அரண்மனை2- விமர்சனம்

தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி சுலபமாக கையாள்கிற விஷயங்களில் ஒன்று ஆவிப்படம் எடுப்பது! மெல்லிசாக ஒரு கதையிருந்தால் போதும். மேலே கொட்டி நிரப்பிக் கொள்ளதான் ஏராளமான பில்லி சூனிய பிட்டிங்குகள் இருக்கிறதே? இந்த முறை தான் கட்டிய அதே பழைய அரண்மனைக்கு ஆயில் பெயின்ட் அடித்திருக்கிறார் சுந்தர்சி. ஆங்காங்கே த்ரிஷா, பூனம் பாஜ்வா என்று ‘கலர்’ பல்புகளையும் கண்டபடி எரிய விடுகிறாரா, ஏ.சியே ஆஃப் ஆனாலும், அதன் எபெக்ட் தெரியாமல் ஜில்லாகிறான் ரசிகன்!

ஊரிலிருக்கிற அம்மனுக்கு ஒரு வாரத்திற்கு ரெஸ்ட். காரணம்… ஏதோ பூஜை, புனஸ்காரம்! அத்தனை காலமும் சுடுகாட்டில் வாலை சுருட்டிக் கொண்டு கிடந்த ஆவிகள் எல்லாம், “இப்ப என்ன பண்ணுவே?” என்று கிளம்புகின்றன. அந்த ஆவிகளில் ஒன்று மட்டும் முழு வேகத்தோடு அந்த ஊரிலிருக்கும் அரண்மனைக்குள் நுழைந்துவிடுகிறது. அதற்கப்புறம் அங்கு நிகழும் ‘ஐயோ குய்யோ’ சமாச்சாரங்கள்தான் முழு படமும். சுந்தர்சி படங்களை பொறுத்தவரை சிரிப்பு பாதி, சீரியஸ் மீதி என்ற பார்முலா இருக்குமல்லவா? இதிலும் இருக்கிறது. அடிக்கடி சிரித்து, அடிக்கடி பயந்து… நடுநடுவே ‘எங்கேயோ பார்த்த மாதிரியிருக்குல்ல?’ என்று மண்டையை பிராண்டி… கடைசியில் தியேட்டரை விட்டு வெளியேறுகையில், அந்த பொம்மை வந்து குளோஸ் அப்பில் சிரிக்கிறது. ‘‘இருக்குடா இன்னும் ஒரு பார்ட்டு….” (அதுல பேய் இருக்கோ, இல்லையோ. நல்ல நல்ல பிகர்கள் இருக்கும். நீங்க வாங்க சுந்தர்சி! )

த்ரிஷாவை இப்படி பார்த்து பல வருஷங்களாச்சு. குளத்து தண்ணீரே சூடாகிற அளவுக்கு குளிக்கிறார். ‘உங்க கேமிராவுல ஒளிச்சு வைக்கதான் எடுத்துட்டு வந்தேன்’ என்பதை போல, லாங் ஷாட், மிட் ஷாட், குளோஸ் அப் என்று எல்லா கோணங்களிலும் ஒரே நினைப்பாக திரிகிறார். செகன்ட் ஹாஃபில் மட்டும் ஆவி இவர் உடம்பில் ஏறிக் கொள்ள, வாரி விட்ட வருண்மணியனை நேருக்கு நேர் பார்த்தது போல குமைகிறார். கொதிக்கிறார். அதே நேரத்தில் தொழிலில் நேரடி போட்டியிலிருக்கும் ஹன்சிகாவை விட தனக்கு கொஞ்சம் வெயிட் கம்மிதான் என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக் கொண்டதற்காக நாடறிய ஒரு வணக்கம்.

ஹீரோயினை விட அதிகமான… அண்ணி அக்கா கேரக்டர்களை விட குறைவான… ‘மத்திய பிரதேசமாக’ வருக்கிறார் பூனம் பாஜ்வா. அந்த ஆவி இவரா இருக்குமோ என்று குழப்பினாலும், ‘அட… சேச்சிக்கு பிரச்சனை வேறயாக்கும்’ என்று ரூட்டை திருப்பி விடுகிறார்கள். இவரை மடக்க சூரி அலைய, சுந்தர்சியை மடக்க பூனம் அலைவதெல்லாம் தியேட்டரை ரகளையாக்குகிறது.

அமெரிக்க மாப்பிள்ளையை அஞ்சு ரீல் எக்ஸ்ட்ராவாக நடிக்க வைத்ததை போல, அரண்மனையில் சித்தார்த்துக்கு ‘பிராப்தம்’ அமைந்திருக்கிறது. இருந்தாலும் த்ரிஷாவுடன் உருண்டு புரளும் அந்த ஒரு டூயட் போதும், நீங்களும் இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கீங்க ப்ரோ!

சூரிக்கு கோவை சரளாதான் ஜோடி! (நெஞ்சை பிடிச்சுக்கணும் போல இருக்குல்ல?) உங்களுக்கு ஏன் சிரமம்? சீனுக்கு சீன் சூரியே பிடித்துக் கொள்கிறார். கோவை சரளா குறித்து அவர் விடும் டயலாக்குகள் ஒவ்வொன்றுக்கும் குலுங்குகிறது தியேட்டர்.

ஆவியை அடக்கி படத்தை முடித்து வைப்பதே சுந்தர்சிதான். அவ்வளவு பெரிய ரோலுக்கு ஏற்ற உடல்வாகுதான் அவருக்கும்! பெரிசாக எதற்கும் அலட்டிக் கொள்ளாத அந்த பாடி லாங்குவேஜூம், டயலாக் பிரசன்ட்டேஷனும் ஒரு விதத்தில் ஓ.கேதான். இவரை ஜூவாலஜிக்கல் கேமிராமேன் என்று முன்னாலேயே கூறிவிடுகிறார்களா, ஆங்காங்கே அவர் லென்ஸ் வைத்து பேய் நடமாட்டம் அறிவது லாஜிக் லப் டப்!

மிரட்டல் ஆவி ஹன்சிகாதான். அந்த கொடூரமான பிளாஷ்பேக், சமகாலத்தில் நிகழும் கருணை கொலைகளுக்கு சற்றும் சளைத்ததாக தெரியவில்லை. ஆவியாக இருந்தாலும் மெல்ல மனசுக்குள் வந்து அமர்ந்து கொள்கிறது ஹன்சிகாவின் கேரக்டர்.

ராதாரவி, ராஜ்கபூர், சுப்பு பஞ்சு, வினோதினி என்று டஜன் ஆர்ட்டிஸ்ட்டுகள். அவரவர் வேலையை கச்சிதமாக பார்த்திருக்கிறார்கள்.

‘மாயா மாயா’ என்ற ஒரு பாடலில் மட்டும் கவர்கிறார் ஹிப் ஹாப் தமிழா. (உங்களை நடிக்க கூப்பிடுறாங்களாமே, இசையை விட்டுட்டு போயிடுங்களேன் தம்பி)

ஏதோ சத்யம் தியேட்டரையும் ஐநாக்ஸ் தியேட்டரையும் வளைத்துப் போட்ட மாதிரி பிரமாண்டமாக இருக்கிறது அந்த அரண்மனை. அவ்வளவு பெரிய மனைக்கு, லைட்டிங் செட் பண்ணி முடிப்பதற்கே வாரத்திற்கு நாலு கால்ஷீட்டு கிழிஞ்சுருக்குமேங்க? செட்டோ? நிஜமோ? அரண்மனைக்கு சொந்தக்காரர் இந்த படம் பார்க்காமலிருப்பது நல்லது! பார்த்தால், மெயின் சுவிட்சை ஆஃப் பண்ணிட்டு, கேட்டை பூட்டிட்டு கிளம்பியே போயிருப்பார். யுகே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவில் அப்படியொரு தத்ரூபம்.

ஆங்… முக்கியமான விஷயம். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு திடீர் என்ட்ரி கொடுத்து திகைக்க வைத்திருக்கிறார் குஷ்பு.

திகைக்க வைத்தது குஷ்பு மட்டும்தானா?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அவ ஒவியத்தைதானே ரசிச்சா, உன்னையா ரசிச்சா? இது தாய் மாமன் தொல்லை

பார்க்கலாம் பழகலாம் படக் கதையின் கதாநாயகன் ஒரு ஓவியன். இவர் ஓவியக் கூடம் வைத்திருக்கும் இடம் பஸ் ஸ்டாப் அருகில். அந்த வழியாக வரும் கல்லூரி பேருந்தில்...

Close