பாகுபலி – விமர்சனம்
மறுபடியும் கண்ணை மூடி யோசித்தால், இப்படியெல்லாம் கூட ஒரு படம் எடுத்துவிட முடியுமா? எஸ்.எஸ்.ராஜமவுலி என்பவர் சாதாரண மனுஷன்தானா? அல்லது ஏதேனும் விசேஷ ‘சிப்’புகளுடன் படைக்கப்பட்ட ஸ்பெஷல் பிறவியா? என்றெல்லாம் தோன்றுகிறது. சத்தியமாக இந்த பாகுபலி, இந்திய சினிமாவில் உருவாக்கப்பட்ட வெறும் பிரமாண்டப் படம் மட்டுமல்ல, நமது கண்ணையும் கருத்தையும் எந்த பக்கமும் திரும்ப விடாத அதிசய லாக்!
கல்கி, சாண்டில்யன், கோவி.மணிசேகரன், விக்ரமன், கவுதம நீலாம்பரன் என்று எத்தனையோ சரித்திரக்கதை மன்னர்கள் தங்கள் எழுத்தில் வடித்த பிரமாண்டத்தையெல்லாம், படித்து வியந்த ஒரு தலைமுறைக்கு பாகுபலி தந்திருக்கும் பிரமிப்பு முற்றிலும் வித்தியாசமானது. ஒற்றை விரலால் மையெடுத்து பொட்டு வைக்கவும் கூட, கோடிகளை இறைத்துத் தள்ளியிருக்கிறார்கள். இந்த பட ஷுட்டிங்கில் சமையல் ஏரியாவில் தட்டு கழுவிய ஆயாவுக்கு கூட இந்த படத்தின் பெருமையில் ஒரு துளி போய் சேரட்டும்!
ஆற்றில் முழுவதும் மூழ்கிய ஒரு தாய், தன் ஒரு கையால் ஒரு கைக்குழந்தையை உயர்த்திப்பிடித்தபடியே இருப்பதுதான் முதல் காட்சி. நல்லவேளையாக அந்த குழந்தையை காப்பாற்றும் மற்றொரு தாய் ரோஹிணி அவனை வளர்க்கிறார். வளர்ந்தவன், அந்த அருவிக்கு மேல் புறத்திலிருக்கும் ஏதோ ஒன்றினால் ஈர்க்கப்பட்டு அங்கு போக முயல்கிறான். சிறு வயதிலிருந்தே நீர் பாறை மீது பலமுறை ஏறி பல முறை சறுக்கி விழுந்தவன், எப்படியோ வாலிப பருவத்தில் மேலே ஏறிவிடுகிறான். போகிற இடத்தில் நடப்பதென்ன? இவனுக்கும் அந்த நாட்டில் நடக்கும் அரசாட்சிக்கும் என்ன சம்பந்தம்? யார் அடிமை? யார் ராஜா? இதெல்லாம்தான் மிரள வைக்கும் பாகுபலி.
நம்ம தமிழுக்கு அதிகம் அறிமுகமில்லாத பிரபாஸ்தான் ஹீரோ. ஆனால் மனுஷன் அப்படியே மனசுக்குள் நிறைந்து கொள்கிறார். எடுத்த எடுப்பிலேயே ஒருவனை பலசாலி என்று காட்டிவிட முடியாதல்லவா? சிறுவயதிலிருந்தே அவனை ஒரு சாகசக்காரனகவே வளர்க்கிறார் இயக்குனர் ராஜமவுலி. ஆற்றின் கரையோரத்திலிருக்கும் சிவலிங்கத்திற்கு குடம் குடமாக நீரை கொண்டு வந்து ஊற்றுவதற்கு அம்மா கஷ்டப்படுகிறாள் என்பதற்காக அந்த லிங்கத்தையே பெயர்த்து தோளில் சுமந்து கொண்டு போய், அருவியின் கீழே பொருத்துகிற இடத்தில் ஒரு மாவீரனின் தோள் பலத்தையும், தாயன்பையும் ஒருசேர விவரித்துவிடுகிறார் ராஜமவுலி.
பிரபாசுக்கும் தமன்னாவுக்குமான காதல் காட்சிகள் அவ்வளவு அழகான கவிதையாய் நீள்கிறது. அதுவும் ஒரு தேவதை போல காற்றில் மிதக்கும் தமன்னா, ஒரு விடுலை போராளி என்கிற சித்தரிப்பு அதிர்ச்சி என்றால், அதற்காக அவர் மெனக்கெட்டு வாள் சுழற்றுவதும், போராடுவதும் நம்ப முடியா பேரழகு. பேரதிர்ச்சி.
அயர்ந்து உறங்கும் போது அவள் விரலுக்கு நிறம் தீட்டுகிற பிரபாஸ், அதற்கப்புறம் அவளே அவனை தேடி வரும்போது மீண்டும் அவளுக்கே தெரியாமல் தோளில் படம் வரைகிற காட்சியெல்லாம் அற்புதம். ஒரு சாதாரண டாட்டூவை கூட, படத்தில் காதலின் சங்கமமாக காட்டி மிரள வைக்கிறார் எஸ்.எஸ்.ராஜமவுலி. தமன்னா பிரபாஸ் ஜோடி இன்னும் பல காலம் மனசை விட்டு அகலாது.
படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் ராணா. அவர் வீரனென்பதை எப்படி நிரூபிப்பது. ஒரு காட்டெருமையை இவருடன் மோத விடுகிறார்கள். கடைசியில் காட்டெருமை சொர்க்கத்துக்கு விசா வாங்கிக் கொள்கிறது. அந்த மல்லுக்கட்டலையும் மோதலையும் கிராபிக்ஸ் உதவியுடன் அவ்வளவு தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார் ராஜமவுலி. இவருக்கும் பிரபாஸ்சுக்குமான பதவி சண்டையை மிகவும் மெல்லிய இழையில் காட்டினாலும், படத்தையே கட்டி இழுப்பது அதன் வலிமைதான்.
நம்ம ஊர் சத்யராஜ் படத்தில் அடிமை. அவரது உடல் வாகும், மொட்டைத்தலையும், வாள் சுழற்றும் அழகும் உலகே வியக்கும் இந்த தெலுங்கு படத்தின் முக்கியமான தீனி என்றால் எல்லார்க்கும் பெருமைதானே? வஞ்ச தந்திரத்தில் குதிக்கும் நாசரும் அசரடிக்கிறார். அவரது சூம்பிப் போன இடது கையும், அவரது சிரிப்பும், மீசையும் இதிகாச பாத்திரமான சகுனியை நினைவுபடுத்துகிறது.
அனுஷ்காவுக்கு வெயிட்டான, அதே நேரத்தில் தமன்னாவின் அழகை மிஞ்சும் பிளாஷ்பேக் ஒன்று இருந்திருக்கலாம். நமது துரத்திருஷ்டம், அது பாகுபலி இரண்டாம் பாகத்தில் சிக்கிக் கொண்டது போலும். இருந்தாலும் தோல் சுருங்கி, பாதம் நடுங்கி சங்கிலியால் பிணைந்து கிடக்கும் அவர், வேண்டிய மட்டும் நடித்திருக்கிறார். வெயிட் பண்றோம் உங்க செகன்ட் பார்ட்டுக்கு.
ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், இசையமைப்பாளர் மரகதமணி, கிராபிக்ஸ் வல்லுனர் வி.ஸ்ரீநிவாஸ்மோகன், ஒலி அமைப்பாளர் பி.எம்.சதீஷ், சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் இன்னும் இந்த படத்திற்காக ஒரு துரும்பை கூட நகர்த்தி வைத்த பெயர் தெரியா உழைப்பாளிகள் அத்தனை பேரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர்களே…
வசனங்களில் அப்படியே எல்லாரையும் மடங்கி விழ வைத்துவிட வேண்டும் என்றெல்லாம் மெனக்கெடாமல், துருத்திக் கொண்டிராத வார்த்தைகளை கொண்டு விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் வசனகர்த்தா மதன் கார்க்கி.
என்ன ஒன்று? படத்தை பொசுக்கென்று முடித்துவிட்டார் எஸ்.எஸ்.ராஜமவுலி. அதற்கு காரணமாக படத்தின் நீளத்தையும் நேரத்தையும், செகண்ட் பார்ட்டையும் காரணமாக சொன்னாலும், இந்த பார்ட்டிலேயே சொல்லவேண்டிய அனுஷ்காவின் இளமை போர்ஷனை பிளாஷ்பேக்கில் கூட துவங்காமல் விட்டதால், விறுவிறுப்பான திகில் கதையில் கடைசி பக்கம் கிழிந்த மாதிரியான உணர்வு.
பாகுபலி இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம். காலம் தாழ்த்தாமல் காட்டிவிடுங்கள் எஸ்.எஸ்.ராஜமவுலி.
-ஆர்.எஸ்.அந்தணன்