அப்படியெல்லாம் யாரையும் நோகடிக்காதீங்க… விக்ரமுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அட்வைஸ்

இந்த தலைப்புக்கு பின்னால் ஒரு கடலளவுக்கு சோகம் இருக்கிறது. அதை முருகதாஸ் வாயாலேயும் கேட்க முடியாது. விக்ரமும் சொல்ல மாட்டார். ஆனால் நடந்த உண்மைகள் நடந்தவைதானே? அதை இந்த நேரத்தில் சொல்லாவிட்டால் எந்த நேரத்தில் சொல்வது?

கொசுவர்த்தி சுருளை கொஞ்சம் ஓவராக சுழல விட்டால்தான் நாம் ரமணா வருஷத்துக்கு போக முடியும். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, விஜயகாந்த் நடித்த ‘ரமணா ’ தாறுமாறான ஹிட். ஆனால் அந்த ஹிட்டுக்கு அவரை சொந்தக்காரர் ஆகிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தது திருஷ்டி பரிகார கூட்டம் ஒன்று. கதை அந்த பையனுது இல்லீங்க, டைரக்ஷன் கூட கேமிராமேன்தான் பண்ணினாரு. பையன் டம்மி… என்று புரளி கிளப்பிக் கொண்டிருந்தது அந்த கூட்டம். இருந்தாலும் படம் பெரிய ஹிட். டைரக்டரை விட மனசில்லாமல் ஒரு அட்வான்ஸ் கொடுத்து தனது கம்பெனிக்கு படம் இயக்க சொல்லிவிட்டார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

‘விக்ரம்ட்ட பேசியிருக்கேன். போய் கதை சொல்லிட்டு வந்துருங்க’ என்று முருகதாசை அனுப்ப, போனவர் அசத்தலான ஒரு கதையையும் சொன்னார். அதற்கப்புறம் ஃபீட் பேக்க வேண்டுமே? ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் பேசிய விக்ரம், ‘கதையெல்லாம் ஓ.கே தான். பட்… அந்த பையன் மேல எனக்கு நம்பிக்கையில்ல’. இந்த ஒரு பதில் போதாதா? முருகதாசை பல மாதங்கள் காக்க வைத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார் ரவிச்சந்திரன். சினிமாவுல சிங்கங்களுக்கு ஏற்படுகிற சிரமம்தான் இது. அதற்கப்புறம் அவர் கஜினி இயக்கினார். படம் ஹிட். தென்னிந்தியா வட இந்தியா என்று இன்றைய தேதிக்கு முருகதாஸ் நட்சத்திர இயக்குனர்.

ஆனால் இந்த அந்தஸ்தை அடைய அவர் பெற்ற சோகங்களும் கடந்து வந்த சூழ்ச்சிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. பிளாஷ் பேக் முடிந்தது. ரியல் பேக்குக்கு வருவோம்.

கோலிசோடா ஹிட்டுக்கு பிறகு விஜய் மில்டனிடம் கதை கேட்கவும் கால்ஷீட் கொடுக்கவும் ஆலாய் பறக்குது ஹீரோக்கள் கூட்டம். விக்ரமும் அப்படி ஆசைப்பட்டு கதை கேட்டார். கால்ஷீட்டும் கொடுத்துவிட்டார். ஷுட்டிங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு தயாரிப்பாளர் யார் தெரியுமா? ஏ.ஆர்.முருகதாஸ். அப்படின்னா… விக்ரம் மேலிருந்த கோபம் முருகதாசுக்கு போயிருச்சா?

அங்குதான் நிற்கிறார் முருகதாஸ். விஜய் மில்டனிடம், ‘விக்ரமுக்கு அட்வான்ஸ் பணத்தை என் கையால்தான் கொடுப்பேன்’ என்று கூறிவிட்டாராம். பல வருடங்களுக்கு பிறகு சந்தித்தார்கள் இருவரும். பழைய சம்பவங்களை நினைவுபடுத்திய முருகதாஸ், ‘விக்ரம்… இனிமே யாரையும் அப்படி நோகடிக்காதீங்க. அந்த நேரத்தில் நான் பட்ட வேதனை இன்னொருத்தருக்கு வரவே கூடாது’ என்றாராம்.

இவ்வளவு சொல்லியாச்சு. அவர் பட்ட வேதனையையும் சொல்லிவிட வேண்டுமல்லவா? ஆஸ்கர் ரவிச்சந்திரன் படம் கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தில் தவணை முறையில் டி.வி, சோபா, கார் இன்னபிற அத்தியாவசிய பொருட்களையும் வாங்கியிருந்தாராம். எல்லாவற்றையும் ஒரு நாள் அள்ளிக் கொண்டு போனார்கள். கையறு நிலையில் நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார் முருகதாஸ்.

எல்லா ஆலமரத்தின் வேர்களுக்கு அடியிலும் விக்ரம்கள் இருக்கிறார்கள். சமாளித்துதான் வளர வேண்டியிருக்கு!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மேலும் மேலும் சூடு வைக்க வேண்டுமா பார்த்திபன்?

வார்த்தை ‘குத்தர்’ பார்த்திபனுக்கு கடந்த ஒரு வார காலமாகவே இடைவிடாத ராகு காலம்! ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக், அவரது சந்தோஷத்தை ‘கொல்லிங்‘ மிஸ்டேக் ஆகிவிட்டபடியால் விளக்கம் கொடுத்தாக...

Close