காபி வித் அனு, இப்போ களறி வித் அனு! பைட் மாஸ்டருக்கே வேர்க்கும் போலிருக்கே?
இந்திரா படத்தில் அறிமுகமான அனுஹாசன், சுஹாசினியின் சகோதரி என்பது பலருக்கு தெரிந்திருக்கும். சிலருக்கு தெரியாமலும் கூட இருக்கும். ஆனால் அந்த சிரிப்பு… குரல்… எல்லாமே சுஹாசினிதான். இந்திரா படத்தில் ஹீரோயினாகவும் நடித்த அனு, அதற்கப்புறம் வெயிட்டான ரோல் தேடி போகவும் இல்லை. அவரை தேடி அது போன்ற ரோல்களும் போகவில்லை. நடுவில் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் அனு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர் அதற்கப்புறம் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் லண்டன் பறந்துவிட, அனு என்ற மினி பொக்கேவை மறந்தே போனது தமிழகம்.
இப்போது ரீ என்ட்ரி. அதுவும் சும்மாயில்லை. விஜயசாந்திக்கு வெடக்கோழி கஷாயம் கொடுத்ததை போல மிடுக்கு துடிப்பாக வந்திறங்கியிருக்கிறார். வல்லதேசம் என்று லண்டனில் தயாரான படத்தில் அனுதான் ஹீரோயின். படத்தை தீபக் எஸ் துவார்க்நாத் என்ற இலங்கை தமிழர் இயக்கியிருக்கிறார். லண்டனில் தயாரான படம் என்றாலும் இந்திய தேசத்தின் வலிமையை சொல்லுகிற படமாக இருக்குமாம்.
ட்ரெய்லரில் யாரோ ஒரு தடியனை பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார் அனுஹாசன். எப்படிங்க பைட்டெல்லாம்? என்று ஆச்சர்யப்பட்ட பிரஸ்சிடம், நான் முறையா களறி கத்துகிட்டவ. லண்டன்ல என்னை ஒரு ஷாப்பிங் பண்ற இடத்தில் பார்த்த துவாரக்நாத், நீங்க எங்க படத்துல நடிக்கணும்னு கேட்டுகிட்டார். எனக்கு வசதியா லண்டன்லேயே ஷுட்டிங்கும் இருந்ததால் சந்தோஷமா நடிக்க ஒப்புக்கிட்டேன் என்றார்.
பிரபல இசையமைப்பாளர் எல் வைத்யநாதனின் மகன் எல்.வி.முத்துக்குமரசாமி இசையமைத்திருக்கிறார். சிம்பு ஒரு பாடல் பாடியிருக்கிறார். படம் வெளியாகி ஹிட்டடித்தால், லண்டனிலிருந்து ஒரு பெரிய டெக்னிகல் படையே வந்திறங்கினாலும் ஆச்சர்யமில்லை.