அப்படி செய்யலாமா விஷ்ணு? உதவி இயக்குனர்கள் கோபம்!
அசிஸ்டென்ட் டைரக்டர்களின் டீக்கடை பெஞ்ச்சில் நேற்றெல்லாம் சிக்கி வறுபட்டவர் நடிகர் விஷ்ணுவிஷால்தான்! கொஞ்சலோ, கோபமோ, வருத்தமோ, வயோதிகமோ, எல்லாவற்றையும் ட்விட்டரில் வெளிப்படுத்துகிற குணம் நடிகர் நடிகைகளுக்கு வந்துவிட்டது. அதுவே ஏகப்பட்ட இன்னல்களுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. சிம்பு ட்விட்டரில் ஆவேசப்பட்டதன் விளைவை அவ்வளவு சீக்கிரத்தில் அனுபவித்து(?) அந்த ட்விட்டரை விட்டே விலகிவிட்டார். அதிருக்கட்டும்… விஷ்ணு சிக்கியது எதனால்?
நேற்று ட்விட்டரில் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தார் அவர். குறும்பட இயக்குனர்கள் நல்ல கதை வைத்திருந்தால் என்னை அணுகவும் என்று அதில் கூறியிருந்தவர், தனது இமெயில் முகவரியையும் தெரிவித்திருக்கிறார். பத்து வருடங்களுக்கும் மேல் கூட இயக்குனர்களுக்கு (கிட்டதட்ட) அடிமை வேலை பார்த்து தொழில் கற்றுக் கொள்கிற உதவி இயக்குனர்கள், கண்களில் கனவுகளோடு ஒவ்வொரு ஹீரோவாக பார்த்து வரும் நேரத்தில், இந்த குறும்பட இயக்குனர்கள் ‘டை’ மடிப்பு கலையாமல் மெடிக்கல் ரெப்பரசன்டேட்டிவ் போல வந்து வாய்ப்புகளை கொத்துவது ஆச்சர்யம்தான். அதில் கூட பிரச்சனையில்லை.
இயக்குனர்களில் ஏன் குறும்பட இயக்குனர்கள் என்று தனியாக பிரித்துப் பார்க்க வேண்டும்? ‘நல்ல கதை வைத்திருக்கும் வருங்கால இயக்குனர்கள் என்னை அணுகவும்’ என்று கூறியிருக்கலாமே? என்பதுதான் அவர்களின் ஆதங்கம். அவ்வளவு ஏன்? விஷ்ணுவிஷாலை ஹீரோவாக அறிமுகப்படுத்திய சுசீந்திரன் என்ன குறும்பட இயக்குனரா? வாழ்வு கொடுக்க மட்டும் ஒரு அனுபவசாலி வேண்டும். வண்டி ஓட்ட வேறொரு குறும்பட இயக்குனர் வேண்டுமா? இதெல்லாம்தான் இவர்களின் வேதனை தொனித்த குரல்!
இத்தனை வருஷ காலம் ஆன பின்பும், இத்தனை சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த பின்பும் கூட, விஜய் உதவி இயக்குனர்களிடம் கதை கேட்கிறார். அவர்களுக்கு வாய்ப்பும் கொடுக்கிறார். அந்த நல்ல மனசு விஷ்ணு போன்ற அறிமுக நிலையில் இருக்கும் நடிகர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?
எல்லாம் கோடம்பாக்கத்தை பிடித்த சாபக்கேடு!