கோச்சடையானுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் செய்த உதவி
‘கோச்சடையான்’ திட்டமிட்டபடி வெளிவருமா என்கிற சந்தேகம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. இம்மாதம் 23 ந் தேதி வெளியாகும் என்று ரசிகர்கள் திட்டவட்டமாக நம்பினாலும், அந்த நம்பிக்கையிலும் ‘பொங்கல்’ வைக்கிற மாதிரி இன்னொரு சிக்கல் வெளிவந்திருக்கிறது. அதுதான் ஓரியன்ட்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் என்ற வங்கி போட்டிருக்கும் வழக்கு. ‘எங்களுக்கு தர வேண்டிய தொகையை செட்டில் செய்யாமல் படத்தை வெளியிடக் கூடாது’ என்று நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கிவிட்டார்களாம் வங்கி அதிகாரிகள். இதுவே சுமார் நாற்பது கோடிக்கும் மேல் என்கிறார்கள் திரையுலகத்தில். கூட்டி கழித்து பார்த்தால் அறுபது எழுபது கோடியை எண்ணி வைத்தால்தான் ரஜினியின் சிவ தாண்டவத்தை ரசிகர்கள் காண முடியும் போலிருக்கிறது.
இந்த சிக்கல்கள் எல்லாம் ஒரு புறமிருக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெருந்தன்மை இந்த நேரத்தில் வெளிப்பட்டிருக்கிறது. படத்தை அவுட்புட் எடுக்க வேண்டிய கடைசி நேரத்தில் ஆங்காங்கே இருக்கும் தொழில் நுட்ப விஷயங்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அந்த வகையில் சவுண்ட் டிராக்கும் முக்கியம். இந்த டிராக்குகள் முழுக்க இசைப்புயல் வசம் இருந்ததாம். அவருக்கோ கோடிக்கணக்கில் பாக்கி. ஆனால் கொடுக்க முடியாத சூழலில் சிக்கிக் கொண்ட சௌந்தர்யா ரஜினி, ‘ஸார் மியூசிக் அவுட் புட் கொடுத்து உதவுங்க, பணத்தை பிறகு வாங்கிக்கலாம்’ என்றாராம் ரஹ்மானிடம். (சினிமாவில் ரிலீசுக்கு பிறகு என்றால் அதற்கு இல்லை என்றுதான் பொருள்)
வேறொருவராக இருந்தால், பிடிவாதமாக மறுத்திருப்பார். ரஹ்மானாச்சே! எவ்வித மறுப்பும் சொல்லவில்லையாம். மனமுவந்து கொடுத்துதவி இருக்கிறார்.
மேன் மக்கள் மேன் மக்களே…!
Rahman sir is very gentle…person with good heart..