சென்சார்ல கதற விட்றாங்க! மொட்டை ராஜேந்திரன் பட இயக்குனருக்கு சோதனை!

தொட்டுக்கோ, துடைச்சுக்கோ என்று கையில் கழுத்தில் இருப்பதையெல்லாம் அடகு வைத்து படம் எடுத்தால், ஆங்காங்கே கட் கொடுத்து அழுதுக்கோ, அலறிக்கோ என்பார்கள் போலிருக்கிறது சென்சாரில். பெரிய படங்களை கண்டும் காணாமலும் விட்டுவிடும் சென்சார் அமைப்பு, அதுவே சின்னப்படம் என்றால் சுண்ணாம்பு டப்பியை திறந்து இரண்டு கண்ணிலும் தடவி அனுப்பும் வழக்கத்தை கொண்டிருக்கிறது. அப்படியொரு பெரும் அவஸ்தைக்கு ஆளாகியிருக்கிறார் ‘யானை மேல் குதிரை சவாரி’ பட இயக்குனரும் தயாரிப்பாளருமான கருப்பையா முருகன்.

“குழந்தைகளை மகிழ்விக்க வேண்டும். அவர்களுக்காக நல்ல ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக சில குழந்தைகளையும், எல்லாரும் விரும்பும் மொட்டை ராஜேந்திரனையும் வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். நானும் நண்பர்கள் பலரும் ஆளுக்கு கொஞ்சமாக பணம் போட்டு எடுத்த படம்தான் இது. எவ்வளவோ சிரமங்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் இந்த படத்தை முடித்தால், கடைசியில் சென்சார் போர்டு எங்களை நசுக்கி கொல்லாத குறையாக அனுப்பி வைத்துவிட்டதே” என்று வேதனைப்படுகிறார் கருப்பையா முருகன்.

என்ன நடந்ததாம்?

கத்தியால் குத்துவது போல ஒரு காட்சி. அதையும் அவுட் ஆஃப் போகசில்தான் எடுத்திருக்கிறார் முருகன். ஆனால் அதை நறுக்க வேண்டும் என்றார்களாம். அதையும் நறுக்கி, படத்திற்கு ஏ சர்டிபிகேட்டும் கொடுத்துவிட்டார்கள். சின்ன படங்களுக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்தால், அதை திரையிடும் போது டாக்ஸ் பிரச்சனை வரும். அதனாலேயே தியேட்டர்காரர்கள் படத்திற்கு முன்னுரிமை கொடுக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, சேட்டிலைட் உரிமையை விற்பதிலும் சிக்கல் நேரும். இதையெல்லாம் கருத்தில் கொண்ட டைரக்டர், எவ்வளவோ பணிந்து பேசியும் கொடுத்த ஏ விலிருந்து பின் வாங்கவே இல்லையாம் தணிக்கை அதிகாரி மதியழகன்.

“சமீபத்தில் வந்த ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் துப்பாக்கியால் சுட்டு விரலெல்லாம் பறந்து போவது போல சீன் இருக்கு. ரத்தம் சொட்ட சொட்ட பல காட்சிகள் அதில் இருக்கு. ஆனால் அந்த படத்திற்கெல்லாம் யு சர்டிபிகேட் கொடுத்தவர், அதில் 100 ல் ஒரு பங்கு வன்முறை கூட இல்லாத என் படத்திற்கு ஏ கொடுத்துட்டாரே” என்று கதறுகிறார் டைரக்டர்.

யானை மேல குதிரை சவாரி.
போயி பாரு தெரியும் உன் சேதி
குரங்கு பெடலில் சைக்கிள் ஓட்டி
கோடி கோடியா நிதியெல்லாம் திரட்டி,
இந்திய கடனை அடைக்கப் போறீங்களா
ஈழத் தமிழனை காக்கப் போறீங்களா?

என்று பாடல் வரிகள். அதில் ஈழத்தமிழன் என்ற வார்த்தைகயை நறுக்க சொல்லிவிட்டாராம் மதியழகன்.

சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார் ‘யானை மேல் குதிரை சவாரி’ டைரக்டர் கருப்பையா முருகன்.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இங்கே அந்தணன் யாரு?

‘உங்களில் யார் பிரபுதேவா?’ என்பதை போலதான் அந்த கேள்வி இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், பைக்கை நிறுத்திவிட்டு நான் பிரஸ்மீட் நடக்கும் இடத்தை அடைவதற்குள் ஏழெட்டு பேர் கிராஸ்...

Close