அனுஷ்கா காஜல் ஹன்சிகா தமன்னா! இப்படியெல்லாமா பிரச்சனை வரும்?
எங்களை தவிர யாரையும் பயன்படுத்தக் கூடாது என்று பெப்ஸி அமைப்புக்குள் இருக்கும் எல்லா சங்கங்களும் தயாரிப்பாளரின் தாவங்கட்டைய நசுக்கி வருவது காலம் காலமாக நடந்து வருகிற விஷயம்தான். ‘பெப்ஸி ஒற்றுமை ஓங்குக’ என்கிற கோஷம் நாளுக்கு நாள் வலுத்து, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் சுதந்திரத்தை உளுத்துப் போக வைப்பதால் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.
இப்படி தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் கொடுக்கும் இவர்களுக்கே இப்போது சிக்கல். அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி, தமன்னா ஆகியோர் தங்கள் அழகிய முகத்தில் பவுடர் போடவோ, பளபளப்பு கூட்டவோ பயன்படுத்தி வருவது இங்கிருக்கும் மேக்கப் மேன்களை அல்ல. மும்பையிலிருக்கும் மேக்கப் மேன்களைதான்! இவர்களை தங்களுடனேயே ஃபிளைட்டில் அழைத்து வருகிறார்கள். தங்களுடனே தங்க வைத்துக் கொள்கிறார்கள். இந்த அமர்க்களம் தாங்க முடியாமல் தயாரிப்பாளர்கள் அலறினாலும், எங்க அழகான முகத்தை பராமரிக்கிற இவங்களை பராமரிப்பது எங்களோட கடமையாச்சே என்று சமாதானம் சொல்லிவிடுகிறார்கள். அப்படியும் கோபப்படுகிற தயாரிப்பாளர்கள் எல்லாரையும் கோழி அமுக்குவது போல அமுக்கியும் விடுகிறார்கள்.
இந்த அட்டகாசத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று சத்யாகிரஹம் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம் மேக்கப் கலைஞர்கள். சுவத்துக்கு சுண்ணாம்பு அடிக்கிற மாதிரி அடிச்சா எங்க மூஞ்சு என்னாவறது என்று கதறும் மேற்படி அழகிகள் எப்படிதான் தப்பிக்கப் போகிறார்களோ?