ஆர்யா கொடுக்கும் ஆஃபர்?
‘படித்துறை’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கால் வைத்தவர் ஆர்யாவின் தம்பி சத்யா. ஆனால் ‘படித்துறை’ வழுக்கி விடவும் இல்லை. வளர்த்தெடுக்கவும் இல்லை. மாறாக படமே பெட்டிக்குள் முடங்கிவிட்டது. இதை தனது சொந்த படமாகவே தயாரித்த ஆர்யா, படம் வெளிவந்தபின் அடையும் நஷ்டத்திற்கும், வராமலிருப்பதற்கு முன் ஏற்படும் நஷ்டத்திற்கும் கணக்கு போட்டு பார்த்தாராம். விளைவு? பெட்டி சாவியை போன இடம் தெரியாமல் தொலைத்து விட்டு மனதை ஃப்ரீயாக்கிக் கொண்டார்.
அதற்கப்புறம் ‘புத்தகம்’ என்ற படத்தில் நடித்தார் சத்யா. பழைய விலைக்கு கூட எடைக்கு போட முடியாதபடி ஆனது அதன் நிலைமை. இனியும் தம்பியை தனியே விட்டால், தனது இத்தனை உயர சினிமா கவுரவங்களுக்கு மரியாதை என்னாவது என்று நினைத்திருக்கலாம். தம்பியை பெரிய ஹீரோவாக்காமல் விடுவதில்லை என்று சபதம் எடுத்துவிட்டாராம். அதன் முதற்கட்டமாக இப்போதெல்லாம் சத்யாவுக்காக தானே முன்னணி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கேட்டு போன் செய்ய ஆரம்பித்திருக்கிறாராம்.
இன்னொரு ஆஃபரும் கொடுக்கிறார் ஆர்யா. ‘தம்பியை வைத்து படமெடுத்தால், ஒரு கெஸ்ட் ரோலில் சம்பளம் வாங்காமல் தலை காட்டவும் தயார் ’ என்பதுதான் அந்த நல்ல செய்தி. இந்த ஒண்ணு வாங்குனா இன்னொன்னு ஃப்ரீ ட்ரீட்மென்டுக்கு நல்ல பலன் இருப்பதாகவும் கேள்வி.
கவலைக்குறிப்பு- யார் கண் பட்டதோ, இப்போதெல்லாம் ஆர்யாவையும் காணோம். அவர் பற்றிய கிசுகிசுக்களையும் காணோம். ஒருவேளை ஸ்ரீதிவ்யா, லட்சுமிமேனன் என்று அடுத்த தலைமுறை நடிகைகள் வந்துவிட்டதால், ஆர்யாவை ‘அங்கிள்’ லெவலுக்கு மரியாதையோடு தள்ளி வைத்துவிட்டார்களோ என்னவோ?