இந்தாங்க ஸ்நாக்ஸ்… அளவுக்கு மீறி வளைந்த அருண் விஜய்?
தமிழ்சினிமாவை பற்றிய இண்டு இடுக்கு, அண்ட சராசரம் அத்தனையையும் டெக்னிகலாக அறிந்து வைத்திருப்பவர்கள் என்றால் அது பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்யும், இன்னொரு பழம்பெரும் நடிகரான தியாகராஜனின் மகன் பிரசாந்தும்தான். ஆனால் காலமும் நேரமும் அதிஷ்டமும் இவர்களை வளர விடுவேனா என்கிறது. இதில் இவர்களே தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டது தனி விஷயம்.
சரி மேட்டருக்கு வருவோம். பிரசாந்த் போலவே வளர்ந்து வந்தாலும், திடீரென சுதாரித்துக் கொண்ட அருண் விஜய் தன் ரூட்டை மாற்றிக் கொண்டார். என்னை அறிந்தால் படத்தில் அஜீத்திற்கு வில்லனாக மோதியதால், பட்டிதொட்டியெங்கும் பளிச்சென போய் சேர்ந்து கொண்டது அவரது யுக்திகளில் ஒன்று. அதற்கப்புறமும் தமிழ்சினிமா இவரை வில்லனாகவோ, ஹீரோவாகவோ நடத்த வேண்டும் அல்லவா? பெரிய இயக்குனர்கள் ஒருவரும் இவர் பக்கம் திரும்பக் காணோம். அவ்வளவு ஏன்? தமிழ்சினிமாவில் அதிரடி டைரக்டர் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஹரி கூட, அருண் விஜய் விஷயத்தில் அப்புறம் பார்த்துக்கலாம் என்றே இருக்கிறார். இத்தனைக்கும் அவரும் இவரும் அப்படியொரு சொந்தபந்தம்!
இறுதியாக தன் கையை தனக்குதவி என்ற முடிவுக்கு வந்த அருண்விஜய், ஈரம், ஆறாத சினம் புகழ் அறிவழகனை நாடி தங்கள் கம்பெனியிலேயே ஒரு படத்தை இயக்கித் தரும்படி கேட்டிருக்கிறார். நல்ல முடிவுதான். ஒண்ணுக்குள்ள ஒண்ணு என்று ஆகிவிட்டோம். இனி என்ன பந்தா வேண்டிக் கிடக்கு என்று நினைத்திருக்கலாம். அறிவழகனுக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், மற்றும் ஹீரோ என்பதையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் ஒரு விஷயம் செய்தார்.
அண்மையில் அறிவழகன் இயக்கிய ஆறாது சினம் படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்று திரையிடப்பட்டது. இன்டர்வெல்லில் அறிவழகனும், அவரது நண்பர்களும் ஒரு வரிசையில் அமர்ந்திருக்க, கை நிறைய பிஸ்கட், பாப்கார்ன், கோக் பாட்டில்களுடன் தட்டு தடுமாறி ஓடி வந்து அவர்களுக்கு சர்வ் பண்ணிக் கொண்டிருந்தார் அருண்விஜய். இதை எளிமை என்பதா? குரு பக்தி என்பதா?
என்னவாவது இருந்து தொலையட்டும்… இப்படி ஈகோ பார்க்காத அருண் விஜய்களுக்கு ஒரு வெற்றியை கொடுத்து வாழ விடுங்கப்பா!