குதிரையை பிரிஞ்சேன், அழுதேன் நாயை பிரிஞ்சேன், அழுதேன் அழுகாச்சி அப்புக்குட்டி!
‘குள்ளநரி கூட்டம்’ படத்தின் இயக்குனர் பாலாஜி அடுத்ததாக இயக்கிக் கொண்டிருக்கும் ‘எங்க காட்டுல மழை’ என்ற படத்தில் நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடிக்கிறதாம். முதல் படத்தில் நரி. ரெண்டாவது படத்தில் நாயா? என்ற கேள்வியோடு பாலாஜியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தால், அடுக்கடுக்காக அதிர்ச்சியை கொட்டினார் மனுஷன். ‘சார்… இப்பல்லாம் பெரிய ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேசினாதான் எடுபடும். ஆனால் நம்ம படத்துல அவ்வளவு பெரிய ஹீரோக்கள் நடிக்கல. அதனால்தான் பஞ்ச் டயலாக்கையெல்லாம் நாயை விட்டு பேச வச்சுட்டேன்’ என்றார் கேஷுவலாக!
என்னது… நாய் பஞ்ச் டயலாக் பேசுதா? என்னங்க சொல்றீங்க? என்றால், ‘எங்க காட்டுல மழை’யை நம்ம மேலேயும் தெளித்தார். சும்மா இல்ல சார். இந்த படத்தில் நாற்பது நாள் நாயோட கால்ஷீட் வாங்கி நடிக்க வச்சுருக்கோம். இந்த படத்தின் ஹீரோக்களான மிதுன், அப்புக்குட்டி ஆகியோருடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்துவிடுகிறது நாய். வந்த இடத்தில்தான் இப்படி அதற்கு பஞ்ச் டயலாக் என்றார் சி.பாலாஜி. நல்லவேளையாக இந்த பஞ்ச் டயலாக் எதுவும் யாரையும் மனம் நோக வைக்கிற பஞ்ச் இல்லையாம்.
அழகர் சாமியின் குதிரை படத்தில் நடிச்சுட்டு கிளம்பும்போது அந்த குதிரையை பிரிய எனக்கு மனசே இல்லை. நானும் லேசா கண் கலங்கிட்டேன். அந்த குதிரைக்கும் எப்படி தெரிஞ்சுதுன்னு தெரியல. அது கண்ணுலேயும் கண்ணீர். கிட்டதட்ட அதே மாதிரி ஒரு சுச்சுவேஷன் இந்த படத்திலேயும் நடந்திச்சு. நாய் ட்ரெய்னரை வச்சுதான் ஷுட்டிங் நடந்துச்சு. இருந்தாலும் முதல்ல நாங்க அந்த நாய்கிட்ட நல்லா பழகிட்டோம். போன படத்துல அனுபவிச்ச மாதிரி, இந்த படத்துல நாயை பிரியும் போது அழுதிடக் கூடாதுன்னு ஆரம்பத்திலேயே ரொம்ப கான்ஷியஸ்சா இருந்துட்டேன் என்றார் அப்புக்குட்டி.
அட… அப்புக்குட்டி கான்ஷியஸ் அது இதுன்னு இங்கிலீஷ்ல பொளக்கிறாரே… என்று ஆச்சர்யப்பட்டால், படத்துல பாருங்க. இதுவரைக்கும் நீங்க பார்த்த வில்லேஜ் அப்புக்குட்டி இல்ல. டவுன் அப்புக்குட்டி. பிரமாதமா அவரை இங்கிலீஷ் பேச வச்சுருக்கோம் என்றார் பாலாஜி.
குழந்தைகள் சுட்டி டி.வி யிலதான் நாய் பேசுறதெல்லாம் பாக்குறாங்க. அவங்களை கவர்றதுக்காகதான் இப்படியொரு ஏற்பாடு. படம் வரட்டும்… தியேட்டரே ஒரே குட்டீஸ் கூட்டமா இருக்கும் என்றார் குள்ளநரி கூட்டத்தை இயக்கியவர். படத்துல லவ்வும் இருப்பதால், குட்டீஸ்களுடன் இளசுகளும் வரலாமாம்…