ஆன்ட்டனி சொன்னா, அந்த ஆன்ட்டனாவே சொன்ன மாதிரி!
அந்தோணி ராஜ்… நீயா நானா ஆன்ட்டனி என்றால் உங்களுக்கு சட்டென்று புரியும். கோட் சூட் கோபிநாத்தை நவீன விவேகானந்தராக நாட்டுக்கு தெரிய வைத்தவர் இந்த ஆன்ட்டனிதான். லிப் மட்டும்தான் கோபியுடையது. அதை பேச வைத்து நிகழ்ச்சியை ஹிட்டாக்கிய பெருமை முழுக்க ஆன்ட்டனியுடையது என்கிறார்கள் இந்த நிகழ்ச்சிக்கு நெருக்கமான தொடர்பிலிருப்பவர்கள். சங்கமம், நீயா நானா, குற்றம் நடந்தது என்ன? இப்படிக்கு ரோஸ், ரோஜாக்கூட்டம் என்று இவர் விஜய் டிவியில் தயாரித்த எல்லா நிகழ்ச்சிகளும் சூப்பர் ஹிட்.
திருநெல்வேலி பக்கத்திலிருக்கும் ஆரைக்குளத்தில் பிறந்து, இந்தியா முழுக்க நீச்சலடித்த ஆன்ட்டனிக்கு அனுபவங்கள்தான் சொத்து. இப்போதும் முகத்தை காட்ட விரும்புவதில்லை அவர். காரணம், ‘ஒரு டீக்கடைக்கு போனா அங்க என்ன பேசுறாங்கன்னு காது கொடுத்து கேட்டால்தான் உலக நடப்பு புரியும். நான் பிரபலமான ஆளா மாறிட்டேன்னா என்னால் சுதந்திரமாக சுற்ற முடியாது. அனுபவங்களை சேகரிக்க முடியாது’ என்கிறார் ஆன்ட்டனி. அம்மாவின் நகையை அடகு வைத்து தனியாளாக புறப்பட்ட ஆன்ட்டனிக்கு இன்று இந்தியா முழுக்க நண்பர்கள். சொந்த டி.வி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம், 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள்! தயக்கம் இருந்தால் வாழ்க்கை இல்லை என்பதுதான் அவரது தாரகத் தந்திரமாக இருக்கிறது.
ஆன்ட்டனியின் அடுத்த பயணம் சினிமாவை நோக்கிதான். தனது நண்பர்கள் சார்லஸ் இயக்கத்தில் ‘அழகு குட்டி செல்லம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். வேத் ஷங்கர் சுகவனம் என்ற மியூசிக் டைரக்டர் ஒருவரை தவிர மற்ற அனைவரும் ஆன்ட்டனியின் டீமை சேர்ந்தவர்கள்தான். அல்லது ஒரு காலத்தில் இவரிடம் வேலை பார்த்து இன்று சினிமாவுலத்தில் ஏதாவது ஒரு துறையில் பிரபலமாக இருப்பவர்கள்தான். அகில், கருணாஸ், தம்பி ராமய்யா, ஆடுகளம் நரேன், ஜான்விஜய், சுரேஷ், இனிது இனிது நாராயணன், இவர்களுடன் கிருஷ்ணா, சிம்பா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
கதை? குழந்தைகளின் உலகம் பற்றியது. குழந்தையே இல்லை என்று தவிக்கும் ஒரு ஜோடி, ஏழெட்டு குழந்தைகளுடன் அவஸ்தைப்படும் இன்னொரு ஜோடி, திருட்டு தனமாக பிறந்த குழந்தையை எங்கே வீசுவது என்று தவிக்கிற இன்னொரு ஜோடி என்று கதம்பம் போல தொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
எப்படி என்னுடைய நிகழ்ச்சிகள் தரமாக இருக்குமோ, படமும் அப்படிதான் இருக்கும். அதே நேரத்தில் ஜனரஞ்சகமாக இருக்கும் என்றார் ஆன்ட்டனி.
ஆன்ட்டனி சொன்னா, அந்த ஆன்ட்டனாவே சொன்ன மாதிரி. வெல்கம் டூ சினிமா சார்…..