலையெல்லாம் தாண்டி வேறொன்றை சொல்லப்போவுது’ என்றார்.
நல்லா கேட்டுக்கங்க நல்லா கேட்டுக்கங்க… இந்த படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முக்கிய ரோல் இருக்காம். அதுவும் நார்த் மெட்ராஸ் ரவுடியாக! உலகத்துலேயே நீங்க கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. இந்த படத்தில் ஹீரோவுக்கு ஒரு அறிமுக பாடல் வச்சுருக்கோம். ஆனால் அது முருகக் கடவுளை பற்றிய பாட்டு என்கிறார் வேலுதாஸ் ஞானசம்பந்தம்.
எக்குதப்பா எடுக்கிற கதையெல்லாம் கோக்குமாக்கா ஓடிடுது. ஆக்கம் அப்படியும் அமையும் போல!