ஆர்யாதான் வேலையை சுலபமாக்கினார்! பெங்களுர் நாட்கள் இயக்குனர் சர்டிபிகேட்!
‘பெங்களுர் நாட்கள்’ படத்தை இயக்கியிருக்கும் பொம்மரிலு பாஸ்கருக்கு சொந்த ஊர் நம்ம வேலூர்தான். ஆனால் அவர் இப்போ ஆந்திராவாசி. ஏனென்றால் பொம்மரிலு ஹிட். அதற்கப்புறம் அவர் இயக்கிய படங்களும் ஹிட். விடுமா ஆந்திரா? இந்த நிலையில்தான் மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கிய பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்யும் வேலையை இவரிடம் ஒப்படைத்தது பிவிபி நிறுவனம்.
வெளி மாநிலத்தில் நானெல்லாம் பெரிய ஆளு தெரியுமா? என்று மனசு சொன்னாலும், தாய் மொழியில் ஒரு படமாவது இயக்கவில்லை என்றால் அதே மனசு, “அடப் போப்பா…” என்று சொல்லுமல்லவா? அதனால்தான் இந்த ரீமேக் படத்திற்கு ஒப்புக் கொண்டாராம் பாஸ்கர். விரைவில் பெரிய ஹீரோ ஒருவருடன் நேரடி தமிழ் படம் இ,யக்கப் போகிறார் அவர். “முதலில் இந்த படத்தை மெட்ராஸ் நாட்கள்னு சென்னையிலேயே எடுத்துடலாம்னுதான் நினைச்சோம். ஆனால் வேறொரு மொழி பேசும் ஏரியாவுக்கு படத்தின் ஹீரோ ஹீரோக்கள் வர்றாங்கன்னா இன்னும் இம்பாக்ட் இருக்குமேன்னுதான் அஞ்சலிமேனன் எடுத்த அதே பெங்களூருக்கு போயிட்டோம்” என்கிறார் பொம்மரிலு பாஸ்கர்.
“ஆர்யா, பாபிசிம்ஹா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, ராணா, பார்வதி என்று படா படா நட்சத்திரங்கள் இருந்தாலும், எல்லாரையும் ஒரு இடத்தில் குவித்து வேலை வாங்குவதென்பது அவ்வளவு சாதாரண விஷயமில்ல. அதோட பாபி சிம்ஹாவுக்கும் ஆர்யாவுக்கும் பெரிய பழக்கமும் இல்ல. ஸ்கிரீன்ல வரப்போற நட்பு நிஜத்திலேயும் அவங்களுக்குள்ள வரணும்னா முதல்ல அவங்களை பழக விடணும். அந்த பொறுப்பை தானே கையில் எடுத்துகிட்டார் ஆர்யா. செட்ல அவர் அடிச்ச ரகளையில் அவ்ளோ பேரும் அவருக்கு பிரண்ட் ஆகிட்டாங்க. அவங்க அரட்டை நேரம் போக, அவங்களை ஒருங்கிணைக்கிற நேரம் போக, எப்படியோ அறுபத்தைந்து நாள்ல இந்த படத்தை எடுத்திருக்கேன். அதுவே பெரிய வெற்றிதான்” என்றார் பொம்மரிலு பாஸ்கர்.
உலகம் முழுக்க 450 தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடப் போகிறார்கள். ‘‘எங்க வீட்டுக்கு பெயரே பொம்மரிலுதான். அப்படின்னா சந்தோஷம்னு அர்த்தம். தமிழ்ல இந்த படம் வர்றதால எங்க பேமிலியே இப்போ பொம்மரிலு ஆகிக்கிடக்கிறது” என்றார் பாஸ்கர்.
அப்படின்னா எங்களுக்கும் பொம்மரிலுதான்!