ஷாமுக்கு வில்லனே அர்ஜுன்தானாமே? ஒரு மெல்லிய கோடு ரகசியம்
குப்பி, வனயுத்தம் போன்ற உண்மைக் கதைகளை சினிமாவாக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். அவர் கடைசியாக இயக்கிய ‘வனயுத்தம்’ படத்திற்கு கரப்பான் பூச்சி, பூரான், ஈ, கொசுக்கள் தவிர, மீதி எல்லாரும் தொல்லை கொடுத்ததை அவ்வளவு எளிதில் மறப்பதாக இல்லை அவர். எந்த கேள்வி கேட்டாலும் ‘படம் வரும்போது நீங்களே பார்ப்பீங்க. இப்போதைக்கு படத்தை பற்றி அதிகம் பேச மாட்டேன்’ என்பதையை பதிலாக சொல்லிக் கொண்டிருந்தார்.
ஸ்பாட்…. ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு.
இருந்தாலும் இந்த படத்தின் ஆகப்பெரிய அட்ராக்ஷன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்தான். ஷாம் ஹீரோவாக நடிக்கிறார். அப்படியென்றால் அர்ஜுன் யார்? ‘படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்திருந்தாலும், அவருக்கு எதிர்மறையான ரோல் என்கிறார்கள் சிலர். இது குறித்து இயக்குனரிடம் கேட்டால், ‘அதெல்லாம் இல்லை. இருந்தாலும் படம் வரும்போது பாருங்க. இதுவரைக்கும் அர்ஜுன் சார் அப்படியொரு ரோல் பண்ணியதேயில்லை’. என்றார். இந்த படத்தில் அர்ஜுனுக்கு சண்டைக்காட்சிகள் இல்லை என்பதே புதுமையாக இருக்கிறது. ஆமாம்… இல்லையாம்.
ஷாமுக்கு அர்ஜுனோடு நடிப்பதே பெரிய அனுபவம். சார் இந்த படத்தில் நடிக்கிறார்னு தெரிஞ்சதுமே நான் ரொம்ப நெர்வஸ் ஆகிட்டேன். இத்தனை வயசுலேயும் அவர் தன்னை ஃபிட்டா வச்சுப்பார். அப்படின்னா நாம எப்படியிருக்கணும்? தினமும் அதிகாலையில் எழுந்து எக்சர்சைஸ் செய்ய ஆரம்பிச்சுட்டேன். அவர் கூட நடிக்கும் ஒவ்வொரு நாளும் ரொம்ப பயனுள்ளதா போயிட்டு இருக்கு என்றார்.
நாம் விசாரித்த வரை படத்தின் கதை, பிரபல அரசியல்வாதியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் அவரது காதல் மனைவி சுனந்தாவை கொலை செய்ததாக வழக்கு நடக்கிறதல்லவா? அதையொட்டிய புலனாய்வு சம்பவங்களாக இருக்கலாம்! மடக்கி மடக்கி கேட்டதில் கொலை செய்யப்பட்டவர் ஒரு பெண் என்கிற வரைக்கும் ஒப்புக் கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.
இந்த படத்திற்கு ஏன் இளையராஜா? அது ரொம்ப முக்கியம்… என்று பேச ஆரம்பித்த ரமேஷ், இந்த கதையே ஒரு மர்டர் மிஸ்ட்ரி என்பதால் படம் முழுக்க பின்னணி இசைக்கு அதிக வேலையிருக்கு. பின்னணி இசையை கதைக்கு பொருத்தமாக அமைப்பதில் இளையராஜாவுக்கு நிகராக யார் இருக்கிறார்கள்? அதனால்தான் அவர் என்றார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பல கோடி மதிப்பில் செட் போடப்பட்டுள்ளது. தடயவியல் சோதனை கூடம் ஒன்றை அப்படியே தத்ரூபமாக உருவாக்கியிருந்தார்கள்.