பிரபுதேவா- வடிவேலு- ஏ.ஆர்.ரஹ்மான் வந்துட்டாங்கய்யா… வந்துட்டாங்க!
தெனாலிராமன் படம் குறித்த தேதியில் வெளிவருமா? தெரியாது! ஏனென்றால் பொந்துக்குள்ளிருந்து பொசுக் பொசுக்கென எட்டிப்பார்க்கும் எதிர்ப்புகள் தன்னிச்சையானதுதானா? அல்லது யாரையோ திருப்திப்படுத்த நடக்கும் தகிடுதத்தங்களா என்பது போக போகதான் தெரியும். ஆனால் வடிவேலுவின் வேகத்தை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது போலிருக்கிறது. நமது நியூதமிழ்சினிமா.காம் வாசகர்களுக்கு மிக மிக எக்ஸ்க்ளுசிவான செய்தி இது.
தெனாலிராமனுக்கு பிறகு வரிசையாக நாலைந்து படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதில் ஒன்று பிரபுதேவாவே இயக்குகிற படம். காதலன் படத்திலேயே இருவரும் ‘பேட்ட ராப்’ போட்டவர்கள் ஆச்சே? இன்று இந்தியில் டாப் இயக்குனராக இருக்கிற பிரபுதேவா, வடிவேலுவை ஹீரோவாக்கி ஒரு படத்தை இயக்குவதற்கு ரொம்பவே ஆர்வம் காட்டினாராம். முதல்கட்ட பேச்சு வார்த்தைகள் மிக மிக திருப்திகரமாக முடிந்துவிட்டன.
தான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் எப்போதும் ராஜா வேஷத்திலேயே நடித்து வரும் வடிவேலு இதில் பேண்ட் சட்டை போட்டு நடிக்கிறார். அதுமட்டுமல்ல, ஒரு பாடல் காட்சியில் வடிவேலுவும் பிரபுதேவாவுமே இணைந்து ஆடி பட்டைய கிளப்பப் போகிறார்கள். இதெல்லாம் கூட ஆச்சர்யமில்லை.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தருவதாகவும் உறுதியளித்திருக்கிறாராம். அப்புறமென்ன? தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்…