‘லிங்கா… ’ நெக்ஸ்ட்? ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ரஜினி! வெளிவராத ‘எக்ஸ்க்ளூசிவ் ’ தகவல்கள்…
கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான ‘வை ராஜா வை’ படத்தின் ‘எடிட் வெர்ஷன்’ சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ என்கிறார்களே…. அது எந்த நேரத்தில்? அந்த பிள்ளைகள் பெற்றோரின் பெருமையை காப்பாற்றும் போதுதானே! அந்த வகையில் இந்த படத்தை வெகுவாகவே ரசித்து பாராட்டினாராம் ரஜினி. அதுமட்டுமல்ல, நிஜமாகவே அவருக்கு படம் பிடித்திருந்ததாம்.
அந்த இனிப்பான நேரத்தில்தான் தனது மனதில் வெகு நாட்களாக பூட்டி வைத்திருந்த அந்த கோரிக்கையை கையில் எடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. ‘அப்பா… இத்தனை வருட சினிமா அனுபவத்தில் நீங்கள் பார்க்காத உயரம் இல்லை. சில நேரங்களில் தோல்விகளையும் பார்த்துட்டீங்க. உங்க வாரிசுக்கு ஒரு பெருமை வருதுன்னா அது நீங்க நடிச்ச படத்தை நான் இயக்கும் போதுதான். அந்த முழுமையான சந்தோஷத்தையும் பெருமையையும் நீங்க எனக்கு கொடுக்கணும். நான் என்னை நிரூபிச்சுட்டுதான் இந்த வாய்ப்பை கேட்கிறேன். இந்த படத்தை பார்த்த பிறகு உங்களுக்கு என் மீது நம்பிக்கை வந்திருக்கும். அந்த நம்பிக்கையாலும்தான் இந்த ஆசை…’ என்றாராம் எவ்வித நெருடலுக்கும் இடமில்லாமல்.
அப்படியே ஐஸ்வர்யா சொன்ன விஷயத்தில் ரஜினிக்கு மிகவும் பிடித்தது இதுதான். ‘இந்த படத்திற்கான கதையை நீங்களே ச்சூஸ் பண்ணுங்க. அது யாரோட கதையா வேணும்னாலும் இருக்கட்டும். டயலாக்? கே.எஸ்.ரவிகுமார் அங்கிளை கூட எழுத சொல்லுங்க. என் ஆசையெல்லாம் உங்களை நான் டைரக்ட் பண்ணணும். அதுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க’ என்று தயங்காமல் கேட்க, சற்று நேரம் யோசித்த ரஜினி, ‘சரிம்மா… அதுக்கான வேலையை உடனே ஆரம்பிச்சிடலாம்’ என்றாராம் உறுதியாக. அநேகமாக ‘லிங்கா’ படத்தை அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் படம் இதுவாகதான் இருக்கும் என்கிறது நமது நியூதமிழ்சினிமா.காம் -க்கு கிடைத்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்.
எந்திரன் பார்ட் 2 கைவிடப்பட்ட தகவலை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இந்த ரஜினி படத்தை தனுஷின் ‘வொன்டர்பார்’ நிறுவனமே தயாரிக்கும் எண்ணமும் இருக்கிறதாம் ஐஸ்வர்யாவுக்கு! ரஜினியிடம் கால்ஷீட் கேட்கும் போதே ஐஸ்வர்யா வைத்த இன்னொரு கோரிக்கை, அந்த படத்திற்கு அனிருத்தே இசையமைக்கணும் என்பதுதானாம். அதற்கும் டிக் அடித்திருக்கிறார் ரஜினி.
இரண்டாவது மகள் சவுந்தர்யா அஸ்வினுக்கு ஒரு படம் கொடுத்த மாதிரி, ஐஸ்வர்யாவுக்கும் ஒரு படத்தை அளித்து கணக்கை நேர் செய்ய நினைத்திருக்கலாம் ரஜினி. எப்படியோ? திறமையால் வென்ற ஐஸ்வர்யாவை பாராட்டியே ஆக வேண்டும்.