தமிழ்சினிமாவில் மேலும் ஒரு புரட்சி இயக்குனர் பராக் பராக்!
இன்னும் சில தினங்களில் திரைக்கு வரப்போகிற படம் வாய்மை! வெட்டிக்கூத்து, குத்துப்பாட்டு, கும்மிருட்டு ஆவி என்று தமிழ்சினிமா ‘பேட்டன்’ இன்னும் முப்பாட்டன் காலத்திலேயே இருப்பது வேதனைதான்! நடுவில் கொஞ்சம் ஜோக்கர்களும், அப்பாக்களும் வந்து ஹிட்டடித்திருப்பதால், கண்டென்ட் விஷயத்தில் கறையேறியிருக்கிறோமோ என்கிற நம்பிக்கையும் எட்டிப் பார்க்கிறது. இந்த நேரத்தில் ‘வாய்மை’ சொல்லப்போகும் கருத்தும், வசனங்களும் ஒவ்வொரு ரசிகனின் சட்டைக் காலரையும் மனசையும் கூட சேர்த்துப்பிடித்து உலுக்கும் என்பது நிச்சயம். ஏன்?
கண்டென்ட் அப்படிய்யா!
நாடு முழுக்க தூக்கு தண்டனைக்கு ஆதரவான குரல் பலமாக ஒலித்தாலும், தூக்கு தண்டனை இன்னும் ஒழியலையே என்பதுதான் இந்தப்படத்தின் மையக்கரு. அ.செந்தில் குமார் இந்தக் கதையை ஒரே நாள் இரவில் எழுதி முடித்தாராம். பல இரவுகள் தூங்காமல் கிடக்கும் மரண தண்டனை கைதிகளுக்காக இவர் ஒரு நாள் இரவு விழித்திருந்து எழுதிய கதை, இன்னும் எத்தனை பேரை உறங்காமல் விழித்திருக்கச் செய்து உலுக்கப் போகிறதோ?
ராஜீவ் கொலைக் கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை இந்த கதைக்காக இரண்டு முறை சிறையில் சென்று பார்த்திருக்கிறார் செந்தில் குமார்.
“இந்த கதைக்காக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் எழுதிய புத்தகங்கள் முதல் சந்துரு ஐயா அவர்களின் ஆலோசனை வரை பெற்றிருக்கிறேன். அரசியல் துளியும் இல்லாத, ஆனால் பார்ப்பவர்களை அரசியல் பேச வைக்கும் படம் இது. நான் கையில் எடுத்திருப்பது மனித நேயத்தை மட்டும் தான். இது சட்டத்துக்கோ, நீதிமன்றத்துக்கோ, அரசியல் வர்க்கத்துக்கோ எதிரான படம் அல்ல” என்கிறார் அ.செந்தில்குமார்.
“படத்தில் கவுண்டமணிக்கு முக்கிய வேடம். ஆனால் நீங்கள் வழக்கமாக பார்க்கும் கவுண்டமணி இதில் இருக்க மாட்டார்” என்ற செந்தில் குமாரின் ‘தில்’, தமிழகத்தை உலுக்கட்டும்! அதற்கப்புறமாவது ஒரு முடிவு வருகிறதா பார்ப்போம்!
To listen audio click below :-