அதிதி- விமர்சனம்

முற்பகல் ‘செய்யின்’ பிற்பகல் என்னாகும் என்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன்!

ஒருவரும் விழுந்து புரண்டடித்துக் கொண்டு நடிக்கவில்லை. ஆனால் அந்தளவுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது திரைக்கதை. இராமாயணத்திலும் நீதிமான் பரதன், நிகழ்காலத்திலும் நீதிமான் பரதன்தான்! யெஸ்… இந்த படத்தின் இயக்குனர் பரதன் சொல்லியிருக்கும் மெசெஜ், தினத்தந்தி, தினகரன்களின் கள்ளக்காதல் பெட்டிச் செய்திகளை எதிர்காலத்திலாவது குறைக்க உதவும்.

ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நந்தாவும், அவரது மனைவி அனன்யாவும் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒருவன் லிஃப்ட் கேட்கிறான். மனிதாபிமானத்தோடு அவனை காரில் ஏற்றிக் கொள்கிறார்கள். அதற்கப்புறம் இவர்களுக்கு நேரும் இடைஞ்சல்களும், மன உளைச்சலும்தான் படம். வீட்டிலிருக்கும் குழந்தையை கடத்தி வைத்திருக்கிறேன் என்று சொல்லி சொல்லியே இவ்விருவரையும் டார்ச்சர் செய்கிறான் அவன். கடைசியில் அந்த க்ளைமாக்ஸ்…? யாருமே எதிர்பாராத திருப்பம். இவர்கள் இருவரும் கடத்தலிலிருந்து, விடுபடுகிற அந்த கடைசி நிமிடம் வரைக்கும், ‘ஐயோ பாவம். அந்த தம்பதிகளுக்கு ஏன்தான் இப்படியெல்லாம் நடக்குதோ? என்று நமது மண்டைக்குள் எலி சுரண்ட ஆரம்பித்துவிடுகிறது. இவன் வேலையா இருக்குமோ, அவன் வேலையா இருக்குமோ என்றெல்லாம் நம்மை பதறவிட்டு கதைக்குள் ட்விஸ்ட் வைக்கிறார் பரதன். கடைசியில் நாம் நினைத்தது எதுவுமில்லை. அது வேறொன்று என்று தெரியவரும்போதுதான், நம்மையறியாமல் ஒரு ‘அட…!’ போட வைக்கிறார் இயக்குனர்.

நந்தாவுக்கு பொருத்தமான ரோல்தான். கடினமான முக அசைவுகளோ, நடிப்போ அவருக்கு தரப்பட்டால் என்னாகும் என்பதை நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. நல்லவேளையாக நந்தாவுக்கு என்ன தெரியுமோ, அதை நச்சென்று பிடித்து காட்சிகளில் பொருத்திக் கொள்கிறார் பரதன். ஒரு பிராஸ்ட்டியூட்டை காட்டி, ‘போய் விலை பேசி படிய வைச்சு அழைச்சுட்டு வா’ என்று வில்லன் கட்டளையிட, தயங்கி தயங்கி அவளிடம் பேசுகிற அந்த காட்சியில் நந்தாவின் நடிப்பு ‘நல்லாதான் இருக்கு!’

சும்மாவே மருண்ட விழிகள் அனன்யாவுக்கு. இதில் இன்னும் மருள வேண்டிய கட்டாயம் வேறு. விடுவாரா? சுற்றி சுற்றி அடிக்கிறார். அந்த இருட்டு லாட்ஜில், வில்லன் நிகேஷ்ராம் மேலே கை வைக்கும்போது அவர் காட்டும் அந்த அருவறுப்பு…? அப்படியே பதற வைக்கிற நடிப்பு அனன்யாவிடம். ‘குழந்தையிடம் ஒரு தடவ பேசிக்கிறேன்’ என்று அவர் கெஞ்சுகிற போதெல்லாம் ஆடியன்ஸ் கண்கள் குளமாகிவிடும்.

ரொம்ப நிதானமாக, அதே நேரத்தில் அழுத்தமாக நடித்திருக்கிறார் நிகேஷ்ராம். முதல் காட்சியிலேயே அவரது கேரக்டர் என்ன என்பதை சொல்லிவிடுகிறார் டைரக்டர். அவ்வளவு உயர பில்டிங்கின் முனையில் உட்கார்ந்து கொண்டு தண்ணியடிக்கிற அவர், அதற்கப்புறம் செய்கிற வில்லத்தனங்கள் ஒவ்வொன்றும், பத்து பிரகாஷ்ராஜ், ஏழெட்டு ரகுவரன்களுக்கு ஒப்பானது. ஆனால், ‘இந்த ஸ்லம்களையெல்லாம் பார்த்திருக்கியா நீ? எங்க பார்த்திருக்கப் போற? இதையெல்லாம் காலி பண்ணிய பிறகு ஒரு டிராயிங்காதான் பார்த்திருப்பே’ என்று ஏழைகளுக்காக வாதாடுகிற போதும், தாலியை அடகு வைத்து நந்தா அனன்யா கொடுக்கிற பணத்தில் பிரியாணி வாங்கி ஏழை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு போகிற போதும், ‘இவன் ரொம்ப நல்லவன்’ இமேஜ் பாதி படத்திலேயே வந்துவிடுகிறதே பரதன்? இவன் குழந்தையை கொல்ல மாட்டான் என்று ஆடியன்சுக்கு தெரிந்த பின், அவ்வளவு நேரம் அடித்த ஜுரமெல்லாம் இறங்கிவிடுகிறதே?

ரசிகர்கள் கொஞ்சம் இறுகிப் போன நேரத்திலெல்லாம் இடியென இறங்குகிறார் தம்பி ராமய்யா. யப்பா… இது மாதிரி வடிவேலு வந்து கலகலப்பூட்டிய காட்சிகளையெல்லாம் பார்த்து எவ்வளவு நாளாச்சு? மனிதர் கண்களில் நீர் வருமளவுக்கு சிரிக்க வைக்கிறார். டாஸ்மாக்கில் தெம்பாக ஒரு ஃபுல் வாங்கிக் கொண்டு, பின்பு அதே ஃபுல்லை அடக்க விலைக்கும் குறைவாக விற்க அவர் படும் பாடு ஹையோ ஹய்யோ!

ரக்ஷனா மவுரியாவின் அந்த ஒற்றை பாடல் குத்தாட்டம் படத்தின் வேகத்திற்கு வைக்கப்பட்ட டைம்பாம்.

இசை பரத்வாஜ். பின்னணி இசையில் பதற வைக்கிறார் ,அந்த பொறுப்பை மட்டும் ஏற்றுக் கொண்டிருக்கும் மற்றொரு இசையமைப்பாளரான ரத்தீஸ் . பாடல்களில் ஒன்றிரண்டு பரவாயில்லை. லேட்டாக வந்தாலும் பரத்வாஜிடம் ஒரு லேட்டஸ்டும் இல்லை!

ஜெய்யின் ஒளிப்பதிவில் அந்த டோர்ன் அழகு.

அதிதி என்றால் விருந்தினர் என்று அர்த்தமாம். இன்னும் எளிமையாக தலைப்பு வைத்திருக்கலாம். இருந்தாலும், கத்தியோடு வந்த இந்த விருந்தினனின் புத்திக்கு ஒரு சல்யூட்!

-ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. sathish anand says

    Sir. This film is ‘inspired’ (the word used for copying in Bollywood) from the Hollywood movie ‘Butterfly on a wheel’ starring Gerard butler and pierce brosnan as hero and villain

  2. கபிலன் says

    இந்த கதையை மலையாள படம் ஒன்றில் பார்த்தக நினைவு.. அப்படியே இருக்கிறது..

Reply To sathish anand
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
பவர் ஸ்டாரை பார்த்து ரஜினி மிரள வேண்டிய நேரம் போலிருக்கு! அடுக்குமாப்பா இதெல்லாம்?

எல்லா படத்திலும் எப்படி இளையராஜா பாடலை ஆங்காங்கே ஒலிக்க செய்து பிழைப்பு நடத்துகிறார்களோ, அப்படிதான் ஆகிவிட்டார் ரஜினியும். சந்தானம் கூட தான் ஹீரோவாக அறிமுகமான படத்தில் ரஜினி...

Close