அரிமா நம்பி விமர்சனம்

முதல் இருபது நிமிஷம், ‘அருவா தம்பி’யாக இருக்கிறது அரிமா நம்பி! அதற்கப்புறம் ‘அற்புதம்டா தம்பி!’ (லாஜிக் மிஸ்டேக்குகளை ஆடி தள்ளுபடியில் கழித்து விட்டால்)

ஒரு மத்திய அமைச்சருக்கும் ஒரு சேனல் சிஇஓ வுக்கும் நடைபெறும் இழுபறியில் மண்டை நொறுங்கிப் போகிற ஒரு இளைஞனின் ‘ஸ்பீடு’தான் கதை. கடைசியில் அமைச்சர் பதவி அரோகரா ஆகிவிட, அதுவரை சற்று படபடப்போடு அமர்ந்திருந்து படத்தை கண்டு களித்த நாமும் வியர்வையை துடைத்துக் கொண்டு ‘அப்பாடா’ ஆகிவிடுகிறோம். அப்லோடு, யூ ட்யூப், கேண்டிட் கேமிரா, பட்டன் கேமிரா, சேட்டிலைட், ஜாம்… இன்னும் இதர விஞ்ஞான விபரங்களை அறியாதவர்களுக்கு வேண்டுமானால் இந்த படம் ஜீபூம்பா லெவலாக இருக்குமே ஒழிய, இந்த பேஸ்புக் ட்விட்டர் யுகத்தில் ‘ரொம்ப சாதாரணமப்பா இதெல்லாம்!’

பாருக்கு நண்பர்களோடு குடிக்க போகிறார் விக்ரம் பிரபு. கழிசல் கச்சடா நிறைந்த நம்ம ஊரு டாஸ்மாக் பார் அல்ல அது. இது ஹைலீ டெவல்ப்டு…! அதே பாருக்கு ஒயின் அடிக்க வருகிறார் ப்ரியா ஆனந்த். எண்ணி நாலு வார்த்தை, ஒரு பாட்டு பாடி அவரை கவரும் விக்ரம் பிரபு, அப்படியே கிளம்புகிறார் ப்ரியா ஆனந்துடன். நள்ளிரவு… தன் பிளாட்டுக்கு விக்ரமை அழைத்து வருகிறார் ப்ரியா. அங்கும் ஒரு ஃபுல் வோட்காவை இருவரும் சேர்ந்து கபளீகரம் செய்ய முயல, சந்து கேப்பில் ஒரு பயங்கரம். ப்ரியாவை கடத்திச் செல்கிறார்கள் இரு மர்ம நபர்கள். தடுக்க முயலும் விக்ரம் எப்படியோ துப்பாக்கி குண்டுகளுக்கு தப்பி அதற்கப்புறம் போலீசிடம் புகார் செய்கிறார். அதுவும் சரி வராமல் போக, தானே கிளம்புகிறார் ப்ரியாவை தேடி.

கண்டு பிடித்தாரா? அப்புறம் இருவரும் தப்பித்தார்களா என்பதுடன், தன்னை பற்றிய வீடியோ ஆவணத்தை வெளியிட துடிக்கும் இருவரையும் தீர்த்துக்கட்டி ஆவணத்தை கைப்பற்ற முயலும் மத்திய அமைச்சர் என்னவானார்? வீடியோ வெளியானாதா? என்பதெல்லாம் விறுவிறுப்பான கடைசி நிமிடங்கள்.

‘எப்போதும் கோவாச்சு’ கேரக்டருக்கு நச்சென பொருந்துகிறார் விக்ரம் பிரபு. காதல் காட்சிகளில்தான் ஐயோ பாவம்… விளக்கெண்ணை குடிக்கிறார். இனி தேர்ந்தெடுக்கும் கதைகளில் பாதிக்கு மேல் அடிதடியாக இருப்பதை போல பார்த்துக் கொள்வது நல்லது. ப்ரியா ஆனந்த் தங்கியிருக்கும் இடத்தை கண்டு பிடிக்க இவர் மேற்கொள்ளும் முயற்சிகள் அத்தனையும் ராஜேஷ்குமாரின் மர்ம நாவல் போல விறுவிறுப்பு. அதிலும் கடத்தல்காரர்கள் இருவரையும் போலீசில் மாட்டிவிட அவர் செய்யும் தந்திரங்களும், அந்த பேங்க் ராபரி காட்சியும் அசத்தல். இவரும் ப்ரியா ஆனந்தும் சந்து சந்தாக ஓடி தப்பிக்கும் காட்சிகளில் நமக்கு மூச்சிரைக்கிறது. ஒரு விஷயம்தான் செம காமெடி… முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டு துப்பாக்கிக் குண்டுகளுக்கு தப்பி விக்ரம் ஓடுவது. அந்த விரல்கள் என்ன புல்லட் புரூப் ஸ்பெஷலா? ஹையோ… ஹையோ…

ஆர்.டி.ராஜசேகரின் புண்ணியத்தில் தங்க சிலை போலிருக்கிறார் ப்ரியா ஆனந்த். முந்தைய படங்களின் டீச்சர், இந்த படத்தில் மாணவியானது ஒளிப்பதிவாளரின் ஒரே கைங்கர்யத்தினாலன்றி வேறில்லை. போகட்டும்… நடிப்பு? பிரகாசம்! தன் அப்பாவின் சாவை வினாடி நேரம் நினைத்து உருகுகிற போதும், தனது வளர்ப்பு பற்றி கவலை கொள்ளும்போதும் கலங்க வைக்கிறார்.

ஆச்சர்யம்… ஆனால் உண்மை. எம்.எஸ்.பாஸ்கருக்கு இப்படத்தில் வித்தியாசமான ரோல். மருந்துக்கு கூட காமெடி பண்ணவில்லை. ஆனால் ஒரு வில்லனை நச்சென ஒரே போடாக போட்டு அவனை ஸ்தம்பிக்க வைக்கிறாரே… அந்த நேரத்தில் சீரியஸ் மறந்து சிரிக்கிறது தியேட்டர்.

மத்திய அமைச்சராக நடித்திருக்கிறார் சக்கரவர்த்தி. இந்த உலகத்திலேயே நீதான் பேரழகு என்றெல்லாம் இவர் லேகா வாஷிங்டனை ரசிப்பதை வேதனையோடு கேட்க வேண்டியிருக்கிறது. வாஷிங்டனுக்கு பதிலாக வேறு ஏதேனும் வாஷிங் சோப்பை நாடியிருக்கலாம் டைரக்டர். டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்னை கமிஷனர் ஆபிசுக்கே வந்து கட்டளை போடுகிற சக்கரவர்த்தி, கமல் போலிருக்கிறார். சில காட்சிகளில் அவரைப்போலவே நடிக்கவும் செய்கிறார். கடைசியில் தன்னை லைவ்வாக டி.வி ஷோவில் காட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர் பல்டியடிப்பதை ரசிக்க முடிகிறது. அதற்கப்புறம் வருகிற ட்விஸ்ட்? இன்னும் விறுவிறுப்பு.

இசையமைப்பாளர் நம்ம அதிரடி டிரம்ஸ் சிவமணிதான். அடக்கமாக மெலடியை பயன்படுத்தியிருப்பது ஏமாற்றம். அவரே திரையில் தோன்றி ஒரு குத்துப்பாடல் போட்டிருந்தால், அந்த டிரம்ஸ் விரல்களுக்கு மோதிரமே போட்டிருக்கலாம். பட்…பின்னணியில் பிராயசித்தம் செய்திருக்கிறார். இவர் பாடல் ஏற்கனவே ஸ்லோ. அதை க்ளைமாக்ஸ் நேரத்தில் போட்டு இன்னும் எரிச்சலுட்டுகிறார் டைரக்டர்.

மொத்த படத்தையும் விறுவிறுப்பான திரைக்கதை சுமக்கிறதோ, இல்லையோ? ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் சுமந்திருக்கிறார். அந்த சந்து பொந்துகளில் நடைபெறும் சண்டை காட்சி ஒன்றே சாட்சி. அந்த சண்டை காட்சியை கம்போஸ் செய்த சண்டை இயக்குனருக்கும் ஒரு சபாஷ்.

அறிமுக இயக்குனர் ஆனந்த் ஷங்கருக்கு மேலும் மேலும் படங்கள் கிடைக்கும். அப்போதாவது காதல் காட்சிக்கு மதுபான பார்களை தேர்ந்தெடுக்கும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டுகிறோம்… இந்த கதையில் கூட ஜோடிகளின் அறிமுகம் அங்குதான் நிகழ வேண்டுமா என்ன? வேறொரு டிபார்ட்மென்ட் ஸ்டோரிலோ, ஏர் போர்ட்டிலோ நடந்திருந்தால் ‘வேணாம்’ என்கிறதா? மற்றபடி…

(கலை)புலி வளர்த்த அரிமா! கம்பீரமாகவே இருக்கிறது!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பெண்கள் சரக்கடிக்கலாம், தவறில்லை! கிறுகிறுக்க வைத்த அரிமா நம்பி டைரக்டர்

அண்மையில் வெளிவந்த ‘அரிமாநம்பி’ படத்தில் நாயகி ப்ரியா ஆனந்த் நன்றாக ‘சரக்கடிப்பதாக’ காட்டுகிறார்கள். அதுவும் வோட்காவை ராவாக அடிக்கிறார் அவர். ‘இப்படியெல்லாம் காட்சிகள் வைத்திருக்கிறீர்களே, இது நியாயமா?’...

Close