கல்லறைத் தோட்டத்தில் ஒரு கம்ப்யூட்டர் செடி!

எனது முன்னாள் முதலாளி ஆன்ட்டோபீட்டர் மறைந்து இன்றோடு இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. அவரது மறைவின்போது நான் எழுதிய கட்டுரையை இங்கே மீள் பதிவு செய்திருக்கிறேன். இன்று அவர் இல்லை. அவர் உருவாக்கிய நிறுவனத்தில் நான் இல்லை. காலம் எவ்வளவு முறைதான் சோழிகளை உருட்டும்? உருட்டட்டும்… என் நினைவுகளில் இருந்து ஆன்ட்டோவை உருட்டி வெளியே தள்ளவே முடியாது.

ஆன்ட்டோவின் ஆசிர்வாதங்களோடு…

ஆர்.எஸ்.அந்தணன்

கல்லரைத் தோட்டத்தில் ஒரு கம்ப்யூட்டர் செடி!
July 14, 2012 at 10:04am

‘கர்த்தரே… உமது மைந்தன் ஆன்ட்டோ பீட்டரை உமக்கே திருப்பித் தருகிறோம். மூன்று தினங்களுக்குள் அவரை உயிர்ப்பித்து இதே மண்ணில் பிறக்கச் செய்வாயாக…’

கல்லறைத் தோட்டத்தின் அமைதியை கிழித்துக் கொண்டு ஒலித்த வெள்ளை அங்கி ஃபாதரின் பிரார்த்தனையையும், சுற்றியிருந்தவர்களின் விசும்பல்களையும் உணராதவராக உறங்கிக் கொண்டிருந்தார் ஆன்ட்டோ. கதறல்கள் விசும்பல்களாகி, அந்த விசும்பல்களும் அடங்கிய சூனிய பெருவெளிக்குள் அனைவரையும் தள்ளிவிட்ட ஆன்ட்டோ, மெல்ல குழிக்குள் இறக்கப்பட்டார். ஒரு சூரியனை இருட்டு விழுங்கிக் கொண்டது.

எனக்கும் அவருக்குமான சந்திப்பு எப்போது நிகழ்ந்தது? இதுவரை ஒரு நாள் கூட அதுபற்றி யோசிக்காத நான் மெல்ல திரும்பி பின்னோக்கி நகர்ந்தேன். பிரமிப்புதான் மிஞ்சுகிறது. பதினேழு வருடங்கள் ஓடிவிட்டன.

நண்பர் தமிழ்மகன்தான் அவரிடம் என்னை அனுப்பி வைத்தார். ‘நல்லவரா நமக்கு தோதானவரா ஒருத்தரை அனுப்பி வைங்கன்னாரு ஆன்ட்டோ. உங்க நினைப்பு வந்துச்சு. இன்டர்நெட்ல தினமும் ஒன்றோ ரெண்டோ செய்தி எழுதணுமாம். போறீங்களா?’ என்றார். போயிருந்தேன். அதுவரைக்கும் எனக்கும் கம்ப்யூட்டருக்குமான தொடர்பை கேட்டால் என்ன நினைப்பீர்களோ தெரியாது. கம்ப்யூட்டர் ஜோசியத்திற்காக என் காதுகளை ஒரு நிமிடம் கொடுத்திருக்கிறேன். அவ்வளவே…!

அதுமட்டுமல்ல, கம்ப்யூட்டர் ஆசாமிகள் என்றால் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் இங்கிலீஷையே உண்டு இங்கிலீஷையே ஏப்பம் விடுபவர்கள் என்பதும் என் யூகம். அலுவலகத்தின் உள்ளே நுழைந்தவுடன் தென்பட்ட வாசகம் என்னிடம் ரகசியமாக ஒரு ‘சபாஷ்டா’ சொன்னது. ஆமாம். வாசலிலேயே ஒரு வாசகத்தை எழுதி வைத்திருந்தார் ஆன்ட்டோ. ‘தமிழை வளர்க்க தமிழரிடம் தமிழில் பேசுங்கள்’

சம்பிரதாய பேச்சுகள் முடிந்து அவரே வந்து கம்ப்யூட்டர் முன் அமர்ந்தார். ‘இதுதான் மவுசு, இதுதான் கீ போர்டு என்று ஆரம்பித்து இதாங்க தமிழ்சினிமா.காம். இதுல நீங்க நியூஸ் போட்ட அடுத்த விநாடியே உலகத்துல எந்த மூலையில் இருக்கிறவங்களும் இதை படிக்க முடியும்’ என்று அவர் விவரிக்க விவரிக்க எனக்கு தலை சுற்றியது. ‘இன்னும் பத்து இருபது வருஷத்துல இது இல்லாம நிம்மதியா யாரும் ஒண்ணுக்கு கூட போக முடியாது’ என்றார் அவர். தமிழ் மகன் சரியான ஆள்ட்டதான் என்னை அனுப்பியிருக்காரா என்ற சந்தேகம் என் மனதில் மெல்ல எழுந்து அச்சமாக சூழ்ந்து கொண்டது. இருந்தாலும் அவரது பூச்சுற்றலை ஆர்வத்தோடு ரசிக்க ஆரம்பித்திருந்தேன்.

எனது நண்பன் ஒருவன் சிங்கப்பூரிலிருந்து எனக்கு எழுதுகிற கடிதம் பதினைந்து நாட்கள் கழித்து என் கையில் கிடைக்கிற காலத்தில் தனது ஸ்வீடன் நண்பர் ஒருவரை ஈ மெயிலில் அழைத்தார் ஆன்ட்டோ. இவரும் அவரும் மெயிலேயே பேசிக் கொண்டார்கள். எல்லாம் வினாடிகளில் அரங்கேறிக் கொண்டிருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் என் மீது அவருக்கும் அவர் மீது எனக்கும் நம்பிக்கை வர, ‘நாளையிலேர்ந்து ஒரு பத்து நிமிஷம் வாங்க. ரெண்டு நியூஸ் கொடுத்தா கூட போதும்’ என்றார். ‘அப்புறம் போம்போது மறக்காம பெருமாளை பார்த்துட்டு போங்க’ என்றார்.

அதற்குள் பெருமாள் சார் ஒரு கவரோடு காத்திருந்தார். சேரும்போதே ஒரு மாசத்து சம்பளம்! இந்த பதினேழு வருஷத்தில் ஒரு நாள் கூட 1 ந் தேதியை தவறவிட்டதில்லை. அரசு விடுமுறை இருந்தால் தவறியிருக்கும். மற்றபடி வாடகைக்கு வீட்டு ஓனரை வரச்சொல்லிவிட்டு கூட தைரியமாக போகலாம் அலுவலகத்திற்கு. தயாராக இருக்கும் நமக்கான சம்பளம். அப்படி ஒரு நேர்த்தி எதிலும். எப்போதும். இதுதான் ஆன்ட்டோவின் நிர்வாகம்.

வேலைக்கு சேர்ந்து ரெண்டாம் நாளே, ‘கையால எழுதறதெல்லாம் இன்னும் பத்து வருஷத்துல மறைஞ்சு போயிரும். கம்ப்யூட்டர்ல டைப் பண்ண பழகுங்க’ என்றார் வம்படியாக. எட்டு வரி அடிக்க ஒரு மணி நேரம் ஆனது. ‘பழகுங்க… சாத்தியப்படும்’ என்ற அவரது பிரஷரினால்தான் இன்று மனதில் நினைக்க நினைக்க என்னால் இறக்கி வைக்க முடிகிறது.

உலகம் முழுக்க வெறும் முப்பதோ, முப்பத்தைந்து பேரோ படித்துக் கொண்டிருந்த தமிழ்சினிமா.காம் இன்று பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பொழுதுபோக்கு அம்சமாக வளர, ஆன்ட்டோவின் பங்களிப்பு மட்டும்தான் காரணம். அது என்ன தெரியுமா? ஒருமுறை கூட என்னை அவர் கடிந்து கொண்டதில்லை. எனது வேலையில் தலையிட்டதும் இல்லை. சினிமாக்காரர்களுக்கு எதிரான செய்திகளுக்காக சில நேரங்களில் அவர் காதுகளுக்கு புகார்கள் போனதுண்டு. ‘அது அவரு ஏரியா. நான் தலையிட மாட்டேன்’ என்று அழுத்தமான ஒரு பதிலோடு முடித்துக் கொள்வார்.

பாராட்டுகிற விஷயத்தில் வள்ளல். ‘நீங்க நம்ப வெப்சைட்டோட அசர்ட்’ என்று சமீபத்தில் ஒருநாள் அவர் என்னிடம் சொன்னபோது நான் முகம் சிவந்தேன். சார்… நான் டி.வி மீடியாவுக்கு போகலாம்னு இருக்கேன் என்று சொன்னபோது, ‘எங்க வேணா போங்க. ஆபிசுக்கு கூட வரவேணாம். தினமும் நியூசை அனுப்பிருங்க. அது போதும்’ என்றார். அப்படிதான் போய் கொண்டிருந்தது கடந்த மூன்று மாதங்கள்.

எனக்கும் அவருக்குமான உறவு எஜமானன்-ஊழியன் உறவாக இருந்ததேயில்லை. ‘அது உங்களோட சொந்த சைட் இல்லையா, நீங்க அதுல வொர்க் பண்றீங்களா?’ என்று அதிர்ச்சியாகியிருக்கிறார்கள் என்னுடைய பல சினிமா நண்பர்கள். அந்தளவுக்கு எனக்கு அங்கே சுதந்திரம் இருந்தது.

ஊழியர்களை வருடத்திற்கு ரெண்டு முறையாவது வீட்டுக்கு அழைப்பார். விரும்பியவர்களுக்கு ‘திரவமும்’ கூட கிடைக்கும் அங்கே. மூக்கு முட்ட பிரியாணியை தன் கையாலேயே சமைத்திருப்பார்கள் மேடம். அரட்டையும் ஜாலியுமாக பொழுது கழியும். மறுநாள் எதுவுமே நடக்காதது போல அவரவர் வேலையை செய்து கொண்டிருப்பார்கள் அலுவலகத்தில்.

இப்படி ஒரு முதலாளியை, நண்பரை எங்கே சந்திக்கப் போகிறேன் இனிமேல்?

நாற்பத்தைந்து வயதில் அசுர வளர்ச்சியை கண்டவர் அவர். கல்லறை தோட்டத்தில், ‘கர்த்தரே… உமது மைந்தன் ஆன்ட்டோ பீட்டரை உமக்கே திருப்பித் தருகிறோம். மூன்று தினங்களுக்குள் அவரை உயிர்ப்பித்து இதே மண்ணில் பிறக்கச் செய்வாயாக…’ என்ற ஃபாதரின் பிரார்த்தனையை மறுபடியும் நினைத்துப் பார்க்கிறேன். ஆன்ட்டோவின் அசுர வேகத்திற்கு முன் இந்த மூன்று நாட்களே அதிகம்.

இந்நேரம் பிறந்திருப்பார். அந்தக் குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் நானும் கூட கலந்து கொள்வேனோ என்னவோ?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ராமானுஜன் – விமர்சனம்

கணக்கே பேச்சு, எண்களே மூச்சு என்று வாழ்கிற ஒருவனுக்கு தமிழன் கொடுக்கிற ‘டார்ச்சர்’ என்ன? வெள்ளைக்காரன் கொடுக்கிற ‘ஃபியூச்சர்’ என்ன? இதுதான் கதை. இல்லையில்லை... வாழ்ந்த ஒரு...

Close