அட… இப்படியும் நடக்குதே கோடம்பாக்கத்தில்?
ரெட்டச்சுழி படத்தில் அறிமுகமான ஆரியை மெல்ல மெல்ல ஹீரோவாக அங்கீகரிக்க ஆரம்பித்துவிட்டது ஊர்.
நெடுஞ்சாலை, மாயா என்று அவர் நடித்த படங்கள் இப்பவும் ஜனங்கள் மத்தியில் பாப்புலர். இருந்தாலும் அவர் பரபரப்பான ஹீரோவாக மாற அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டினாலொழிய நடக்காது. இந்த நிலையில் தனக்கே தயிர் சோறு இல்லை. அடுத்தவங்களுக்கு பிரியாணி இருக்கா? என்று சட்டியை ஆராய்ந்த கதையாக இருக்கிறது இந்த விஷயம். இருந்தாலும் ஆரியின் பெரிய மனசுக்கு ஒரு ஆத்தாடி போட்டுவிட வேண்டியதுதான்.
களம் படத்தின் தயாரிப்பாளர் சுபிஷ் சந்திரனும் ஆரியும் நண்பர்கள். ஒருமுறை ஆரியிடம் பேசிக் கொண்டிருந்த சுபிஷ், நாங்க ஒரு பேய்ப்படம் எடுக்கறதா இருக்கோம். நல்ல ஹீரோவா ஒருத்தரை தேடிகிட்டு இருக்கோம் என்று சொல்ல, “அது நான்தானா?” என்றுதானே கேட்டிருக்க வேண்டும் இவர். அங்குதான் ட்விஸ்ட்.
வெகு காலமாகவே ஆரிக்கு நட்பு வட்டாரத்திலிருக்கும் ஸ்ரீநிவாசன், எங்கு இவரை பார்த்தாலும் “பாஸ் என்னை மறந்துறாதீங்க” என்பாராம். அப்போதெல்லாம் ஆரிக்கு ஒரு விஷயம் குழப்பமாக இருந்ததாம். இவர் ஏன் இதே வார்த்தையை நம்மகிட்ட ரிப்பீட் பண்றார் என்று. இப்போது அந்த விஷயம் நினைவுக்கு வர, சட்டென்று ஸ்ரீநிதிக்கு போன் அடித்துவிட்டார். இந்த ஸ்ரீநிதி வெண்ணிலா கபடிக்குழு படத்தில் ஒரு கேரக்டரில் அறிமுகம் ஆனவர். அதற்கப்புறம் நேரில் வந்த இவரை பார்த்ததும் பிடித்துப் போனது தயாரிப்பாளருக்கு. களம் வளர்ந்து ரிலீசுக்கு தயாராக நிற்கிறது. ஒரு ஹீரோ இன்னொருவருக்கு ஹீரோ வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது ஒரு ஆச்சர்யம் என்றால், இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபீஷ் சந்திரனின் பேச்சு இன்னொரு ஆச்சர்யம்.
நாங்க படம் எடுக்கணும் என்று முடிவு செய்தவுடன் எடுத்துக் கொண்ட முதல் நிபந்தனையே இதுதான். இன்னைக்கு டிக்கெட் ரேட் ஹெவியா இருக்கு. பார்க்கிங், கேன்டீன் என்று ஒரு குடும்பம் செலவு செய்ய முன்வந்தால் குறைந்தது ஆயிரம் ரூபாய் ஆகிவிடுகிறது. அவர்கள் செலவு செய்யும் பணம் தண்டமாக இருக்கக்கூடாது. படம் அதற்கேற்றது போல இருக்க வேண்டும். இந்த முடிவை மனதில் வைத்துக் கொண்டேதான் களம் படத்தை தயாரித்திருக்கிறோம். பார்த்துட்டு நீங்க சொல்லதான் போறீங்க என்றார்.
ராபர்ட் ராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் அவர் பேச்சை உறுதிப்படுத்தியது போலதான் இருந்தது. இருந்தாலும் திரையில் பார்க்கலாம் லட்சணம் எப்படி இருக்கப் போகிறதென்று?
பின்குறிப்பு- இம்மாதம் திரைக்கு வரப்போகும் களம் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் மதன், மற்றும் ஜேம்ஸ் வெளியிடுகிறார்கள். இதுவரைக்கும் படத்தை மூன்று முறை பார்த்துட்டேன். அப்படியிருந்தும் ஒரு காட்சி கூட போரடிக்கல என்றார் மதன்! நம்புலாமா, வேணாமா மக்கஷே…?