என் கேரியர்ல இப்படியொரு படம் பார்த்ததில்ல! ஏ.ஆர்.ரஹ்மானை அசர வைத்த 21 வயது இயக்குனர்!
மகிழம் மொட்டுகள் உடைவதற்கு முன்பே, மரத்தடியில் ஒரு நறுமணம் வரும்! தமிழ்சினிமாவிலும் எப்போதாவது வரும் அந்த நறுமணத்தை மொட்டு அவிழும் சில வாரங்களுக்கு முன்பே உணர்வார்கள் ரசிகர்களும், சக படைப்பாளிகளும். அப்படியொரு படைப்பாளியாக வருவார் போலிருக்கிறது ‘துருவங்கள் பதினாறு’ பட இயக்குனர் கார்த்திக் நரேன்! இன்னும் படமே வெளிவரவில்லை. அதற்குள் இவரை இன்னொரு மணிரத்னம் என்று புகழ ஆரம்பித்திருக்கிறார்கள் அப்படத்தை கண்டுகளித்த சில அனுபவசாலிகள்.
கோவையை சேர்ந்த கார்த்திக் நரேனுக்கு திடீரென சினிமா ஆசை வந்தது. இன்ஜினியரிங் படிப்பை கூட முழுசாக முடிக்காமல் சென்னைக்கு வந்தவர், ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். அதற்கப்புறம் ‘துருவங்கள் பதினாறு’ கதையோடு அவர் அலைந்த தருணத்தில், கதை மீது வைத்திருந்த நம்பிக்கையை இவரது 21 வயசின் மீது வைக்காத தயாரிப்பாளர்கள், “இன்னும் நாலு வருஷம் போகட்டும் தம்பி…” என்று புல் ஸ்டாப் வைத்துவிட்டார்களாம். அதற்கப்புறம் அப்பாவின் அனுமதியோடு சொந்தமாகவே பணத்தை இறக்கிவிட்டார் கார்த்திக் நரேன். முடிந்தது எல்லாம். படத்தின் ஹீரோவான ரகுமான், தனது நெருங்கிய உறவினாரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், இன்னும் சில பிரமுகர்களுக்கும் பிரிவியூ காண்பித்தார்.
அங்கு நடந்ததுதான் கார்த்திக் நரேனுக்கு ஏழெட்டு ஆஸ்கர் கிடைத்ததற்கு சமமான பாராட்டு. படம் முடிந்ததுமே நேராக வந்து இவரை கட்டிப்பிடித்துக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், என் கேரியர்ல இப்படியொரு படத்தை பார்த்ததில்ல. பாராட்டுகள் என்று கூறியிருக்கிறார்.
“அது போதும். நான் ஜெயிச்சுட்டேன்” என்கிறார் கார்த்திக் நரேன்! இம்மாத இறுதியில் படம் ரிலீஸ். தெருவுக்கு தெரு ஏ.ஆர்.ரஹ்மான்கள் வந்து பாராட்டுவார்கள். அதிலென்ன சந்தேகம்?