அப்பா வேணாம்ப்பா – விமர்சனம்

‘குடி குடியை கெடுக்கும்’ என்கிற சம்பிரதாய அட்வைஸ்களை ‘ராவாக’ சொல்லாமல் சகலவித சுவாரஸ்யங்களோடும் இரண்டு மணி நேரப் படமாகத் தர முடியுமென்றால் அதுதான் ‘அப்பா வேணாம்ப்பா!’

படத்தின் ஹீரோ, இயக்குனர், எல்லாமே வெங்கட்ரமணன் என்ற புதியவர்தான். படம் முழுக்க வெங்‘கட்டிங்‘ரமணன் ஆகி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். பத்து லட்சத்திற்குள் இவ்வளவு நேர்த்தியாக ஒரு படத்தை எடுத்துவிட முடியும் என்றால், 100 கோடிக்கும் 150 கோடிக்கும் படம் எடுப்பவர்கள் எல்லாம் இவரிடம் வரிசையில் நின்று விபூதி வாங்கிப் பூசிக் கொள்வதுதான் முறை! ஏனென்றால் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது, எடிட்டிங் ஷார்ப் ஆக இருக்கிறது, இசை கேட்கும்படி இருக்கிறது. பாடல்களில் சிலவற்றை இவரே எழுதி பாடியிருக்கிறார். அதுவும் ஆர்வ கோளாறாக இல்லை. எல்லாமே இந்த பத்து லட்சத்திற்குள் எனும்போதுதான் ஆச்சர்யமோ ஆச்சர்யம்.

கொஞ்சம் கொஞ்சமாக குடி நோயாளியாகிவிட்ட ஒரு குடும்பத் தலைவன், வேலையை இழந்து, குடும்பத்தை இழந்து, நண்பர்களை இழந்து, மானம், மரியாதை எல்லாவற்றையும் இழந்து கடைசியில் எப்படி அந்த நோயிலிருந்து மீண்டான் என்பதுதான் கதை. பெரிய திருப்பங்கள் இல்லை. திடுக்கிடும் சண்டை காட்சிகள் இல்லை. சொக்கி விழ வைக்கும் சுந்தரிகள் இல்லை. ஆனாலும் சின்ன சின்ன கொட்டாவிகளுடன், பெரிய பெரிய கைதட்டல்கள் சூழ இந்த படத்தை தடுமாற்றமில்லாமல் கடக்க முடிகிறது நம்மால். எல்லா புகழும் வெங்கட்(டிங் ) ரமணனுக்கே!

குடி நோயாளிகளை பற்றியும் அவர்களது குணாதிசயங்கள் பற்றியும் நிறைய தகவல்கள் சேகரித்திருக்கிறார் வெங்கட்ரமணன். அதுமட்டுமல்ல, குடி நோயாளிகளை மீட்டெடுக்கும் மருத்துவமனைகளில் அவர்களை எப்படியெல்லாம் மன ரீதியாக சரி செய்கிறார்கள் என்பதையும் இண்டு இடுக்கில்லாமல் விவரிக்கிறார் . பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. அதுவும் அவர் படத்தில் சொல்லும் ஏ.ஏ என்கிற விஷயம், எவ்வளவு மகத்தானது என்பதையெல்லாம் குடிகாரர்கள் உணர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியம்.

நடிப்பில் கரை கண்டிருக்கிறார் வெங்கட்ரமணன். ஒரு நிஜமான குடி நோயாளியை மறைந்து நின்று படம் பிடித்தது போலவே தத்ரூபமான நடிப்பால் கவர்கிறார். ‘நீ என்ன வேணும்னாலும் கேளு. வாங்கித்தர்றேன். ஆனா குடிக்க காசு தர மாட்டேன்’ என்று மறுக்கும் நண்பனிடம், வெங்கட்ரமணன் கேட்பது இதுதான். ‘இருபது லட்சத்துல ஒரு வீடு வருது. வாங்கிக் கொடேன்!’ அடடா… எவ்வளவு நக்கல்? இப்படி படம் நெடுகிலும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வசனங்களை கேட்கவே தியேட்டருக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம்.

படம் வளர வளர அவரது தாடியும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. மனுஷன் முழுசாக திருந்திய பிறகும் அந்த தாடியை அவர் எடுக்கவில்லை. ஆனால் மிக பொருத்தமான இடத்தில் அதையும் எடுத்து, மீண்டும் அந்த கேரக்டரை குடும்பத்துடன் இணைக்கிற போது, ஒரு கமர்ஷியல் சினிமாவுக்குரிய அத்தனை நேர்த்தியும் இருக்கிறது அந்தந்த காட்சிகளில். படத்தில் சொல்வதற்கு நிறைய குறைகள் இருந்தாலும், அதை தவிர்த்துவிடுதல் வெங்கட்ரமணனின் சமூக அக்கறைக்கு நாம் செய்யும் மரியாதையாக இருந்துவிட்டு போகட்டும்.

ஒரு ஸ்பூன் உப்பை விதைத்து ஒரு உப்பளத்தையே லவட்டிக் கொண்டு போக வேண்டும் என்று ஆசைப்படும் இந்த சினிமாவுலகத்தில், இப்படியும் ஒரு படம். இப்படியும் ஒரு தயாரிப்பாளர். கிரேட்!

டாஸ்மாக்குக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவருமே தானாக முன் வந்து வெங்கட்ரமணனுக்கு பாராட்டு விழா எடுத்தால் கூட தவறில்லை. அவர் முதலீடு செய்திருக்கும் இந்த பத்து லட்சம் மலையாகவும் திரும்பி வரப்போவதில்லை. சுளையாகவும் கிடைக்கப் போவதில்லை. மேற்படி மருத்துவர்கள் இருவரும் அவர்கள் நடத்தி வரும் மக்கள் தொலைக்காட்சிக்காக இந்த படத்தை அதே பத்து லட்சத்திற்கு வாங்கி வாரம் தோறும் ஒளிபரப்பினால் கூட நன்றாக இருக்கும். இது நமது அன்பான வேண்டுகோளும் கூட!

போதை வேணும்ப்பா… என்று துடியாய் துடிக்கிற பார்ட்டி பரந்தாமன்கள் அத்தனை பேரும், ‘அப்பா வேணாம்ப்பா’வை ஒரு முறை பார்த்துவிடுவது அவரவர் எதிர்காலத்திற்கு நல்லது!

-ஆர்.எஸ்.அந்தணன்

இயக்கம் – R. வெங்கட்டரமணன்
ஒளிப்பதிவு- வேதாசெல்வம் DFT, வேல்முருகன் DFT
எடிட்டிங் – கெஜாராஜேஷ் DFT
இசை – V.K கண்ணன்
நடனம் – ‘’ஸ்டைல்’’ பாலா
ஆர்ட் – சிவராமன்
காஸ்ட்யூம் – முத்து
எபெக்ட்ஸ் – ஷண்முகம்
மக்கள் தொடர்பு – A.ஜான்
டிசைன்ஸ் – ஷிவா

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“VAI RAJA VAI” AUDIO LAUNCH STILLS

Close